Saturday, February 12, 2011

இளைஞன்



1959-ஆம் காலகட்டத்தில் சென்னைக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நிகழும் கதை. இளைஞன் - பழைய மனிதன்

ஒரு கப்பல் கட்டும் தொழிற்சாலை. வெளி உலகத்தையே பார்க்க முடியாமல், அதற்குள் அடைபட்டு கிடக்கிறார்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள். அவர்களை அடிமைகளாக நடத்துகிறான், கப்பல் தொழிற்சாலையின் அதிபர் தெய்வநாயகத்தின் மகன் ராஜநாயகம். இவனுடைய ஆசைநாயகி சேனாவின் ஆலோசனைப்படி, தொழிலாளர்களுக்கு தினமும் பதினான்கு மணி நேர வேலை கொடுத்து சித்ரவதை செய்கிறான்.

ராஜநாயகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக உதயமாகிறான், தொழிலாளர்களின் ஒருவனான கார்க்கி, அவனுடைய போராட்டத்துக்கு ஆதரவாக நிற்கிறாள், ராஜநாயகத்தின் தங்கை மீரா. இருவரும் சேர்ந்து துண்டு பிரசுரங்கள் மூலம் தொழிலாளர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்துகிறார்கள். குறிப்பிட்ட காலத்துக்குள் கப்பலை கட்டி முடிப்பதற்காக ராஜநாயகமும், சேனாவும் சேர்ந்து ஒரு நாடகம் ஆடுகிறார்கள். அதை கார்க்கியும், மற்ற தொழிலாளர்களும் நம்பி, இரவு-பகலாக வேலை செய்து, கப்பலை கட்டி முடிக்கிறார்கள். அவர்களை ராஜநாயகம் விடுதலை செய்தானா, இல்லையா? என்பது இறுதிக்காட்சி.

கதாநாயகர் கார்க்கியாக பா.விஜய் ஆரம்ப காட்சிகளில் தெரிந்தாலும் அதன்பின் பாத்திரம் அறிந்து பளிச் என்று நடித்திருக்கிறார். தொப்பை தொந்தியெல்லாம் குறைத்து கதாநாயகர்களுக்குரிய லட்சணத்தை பெற கடினமாக உழைத்திருக்கும் பா.விஜய்க்கு காதல் நாயகர் பட்டத்தை வேண்டுமானால் சிபாரிசு பண்ணலாம். ஆனால் புரட்சி நாயகர் பட்டத்திற்காக அவர் போராடியிருப்பது குருவி தலையில் பனங்காய் வைத்த கதையாக தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை!

பா.விஜய்க்கு அம்மாவாக குஷ்புவும், அப்பாவாக நாசர் மற்றும் மாமாவாக டெல்லிகணேஷ் தங்களுடைய நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளனர். வில்லன் கேரக்டரில் சுமன் மற்றும் 'நான் கடவுள்' ராஜேந்திரன் சிறப்பாக நடித்துள்ளனர். சுமன் (ராஜநாயகம்) என்ற கேரக்டராகவே மாறி நடித்துள்ளார். 'படையப்பா' பட நீலாம்பரியே மிஞ்சும் அளவுக்கு நமிதா (சேனா) கேரக்டர் அமைந்துள்ளது. என்ன.. அவர் தமிழை கடித்து சேதப்படுத்துவதைத்தான் தாங்க முடியவில்லை.

பா.விஜய்யின் போராட்டத்துக்கு ஆதரவாக நிற்கும் மீராவாக, மீராஜாஸ்மின். அப்பாவை அண்ணன் கொலை செய்து கடலில் வீசிவிட்டான் என்பதை அறிந்து கதறும் இடத்தில், நெகிழ வைக்கிறார். ரம்யா நம்பீசனுக்கு அதிக வேலையில்லை. கணக்குபிள்ளை ஒய்.ஜி.எம்.மின் மகளாக பா.விஜய்யின் காதலியாக காதல் ஓவியங்கள் தீட்டுவதும், பா.விஜய்யுடன் சேர்ந்து டூயட் பாடுவதற்கு பயன்பட்டு இருக்கிறார். வடிவேலுவின் நகைச்சுவை எடுபடவில்லை. கருணாஸ் கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார்.

கலைஞரின் கதை, திரைக்கதை வசனத்தில் இவ்வளவு சுமாரான படம் இதுவரைக்கும் வந்ததில்லை. படத்துக்காக, பிரமாண்டமான முறையில் ஒரு நிஜ கப்பலையே உருவாக்கியிருப்பதுதான், படத்திலே சிறப்பம்சம். பணத்தை தண்ணியாய் செலவழித்திருக்கிறார் தயாரிப்பாளர் மார்ட்டின். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தொழிற்சாலையையும், தொழிலாளர்களையும் படம்பிடித்த விதத்தில், ஹாலிவுட் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறாரே தவிர, வேறொன்றும் புதுசாக காட்டவில்லை படத்தில்.

50 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில் நடக்கும் கதை. ஆனால் பாடல்கள் நிகழ் காலத்தில்(அதுவும் வெளிநாட்டில்). நம்மை மடையர்கள் என்று எண்ணி விட்டார்களோ என்னவோ..? படத்திற்கு ஏற்றவாறு பாடல்கள் ஒன்றும் பொருந்தவில்லை. இருந்தாலும் பாடல்கள் இல்லாமல் படம் ஓடாதே. படத்தில் வரும் சண்டை காட்சியில் அனைத்தும் பிரமாதமாக உள்ளது. மொத்தத்தில் "இந்த இளைஞனைப் போல் ஒரு இளைஞனை ஈழத்தில் இழந்தது தான் மிச்சம்" அது நிஜம் இது நிழல்.

நடிகர்கள் - பா.விஜய், மீரா ஜாஸ்மின், ரம்யா நம்பீசன், குஷ்பு, சுமன், நமிதா, நாசர், வடிவேலு, டெல்லி கணேஷ், கருணாஸ்
இசை - வித்யாசாகர்
இயக்கம் - சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்பு - எஸ்.மார்ட்டின்

0 கருத்துரைகள்:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes