– சுகந்தன்
*மஹிந்தாவை போர்கால குற்றச்சாட்டில் சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கே தலைவர் முல்லிவாய்காலில் சரண் அடைந்தார்!
*குறைபாடுகளை சரிசெய்வதற்காக தற்காலிகமாக தமிழ் செல்வனின் சிலை அகற்றப்பட்டுள்ளது!
தமிழ் புத்திஜீவிகளே, ஆய்வாளர்களே, கல்விமான்களே, அனுதாபிகளே தயவு செய்து எஞ்சியிருக்கும் புலிளை தொந்தரவு செய்ய முற்படாதீர்கள். அப்படி செய்ய முட்படுவார்களாயின் உங்கள் நேரமும், சக்தியும் வீணாகுமே தவிர அதில் பயன் ஏதும் உங்களுக்கோ, தமிழ் சமூகத்திற்கோ அல்லது புலிகளுக்கோ ஏற்படபோவதில்லை. ஏனெனில் அவர்கள் உலகில் வாழும் ஏனைய மக்களை போன்ற தொரு தரத்தினை எட்டுவதற்கு அடம் பிடிப்பவர்கள். எட்டாம் வகுப்பு படித்தவரினால் புகட்டப் பட்டமையினால், அதற்கு அப்பால் தாண்டுவதற்கு அடம்பிடிப்பவர்கள்.
யாராவது கூறுங்கள், கொலைகளை நடத்தியதினை தவிர புலிகள் இதுவரையில் உருப்படியான எதனையும் தமிழ் இனத்திற்கு செய்திருக்கின்றார்களா? ஒரு மனிதன் தீர்கதரிசனமாக கூறுவதினை இவர்கள் தீண்டுவதில்லை, ஒரு சம்பவம் குறித்த சாத பாதகங்களை ஆராய்ந்து, சரியான முறை இதுவாகவே இருந்திருக்க வேண்டும் என்று கூறினால்! அது அவர்களுக்கு விளங்குவதில்லை. இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த லண்டனிற்கு சென்றது , தானே யுத்தத்தினை வென்றதாக தம்பட்டம் அடிப்பதற்காகவே என்பது எமக்கு விளங்கும், ஆனால் புலிகள் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தியமை இலங்கையில் இருக்கின்ற தமிழர்களுக்கு எவ்வளவு பாதகத்தினை ஏற்படுத்தும் என்பதினை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்து இருந்தார், லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் ரிபிசி வானொலிக்கு வளங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியிருந்தார்.
அவர் கூறியது போன்று, லண்டன் ஆர்பாட்டத்தின் வெளிப்பாடுதான் தமிழில் மொழியான தேசிய கீதத்தினை அவர்கள் இரத்து செய்ய முனைந்ததாக இருக்கலாம்.
புலம் பெயர்ந்த காகிதப்புலிகளே உங்களினால் சிந்திக்க முடியாது விட்டாலும், சிந்திப்பவர்களின் கருத்துக்களையாவது கவனியுங்கள். மஹிந்தாவை ஒக்ஸ்வோட் ஒன்றியத்தில் பேசவிடமால் தடுத்ததினை காட்டிலும், அவரை பேச அனுமதித்து, லண்டனில் வசிக்கும் ஈழத்து கல்விமான்கள், பல்கலைக்கழக மாணவர்களை வைத்து கேள்விகளை கேட்க வைத்திருப்பீர்களாயின் அது ஒரு ஆவனமாக்கப்பட்டு இருக்கும்.இது குறித்து எனது நண்பர் ஒருவருடன் நான் கதைத்த பொழுது, அவர் என்னை பார்த்து சிரித்துவிட்டு கூறினார். புலிகள் அனுப்பிவைக்கின்ற மாணவர்கள் சப்பாத்தை கழட்டி எறிந்து ஈழத்து மாணவர்களின் மரியாதையினை கெடுத்துவிட்டு வந்திருப்பார்களே தவிர கேள்வி கேட்டு இருக்க மாட்டார்கள் என்றார். பல்கலைக்கழக அரங்குகளில் பேசுபவர்களின் பேச்சுக்களை கேட்க வருபவர்கள் கல்விமான்களாகவும், சரித்திர ஆய்வு திறனாளர்களாவும் இருப்பார்கள். மஹிந்தவை பேசவைத்து அவர்களை கேள்வி கேட்க வைத்திருந்தால், இலங்கை அரச தலைவர்கள் எவ்வகையான ஆக்கிரமிப்பு எண்ணமும், சிறுபான்மையினங்களுக்கு எவ்வளவு மதிப்பு கொடுக்கின்றார்கள் என்பதும் உலகிற்கு தெரிய வாய்ப்பாக அமைந்திருக்கும். பி.பி.சி 4 பத்திரிகையாளர்கள் உட்பட பலரின் கேள்விகளுக்கு அவரை மஹிந்தாவை பதில் கூற வைத்திருக்க வேண்டும்.
இதனைத்தான் ரட்ணஜீவன் கூல் அவர்கள் மிகவும் திடமாக கூறினார், “பல்கலைக்கழங்கள் என்பது கற்றலுக்கும், சுதந்திரமான சிந்தனைகளை பகிர்ந்துகொள்வதற்கான இடங்களாகும் “ (Universities are places of learning and independent thinking )என்றார். ஜனாதிபதி அங்கு பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும், அப்பொழுது வருகை தந்திருந்தவர்கள் கேள்விகளை கேட்க முடிந்திருக்கும். (He should have been allowed to address the forum and the audience could have come out with questions). புலிகளின் ஊடகங்கள் இதற்கு உடனடியாக பதிலும் கூறிவிட்டார்கள், அவர் ஒரு துரோகி, உபதலைவர் பதவிக்காக ஒத்துப் பாடுகின்றார் என்பதாகும்.
ஒரு ஆரோக்கியமான சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளக் கூடிய எந்த செயல்களையும் செய்ய தெரியாதவர்களாகவே புலிகள் இருக்கின்றார்கள். மாற்றி கூறுவதானால் இவர்களின் செயற்பாடுகள் எதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலேயே இருக்கின்றது. இவர்கள் இப்படியாக இருப்பதினால் இவர்களை வைத்து இன்னமும் சில ஊடகங்கள் பிழைப்பு நடத்தி வருகின்றன. இவர்கள் ஊடகம் நடத்துவது தமது பிழைப்பிற்கும், பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள சகோதரரின் விளம்பரத்திற்கும் ஆகவே இருக்கின்றது.
கிளிநொச்சியில் கூரையில் இல்லாத பாடசாலையில், தரையில் பட்டினியோடு இருந்தும் படிக்கும் மாணவர்களுக்கு கம்பியூட்டர் கொடுத்ததினை கொட்டை எழுத்தில் போட்டு பிரச்சாரம் செய்கின்றார்கள். எம்.பி ஆக இருக்கும் சிறிதரனோ தமிழ் கட்சிகள் இணைவதில் தனது உடன்பாடு இல்லை என்பதுடன், அதனை தன்னால் ஏற்றுகொள்ள முடியாது என்கின்றார். அத்துடன் முள்ளிவாய்க்கால் புலிகளின் முடிவல்ல அது ஆரம்பம் என்றும் கூறுகின்றார். புதியதாக நாடாளுமன்றம் சென்றவர் தான் சொத்து சேர்பதற்குள், இந்த கட்சிகள் ஒன்று பட்டு தன்னுடைய பிழைப்பையும், ஐரோப்பாவில் இருக்கும் சகோதரர்களின் பிழைப்பையும் கெடுத்துவிடுவார்களோ என்ற பீதியில், என்ன பேசுவது என்று புரியாமல் சிறீதரன் புலம்புகின்றார்.
மஹிந்தாவை போர்கால குற்றச் சாட்டில் சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கே தலைவர் முள்ளிவாய்காலில் சரண் அடைந்தார்!
புலிகளின் ஊடகங்களில் அண்மையில் வந்த இரண்டு செய்திகள் சிரிப்பினை ஏற்படுத்தி இருந்தது. அத்துடன் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்கள் கடைஞ்சு எடுத்த முட்டாள் என்ற தொனியில் அந்த இரண்டு செய்திகள் இருந்தன. ஒன்று முள்ளிவாய்காலில் பிரபாகரன் சரணடைந்தமை தொடர்பாகவும், மற்றொன்று பிரான்ஸ் நாட்டில் தமிழ்செல்வனின் சிலை அகற்றப்பட்டமை தொடர்பான செய்திகள் ஆகும்.
முள்ளிவாய்க்காலில் புலிகளில் தலைவர் பிரபாகரன் தீர்க்கதரிசமான முடிவினை எடுத்து இருந்தார் என்றும், அது என்னவெனில் அரச தலைவர்களை போர்கால குற்ற செயலில் மாட்ட வைத்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டணை பெற்றுக் கொடுப்பதற்காவே அவர் சைனைற் குப்பியை கழட்டி எறிந்துவிட்டு சரண அடைந்தார் என்று புலிகளின் இணையதளம் ஒன்றில் ஒருவர் கட்டுரை வரைந்திருந்தார். இதனை வாசித்தால் யார்தான் சிரிக்காமல் இருப்பார்கள்?
தலைவரின் தீர்க்க தரிசனம் அப்படியாக இருந்தால் அது மெய்சிலிர்க்க கூடியதாகவே இருக்கின்றது. வட கிழக்கு மக்களை வாக்களிக்க விடாது தடுத்து, மஹிந்தாவை ஜனாதிபதியாக்கி, மாவிலாற்றில் சண்டையை ஆரம்பித்து, மன்னாரை திறந்து விட்டு, முகமாலையில் இருந்து பின்வாங்கி, கிளிநொச்சியை பிடிப்பது என்பது மஹிந்தவின் பகற்கனவு என்று கூறி, மஹிந்தாவை ஆவேசப்படுத்தி படையினரை வேகமாக முன்னேறவைத்து, பின்னர் கிளிநொச்சியில் இருந்தும் வெளியேறி, முன்னேறும் படையினருக்கு சிரமம் இருக்க கூடாது என்பதற்காக, மக்களை அழைத்துக் கொண்டு முல்லைதீவு வரை சென்று, பொதுமக்கள் அதிகளவில் கொல்லப்பட்டால் மஹிந்தாவிற்கு கடும் தண்டணை கிடைக்க வைக்கலாம் என்பதற்காக மக்களை பாதுகாப்பு கேடயங்களாக்கி, மூத்த தலைவர்கள், குடும்பம் எல்லோரையும் முள்ளிவாய்காலுக்கு அழைத்துசென்று, சரண் அடைபவர்களை மொக்கு சிங்களவன் கொல்லாது விட்டால்! திட்டமே பிழைத்து விடும் என்பதற்காக, முதலில் நடேசனையும், புலித்தேவனையும் அனுப்பி வைத்து ஊர்ஜிதப் படுத்திவிட்டு, இறுதியாக தலைவர் சரண் அடைந்தது என்பது, தலைவரின் மெச்சத்தக்க தீர்க்க தரிசனம் என்பதினை மறுக்க முடியாது.
புலிகள் மாவிலாற்றை இழந்த போது தலைவருக்கு மதியுரைஞராக இருந்த பாலசிங்கம் அவர்கள், புலிகளின் தலைவரை ஓமந்தைக்கு ஓடி சென்று சரண் அடைய சொல்லி இருப்பார் போலும். (மாவிலாற்று சண்டை ஆரம்பம் ஜூலை .2006, பாலசிங்கம் மரணம் டிசம்பர் 14,2006)
மேற்கூறிய இந்த இரண்டு செய்திகளையும் படித்த பின்னர் இவர்கள் ஏன் இப்பொழுதும் இப்படியாக எழுதுகின்றார்கள் என்று நினைக்கும் போது பதில் எழுதாமல் இருக்க முடியவில்லை. நாமும் பேசாது இருந்துவிட்டால்! முழு ஈழ தமிழினத்தையும் தாம் முட்டாள்கள் ஆக்கி விட்டாதாக நினைதுகொள்வார்கள். அதற்கு இடம் கொடுக்க கூடாது என்பதற்காகவே இப்படி எழுதவேண்டியுள்ளது. இப்படியாக எழுதினாலேயும் இவர்கள் திருந்துவார்களோ என்ற நட்பாசை இன்னமும் சிறிதளவில் இருக்கின்றது.
இவர்கள் இப்படியென்றால் போதாதற்கு சீமானும் வெளியில் வந்து விட்டார். சொல்லி அடிப்பேன் என்று கதை எழுதப்போகின்றாராம். இது சினிமாவிற்கு அல்ல, ஜூனிய விகடனுக்கு தொடர் கட்டுரை எழுதப் போகின்றார்.
குறைபாடுகளை சரிசெய்வதற்காக தற்காலிகமாக தமிழ் செல்வனின் சிலை அகற்றப்பட்டுள்ளது!
தமிழ் செல்வனின் சிலை பிரான்ஸ் நாட்டில் உள்ள லாகூர்னவ் (La Courneuve) நகர் பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக புலிகளின் பெயரை கூறி பிழைப்பு நடத்தும் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. முதலில் தமிழ் செல்வனின் சிலையினை தனி ஒருவருக்கு சொந்தமான காணிக்குள் வைத்து விட்டு பிரான்ஸ் நாட்டில் தமிழ் செல்வனுக்கு சிலை என்று பிதற்றியது தேவையற்றது. அடுத்தது அந்த சிலை அகற்றப்பட்டமைக்காக அவர்கள் கூறிய காரனம். இலங்கை நாட்டின் வெளிநாட்டு அமைச்சகமே இந்த செய்தியினை முதலில் வெளியிட்டு இருந்தது. லாகூர்ணவ் நகர மேயர்,மற்றும் பிரான்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றின் கவனத்திற்கு தாம் கொண்டுவந்ததினை அடுத்து தமிழ் செல்வனின் சிலை அகற்றப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சகம் அறிவித்திருந்தது. இதனை அடுத்து புலிகளின் பெயரை வைத்து பிழைப்பு நடத்தும் ஊடகங்கள் சில, தமிழ் செல்வனின் சிலை பிரான்ஸ் நாட்டு அதிகார தரப்பினால் அகற்றப்படவில்லை என்றும், சிலைகளில் இருந்த சில குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகவே அந்த சிலை எடுத்து செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளன.
கேட்பவன் கேணையனாக இருந்தால், ஏய்ப்பவன் எலி ஏறோப்பிளேன் ஓட்டுகிறது என்பானாம். அதே போன்றதொரு கதையாகவே இதுவும் இருக்கின்றது. நல்ல வேளை கடும் பனி மற்றும் குளிரால் சிலையை பாதுகாப்பதற்காக தூக்கி சென்றோம் என்று எழுதவில்லை. சிலையை ஏன் குறைபாடுகளுடன் நிறுவினீர்கள்? உங்களுக்கு புத்தி சரியாக வேலை செய்யாது என்பது எங்களுக்கு தெரியும், அப்படித்தான் குறைபாட்டுடன் நிறுவி இருந்தாலும், அதில் வைத்தே அதனை திருத்தி இருக்கலாமே. ஏன் தூக்கி சென்றீர்கள்.
நீங்கள் குறைப்பாடுகளை சரிசெய்வதற்காக தூக்கி சென்றிருந்தால்! எப்பொழுது சிலை குறைபாடுகளை முடிவடைந்து, மீண்டு நிறுவீர்கள் என்பதினை கோடை காலம் வரையில் பொறுத்து இருந்து பார்ப்போம். தைப்பொங்கலுக்கு தலைவர் தமிழ் ஈழம் எழுத்து தருவார் என்று முப்பது வருடம் முள்ளிவாய்க்கால் மட்டும் காத்திருந்த நாம், மூன்று மாதங்கள் பொறுக்க மாட்டோமா?



9:02 PM
Jana Master
0 கருத்துரைகள்:
Post a Comment