Saturday, July 31, 2010

தமிழ் தேசியக்கூட்டமைப்பும் அதிகரித்துவரும் குற்றச்சாட்டுகளும்

கடந்தவாரம் வீரகேசரி நாளிதழில் அரசியல் கட்டுரை ஒன்று வாசிக்கக்கிடைத்தது. சகல தமிழ் அரசியல் தலைவர்களினுடைய, தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பான தற்போதைய நிலைப்பாட்டினையும் குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நிலையினையும் அக்கட்டுரை அலசியுள்ளது. அக்கட்டுரையினை ஆரம்பிக்கும்போது அவ்வெழுத்தாளர் "இது தவறான கருத்தல்ல, அவர்களை வழிப்படுத்துவதே நோக்கம்" (சுருக்கமாக) என குறிப்பிட்டுள்ளார். அவர் இவ்வாறு கூறியமைக்கு காரணமும் இருக்கத்தான் செய்கிறது. தமிழ் தேசியக்கூட்டமைப்பினரின் தவறான நடத்தைகளை இனம்கண்டாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அநேகமான தமிழர்களுக்கு இல்லை என்பதே உண்மை. அந்த காரணத்தினால்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். உண்மையிலேயே அவர் கூறியிருந்தது போல அகதிகள் விடயத்திலும் அவர்களது இழந்த சொத்துக்கள் விடயத்திலும் எந்தவொரு விபரமும் தெளிவும் கூட்டமைப்பினரிடம் இல்லை என்பதே உண்மை. அந்த விபரங்களை திரட்டுவதில் கூட அவர்கள் மும்முரமாக ஈடுபடவில்லை என்பது வேதனைக்குரிய விடயம். இது மிகவும் அவசியமானதொன்று. ஏனைய தமிழ் அரசியல் தலைவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் முயற்சிகளில் ஒரு சிறுபகுதியளவு முயற்சியை கூட தமிழ்தேசியக்கூட்டமைப்பு எடுக்கவில்லை என்பதை சமகால அரசியல் அறிக்கைகளை வைத்து தெரிந்துகொள்ளலாம். எங்கோ ஒரு மூலையில் பார்த்த, கேட்ட செய்திகளை வைத்துக்கொண்டு வெறும் அறிக்கைகள் மட்டும் அவ்வப்போது வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அதேபோன்று அரசியல் தீர்வு விடயத்திலும் உறுதியான நிலையின்றி திக்கி திணறிக்கொண்டிருக்கின்றார்கள் என்றே சொல்லாம். வடக்கு, கிழக்கு இணைப்பு மிக முக்கியமானதென்றும் அதனூடாகத்தான் தீர்வை எட்டமுடியும் என்றும் கருத்துக்களை அள்ளிவீசிக்கொண்டிருந்தவர்கள், இப்பொழுது வடமாகாணசபைத்தேர்தலிலும் அடுத்து கிழக்கு மாகாண சபைத்தேர்தலிலும் போட்டியிட முனைப்பு கொண்டிருப்பதை அவதானிக்கமுடிகின்றது. அப்படியானால் இவர்கள் ஆரம்பத்தில் கூறிய வடக்கு, கிழக்கு இணைப்பு கதை என்னவானது? இவர்களது நோக்கம்தான் என்னவாக இருக்கின்றது. இந்த விடயம் சிலருக்கு புரியாத புதிராக இருக்கலாம், சிலருக்கு இராஜதந்திர நகர்வாக தென்படலாம். ஆனால் இதில் எதுவுமில்லை. அரசியலில் தொடர்ந்து நிலைகொண்டிருக்க எவ்வழி உதவுமோ அவ்வழியே சிறந்தவழி என்ற போக்கு என்று சொல்வதுதான் பொருந்தும். இடம்யெர்ந்து அவல வாழ்க்கை வாழும் மக்கள் சார்பாகவும் தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் சகல ஈழத்தமிழர்கள் சார்பாகவும் கோரிக்கை ஒன்றை தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கு வேண்டுமென்றால் முன்வைக்கலாம். "நீங்கள் எப்படிப்பட்ட அரசியல் வேண்டுமென்றாலும் செய்யுங்கள், உங்களை நம்பி அனுப்பிய மக்களின் துயர் துடைக்க உருப்படியான வேலைத்திட்டங்களை குறைந்தபட்சமாவது முன்னெடுங்கள்"

Friday, July 30, 2010

என்னவளும் நானும்...

அன்று வீணையும் விரல்களும் இருந்தன

என் நாத ஒலியை கேட்பதற்கு

உன் செவிகள் சாயவில்லை


இன்று, உன் செவிகள் சாய்கின்றன

விரல்களும் இருக்கின்றன இசைப்பதற்கு

வீணைத்தந்திகள்தான் இல்லை

Wednesday, July 28, 2010

எங்கேயோ படித்த ஞாபகம்

இந்த உலகத்தில் உனக்கென்று
யாருமே இல்லாமல் இருக்கலாம்
ஆனால் யாரோ ஒருவருக்கு
நீயே உலகமாய் இருப்பாய்
அந்த நபரை நீ இழந்துவிடாதே .

Tuesday, July 27, 2010

என்னத்தை சொல்ல....

இது தமிழர் பிரதெசமெங்கும் கோயில்களில் திருவிழாக்கள் இடம்பெறும் காலம்.குறிப்பிட்ட ஒரு ஆலயத்தின் திருவிழா ஆரம்பமாகிறது என்றால் அந்த கிராமத்தில் அல்லது குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் அசைவ உணவுகளை மக்கள் முற்றாக தவிர்த்துக்கொள்ளும் வழக்கம் காணப்படுகிறது. இது சட்டரீதியான தடை இல்லாவிட்டாலும் மரபு ரீதியாக வந்த வழிமுறை என்பது எல்லோரும் அறிந்த விடயம்.


அதனையும் மீறி அசைவ உணவுகளை அந்த காலப்பகுதியில் உண்பதால் கடவுள் குற்றம்
என்பதும் அவ்வாறு நடந்துகொள்பவர்களை ஒரு மாதிரியான கண்ணோட்டத்தில் பார்ப்பதுவும்
கண்கூடாக காணக்கூடியவை. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இந்நிலமையில் பெரிதளவு
மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அந்த எல்லையை விட்டு வெளியே சென்றால் அசைவ உணவ கிடைத்தால்...... பிறகு என்னவென்ற உங்களுக்கு சொல்லத் தேவையில்லை.புரிந்திருக்கும்.

இளைஞர்களை மட்டும் கூறவில்லை வெளியிடத்திற்கு சென்று மாமிச உணவுகளை
யாருக்கும் தெரியாமல் வாங்குகிறோம் என்று நினைத்துக்கொண்டு வாசனை வெளியில் வராமல் சமைப்பவர்களும் உண்டு. இது கடவுள்மேல் சத்தியமான உண்மை. என் அனுபவத்தில் திருவிழா நடந்தகொண்டிருந்த சமயத்தில் என் நண்பனொருவனுடன் உரையாடியபோது....

"நேற்று நல்ல அடிடா"

நான் " என்னத்தடா சொல்ற"

" இல்ல நல்ல சாப்பாடு"

எனக்கு புரிந்துவிட்டது.

"கடையில சாப்பிட்டதா?"

"இல்ல ரெண்ட துண்டு சிக்கன் பீஸ் வாங்கி வந்தன் பகல் ஒண்டு இரவு ஒண்டு, தரமா இருந்துது"

நோயாளி மாத்திரை போடுவது மாதிரி சொல்லிமுடித்தான்.

எனக்கு எதுவும் சொல்லத்தோன்றவில்லை. இது சரியா? தவறா? இப்பொழுதும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். முதலில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும்
கட்டுப்பாடோடு இருக்க பழக வேண்டும். நான் இதை மட்டும் கூறவில்லை. அது எந்த விடயமாக இருந்தாலும் சரி...
அதற்கு இதுபோன்ற "அசைவ உணவு தவிர்ப்பு" கட்டுப்பாடோடிருக்க பழகிக்கொள்வதற்கான ஒரு வழியாக இருக்கும். கடவுள் , சமயம் , ஒழுக்கம் எல்லாம் இன்னொரு புறமிருக்கும். இருந்தாலும் இந்த சிக்கலுக்கு என்னால் சரியான தீர்வ எட்டமுடியவில்லை. அதனால் உங்களிடமே இதனை விட்டுவிடுகிறேன். கொஞ்சம் குழப்பமில்லாமல் தெளிவான பதில் ஒன்றை தாருங்கள் பார்ப்போம்.

Sunday, July 25, 2010

தமிழ்ச்செம்மொழி மாநாடும் அரசியல் ஆடுகளமும்

இந்திய மத்திய அரசினால் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ்மொழியை கெளரவிக்கும் முகமாக தமிழ்நாட்டிலே முதல்வர் கருணாநிதி தலைமையிலே தமிழ்ச்செம்மொழி மாநாடு மிகவும் சிறப்பாக நடந்துமுடிந்திருந்தது.

அதன் பிற்பாடு அச்செம்மொழி மாநாடு பல அரசியல் தந்திரங்களை மையமாக கொண்டு நடந்ததாக குற்றச்சாட்டுக்கள் தோன்ற ஆரம்பித்தன. அதேபோலவே இலங்கையில் கிழக்குமாகாணத்தில் கிழக்குமாகாணசபை கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் சுவாமி விபுலானந்தரின் சிரார்த்த தினத்தில் காரைதீவிலே தமிழ்ச்செம்மொழி மாநாடு சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. 

சுவாமி விபுலானந்தர் கல்விக்கும் தமிழுக்கும் ஆற்றிய சேவையினை மெச்சும் முகமாகவே அவரது சிரார்த்த தினத்தில் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுவும் இப்பொழுது அரசியல் பிரச்சினைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட கிழக்குமாகாண முதலமைச்சர் தகுதியற்றவர் என்றும் ஒரு குற்றச்சாடடை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியசேன அவர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது. அக்குற்றசாட்டுக்கு பதிலளித்திருந்த முதலமைச்சரின் ஊடகப்பிரிவு இது ஒரு அரசியல் சாரா நிகழ்வென்றும் புத்திஜீவிகளுக்கும் , கல்விமான்களுக்கும் , தமிழ் ஆர்வலர்களுக்குமே முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும் கிழக்கு மாகாணத்தின் நிருவாகத்திற்கு பொறுப்பாகவுள்ள முதலமைச்சர் அவர்களின் பிரசன்னமானது மிகவும் அவசியமானதொன்றென்றும் மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளனர்.


எது எப்படியிருப்பினும் தமிழ்நாட்டிலே தமிழ்ச்செம்மொழி மாநாடு நடந்து முடிந்த கையோடு இலங்கையில் நடந்ததையிட்டு நாம் பெருமையடையவேண்டும். யார் பெரியவர் என்ற அரசியல் போட்டிகளை விட்டு தமிழுக்காகவே வாழ்கிறோம் உரிமைக்காகவே குரல் கொடுக்கிறோம் என்ற கோஷங்களோடு மட்டும் நின்றுவிடாமல் தாய்மொழியை பாதுகாத்து வளர்க்கவேண்டிய கடப்பாடு நமக்கு இருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதற்கு இதுபோன்ற மாநாடுகளும் , விழாக்களும் இன்றியமையாதது. நாம் செய்யாவிட்டாலும் செய்பவர்களை ஊக்குவிப்பதே சிறப்பானதொரு அரசியலாக இருக்கும். ஆகவே இதனை அரசியல் ஆடுகளமாக்குவது பொருத்தமற்றதாகவே அமையும்.

Saturday, July 24, 2010

எல்லோரும் காதலிப்போம்..

இந்த பதிவினை வாசிக்கும் முன்னர் நீங்கள் டென்சனாக இருந்தால் கொஞ்சம் மனதை ரி-லாக்ஸ் படுத்திக்கொள்ளுங்கள். அமைதியான சூழலில் இருந்து வாசியுங்கள் காதலின் சுகத்தை உணர்வீர்கள். தாயின் மடியில் சாய்ந்து தூங்கும்போது ஏற்படும் சுகத்தை எல்லோரும் அனுபவித்திருக்கின்றோம். அதேபோன்ற இதமான உணர்வை ஊட்டுவதுதான் காதல். நான் காதல் என்று விளிப்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பை மட்டுமல்ல.. புரிந்துணர்வு கொண்ட இரு உள்ளங்களுக்கிடையேயான தொடர்பும் காதல்தான். அத ஒரு ஆணும் ஆணுமாக இருக்கட்டும் , அல்லது பெண்ணும் பெண்ணுமாக இருக்கட்டும் , தந்தையும் மகனுமாக இருக்கட்டும் ஒரு சிறுவனும் பாட்டியுமாக இருக்கட்டும், ஒருவருக்கொருவர் சரியாக புரிந்துகொண்டு பழகும்போது ஒருவாகின்ற நட்பு காதலின் சுகந்தத்தை உணர்த்தும்.

 நீங்கள் அதிக பிரியம் வைத்திருக்கின்றீர்களோ அவரைப்பற்றிய நினைவுகளை எங்கோவாவது பார்க்கும்போதோ, யாராவது பேசும்போதோ உங்களுக்குள் ஒரு மாற்றம் , பரவசம் தோன்றும் முகத்தில் மலர்ச்சி ஏற்படும் அப்படி இல்லை என்று உங்களால் மறுக்கமுடியுமா? நிச்சயமாக முடியாது அதுதான் காதல்.

 ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது காதல். அதிலும் குறிப்பாக இளமைப்பருவத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படுகின்ற ஈர்ப்புதான் மிகவும் சுகமானதாக இருக்கும். இது நான் அனுபவித்ததன்படி கூறுகின்றேன். உங்களில் சிலருக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். என்னுடைய அனுபவத்தில் நான் அவளை நினைத்தால் போதும் எப்படிப்பட்ட நிலையில் மனம் இருந்தாலும் சொர்க்கத்தை தொட்டுவிடும். அவளுடன் பேசும்போதோ தூரத்தில் இருந்து ரசிக்கும்போதோ, ஆஹா.. வார்த்தைகளால் அளவிடமுடியாது. எத்தனை சுகம்.

அவள் இல்லை என்றால் வாழமுடியாது என்று  மனதில் தோன்றும். அவளை அடைவதற்கு என்ன இலட்சியத்தை நான் நிறைவேற்ற வேண்டுமோ அதை நிறைவேற்ற ஒரு துடிப்பும் , உற்சாகமும் தோன்றும். காதலின் சக்தியை பாருங்கள் எத்தனை அற்புதம்.

நான் அவளை பார்க்கும்போது ஏற்படும் சுகத்தை விட அவள் என்னை மறைந்திருந்து பார்த்துவிட்டோ , எங்கெல்லாமோ சுற்றி தெடிவிட்டோ வந்து " உன்னைத்தாண்டா தேடின எங்க போன " என்று சிணுங்கும்போது எப்படியிருக்கும் தெரியுமா? என்ன தவம் செய்தேன் இந்த காதலை அனுபவிப்பதற்கு.பெரும்பாலும் இந்த இளமைக்காதலை எல்லோரும் உணர்ந்திருப்பீர்கள் என்பது நிச்சயம். காதல் மயக்கத்தில் எங்கேயா சென்றுவிட்டேன் பார்த்தீர்களா.. விடயத்திற்கு வருகிறேன்..

நாமும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோம். பிரச்சினைகளை மனம்திறந்து பேசுவோம்., எழுதுவோம், புரிந்துகாள்வோம். எல்லோரும் காதலர்களாவோம்.

காதல் பயணம் தொடரும்....

Thursday, July 22, 2010

நான் ரெடி நீங்க ரெடியா?

இன்றுமுதல் நானும் உங்களோடு வலைப்பதிவுலகில் வலம்வர இருக்கின்றேன். உங்கள் ஆதரவு இருக்கும்தானே? பல்வேறு பட்ட அம்சங்களோடு உங்களை சந்திக்கின்றேன் மற்றுமோர் பதிவில்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes