Saturday, February 19, 2011

பயணம்



மீண்டும் பிரகாஷ்ராஜ், ராதாமோகன் கூட்டணி ஒரு வித்தியாசமான தமிழ் சினிமா அனுபவத்தை கொடுக்க முனைந்திருக்கிறது.

ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொருவிதமான விதத்தில் கொடுப்பதில் ஆர்வமுள்ள ராதா மோகன், அதில் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். படத்தின் மூன்றாவது காட்சியிலேயே கதையை ஆரம்பித்துவிடுகிறார்.

மெல்ல மெல்ல விமானத்தில் உள்ளவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் பிரச்சினைகளையும், சொல்லி படத்தில் உட்கார வைத்து விடுகிறார்.சென்னையிலிருந்து டெல்லிக்கு போகும் ஸ்டார் ஜெட் விமானம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறது. விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்த முயலும் தீவிரவாதிகளோடு துணை கேப்டன் நடத்திய போராட்டத்தில், தீவிரவாதியின் துப்பாக்கிக் குண்டு வெடித்து விமானத்தில் இன்ஜின் பழுதாகி வேறு வழியில்லாமல் திருப்பதியில் தரையிரங்குகிறது. தீவிரவாதிகளின் தலைவன் யூசுப் கானையும், 100 கோடி ரூபாய் பணமும் கேட்டு தீவிரவாதிகள் மிரட்டுகின்றனர். அரசு அதிகாரிகள் பிரகாஷ்ராஜ் தலைமையில் கூடி மாய்ந்து மாய்ந்து விவாதிக்க, கமாண்டோ படை தலைவரான நாகார்ஜுன் அதிரடியாய் உள்நுழைந்து எப்படி விமானத்தில் உள்ள பயணிகளை காப்பாற்றினார் என்பதை சுறுசுறுவென சொல்லியிருக்கிறார்கள்.

விதவிதமான மனநிலையில் உள்ள விதவிதமான மனிதர்கள் ஒரு விமானத்துக்குள் சிறைப்பட்டிருக்கிறார்கள். காத்திருக்கும் நேரம், நாட்களாக நீள்கிறது. அப்போது அவர்களது ரியாக்ஷன்களும், ஏற்படும் மனமாற்றமும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. முதல் பாதியில் கடத்தல்காரர்களினால் கடத்தப்படும் பிரச்சினையும், பயணிகளின் மனநிலையையும் மெல்ல, தன் போக்கில் விவரிப்பது கொஞ்சமே கொஞ்சம் லெதார்ஜிக்காக இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும்படியான இரண்டாம் பாதியிருப்பதால் இந்த குறையெல்லாம் தெரியவில்லை. எல்லாம் வழக்கப்படி போகிறதே என்று நினைக்கும் போது, இடைவேளையின் போது வரும் ட்விஸ்ட் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அதைத்தொடர்ந்து கதையின் போக்கில் ஏற்படும் மாற்றம் நல்ல திரைக்கதை ஆசிரியரின் உத்தியுடன் சொல்லப்படும் ட்விஸ்ட்கள் சபாஷ் சொல்ல வைக்கின்றன. படத்தில் பாடல்களே இல்லாதது, தீவிரவாதிக்கு குழந்தையிடம் ஏற்படும் அன்பு என்று அங்கங்கே அழகியல் அம்சங்கள்.

டாக்டரான ரிஷி, இளம் பெண் சனாகான், ஏர்ஹோஸ்டஸ் பூனம் கவுர், சர்ச் பாதர் எம்.எஸ்.பாஸ்கர், அரசுத்துறை அதிகாரியான பிரகாஷ்ராஜ், கமாண்டோவான நாகார்ஜுன், ஒரு நடிகரின் தீவிர விசிறியான சாம்ஸ், எக்ஸ் கர்னலான தலைவாசல் விஜய், வாஸ்து சாஸ்திர நிபுணர் மனோபாலா, மிமிக்ரி படவா கோபி, வேலை தேடி இன்டர்வியூக்கு போகும் குமரவேல், சினிமா டைரக்டர் பிரம்மானந்தம் என்று ஒரே நட்சத்திர பட்டாளம். அனைவருமே சிறிது நேரம் வந்தாலும் தம்தம் பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளார்கள்.

குறிப்பாக நாகார்ஜுன் வரும் இரண்டாவது பாதி அருமை. அதிலும் கடைசி இருபது நிமிடங்கள் நல்ல விறுவிறுப்பாக போகிறது. நாகார்ஜுனை பொறுத்தவரை கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்ட நடிப்பாகத் தெரிந்தாலும் பெஸ்ட் ஜாப். பிரகாஷ்ராஜ் கொஞ்ச நேரமே வந்தாலும் நினைவில் நிற்கும் நடிப்பு. படத்தின் தயாரிப்பாளர் என்பதற்காக படம் முழுக்க வர வேண்டும் என்ற சில்லித்தனமான எண்ணம் எதுவும் இல்லாமல் கதை எந்த அளவு அனுமதிக்கிறதோ அந்த அளவு மட்டும் பிரகாஷ்ராஜ் வந்து போவது அழகு. படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களைக்கூட கவனிக்க வைக்கும் அளவு முக்கியத்துவம் கொடுக்கும் வெகு சில இயக்குநர்களில் ராதாமோகனும் ஒருவர். மனித நேயங்களுக்கும், உறவுகளுக்கும் மதிப்புக்கொடுக்கும் அவர் இந்த ஆக்ஷன் படத்தில்கூட தனது பாணியில் மாறாமல் டைரக்ஷன் டச்சை வெளிப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது.

தமிழ் சினிமாவில் பஞ்ச் டயலாக் விடும் சூப்பர் ஸ்டார்களை கிண்டல் செய்திருக்கிறார் பாருங்கள் அது தூள். சாம்ஸூம், பிருதிவிராஜும்(பப்லு) கலக்கல். (டீலா நோ டீலா)ரிஷிக்கும், சனாகானுக்குமான காதல் ரொம்ப கேஷுவல்.

குறையென்று பார்த்தால், தமிழ், தெலுங்கு என்று ரெண்டு மொழிகளில் எடுத்திருப்பதால், நிருபர்களின் வசனங்களில் டப்பிங் சிங்க் ஆகாமல் இருப்பதும், பயணிகளில் ஒரு பாதிரியாரும், இருதய நோய் குழந்தையும், லொட லொட மாமா, மாமியும் கேரக்டர்கள்தான். அது மட்டுமில்லாமல் கடத்தப்பட்ட விமானத்தில் பல பேரின் முகத்தில் தாங்கள் பயணக்கைதியாக இருக்கிறோம் என்ற உணர்வே இல்லை. முக்கியமாய் துணை நடிகர்களிடம். பிருதிவிராஜ்(பப்லு) சாம்ஸ் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பெண்ணை பாருங்கள். எவன் கடத்தினால் எனக்கென்ன சாப்பாட்டைக் கொடுத்தால் போதும் என்று சாப்பிட்டுக் கொண்டிருப்பது. கடத்திய மூன்றாவது நாளில் தாடி வளர்வதும், பின் ஐந்தாவது நாளில் ஷேவ் செய்யப்பட்டது போல முகங்கள்... அசிஸ்டென்ட் டைரக்டர்கள் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

அதே போல் படம் படு சீரியஸாக செல்லும்போது ஆங்காங்கே வரும் காமெடிகள் படத்தின் வேகத்துக்கும், டெம்ப்போவுக்கும் ஸ்பீடு பிரேக்கர் ஆகி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லா மனிதரும் நல்லவரே என்ற இயக்குநரின் கான்செப்ட் பிரமாதம் தான் என்றாலும் இவரது படங்களில் வரும் அனைவரும் நல்லவர்களாகவே வருவதும், தத்துவம் பேசுவதும் களைய வேண்டிய குறைகள்.

ரெட் ஒன் டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட படம். ஒளிப்பதிவாளர் கே.வி.குகன் தன் வேலையை செவ்வனே செய்திருக்கிறார். அதே போல எடிட்டர், பின்னணியிசை அமைத்த பிரவீன்மணி போன்றவர்களின் உழைப்பும் கச்சிதம். பாடல்கள் இல்லை, சண்டைக் காட்சிகள் இல்லை. இருப்பினும் ஒரு பரபரப்பான ஆக்ஷன் படம் பார்த்த திருப்தியைத் 'பயணம்' தருகிறது.

நடிகர்கள்: நாகார்ஜுன், பிரகாஷ்ராஜ், சனாகான், பூனம் கவுர், ரிஷி, எம்.எஸ். பாஸ்கர், பப்லு, சாம்ஸ், 'தலைவாசல்' விஜய், மனோபாலா, பிரம்மானந்தம்
இசை: பிரவீன்மணி
இயக்கம்: ராதா மோகன்
தயாரிப்பு: பிரகாஷ்ராஜ்

0 கருத்துரைகள்:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes