Saturday, February 12, 2011

இலங்கை முஸ்லிம் அரசியல் பற்றிய கதையாடல்.

அஹமட் ஷா

இலங்கையின் மூன்றாவது இனமாக (அதுவும் மொழியின்றி மத அடிப்படையில்) இருப்பது முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவே இருந்தால்: அது அப்படியொன்றும் அஞ்சத்தக்கதல்ல. இஸ்லாமிய அரசியலை விட்டு விட்டுப் பாதி ஜனனாயகமும் அடுத்தபாதி சோசலிஸமுமாய்ப் பேசுகிற உலக அரசியலில்; முதலாவது பெரும்பான்மை இனத்தின் செல்லப் பிள்ளை மூன்றாவது இனமென்றே சொல்லப்பட்டு வந்தது. ஆனால் நிலச் சுவாந்திரரான விவசாயக் கல்லுhரியில் பட்டம் பெற்ற டி. எஸ். சேனநாயக்காவிவின் தலைமையிலான சிங்கள காணி உரிமையாளர் சங்க முன்னேற்பாட்டில் முதன் முதலில் இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராகவே இனக்கலவரம் நகர்ப்புறத்தில் எழுந்தது. இதன் பின்னர் சிறிமாவோவின் ஆட்சிக் காலத்தில் புத்தளம் பள்ளிவாயிலில் எட்டுபேரைக்கொன்று அவர் பங்குக்கு பாகம் பிரித்தார். அதாவது நீங்கள் தமிழரல்ல முஸ்லிம்கள் என ஆட்சியாளர்கள் இரத்தத்தால் எழுதிச்சொன்னார்கள்.

மேலும் அவ்வப்போது இருநபர் பிரச்சினை சிங்கள- முஸ்லிம்பேதம் பூசப்பட்டதாக புகைந்து ஒரு கிழமைக்குள் அரசியல்வாதி அரச ஆயுதப்படை எல்லாமாகச் சேர்ந்து நிலமை சுமூகமாகிவிடும் .முஸ்லிம்களின் வியாபாரத்தின் மீதான நாட்டமும் புத்தளம் படுகொலையும் முஸ்லிம்களின் பெருமளவு வாக்கு வங்கியை யு. என். பிக்குச் சார்பாகவே வைத்திருந்தது. எஸ். எல். பி.இல் இருந்த முஸ்லிம் எம்பிக்களையும் யு. என். பி இலிருந்த முஸ்லிம் எம்பிக்களையும் எண்ணிக்கை ரீதியில் ஒப்பிடும்போது இதைக் கண்டுகொள்ள முடியும். இதை இன்னும் இலகுபடுத்திச் சொன்னால் நீலக் கட்சி ஆட்சிக்கு வரும்போது பதியுத்தீனும் பச்சை ஆட்சிக்குவரும்போது எம். எச். முஹம்மதுவும் ஏ. ஸீ. எஸ். ஹமீதும் முஸ்லிம்களுக்கு தலைவர்களென்று அவர்களாகவே வந்து விடுவார்கள். இதையே பாராளுமன்றத்தில் அப்போதைய தானைத்தளபதி அமிர்" இந்த முஸ்லிம்கள் காகம்போல. யார் ஆட்சிக்கு வந்தாலும் அப்பக்கம்போய் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்கிறார்கள் " எனத் திருவாய்மலர்ந்தருளினார்.

இன்றைக்கு விளக்கு என்னடா வெத்திலை என்னடா அவசரமான உலகத்திலே தமிழரின் வீடும் வாழ்வும்தாண்டா அவசியம் எனும் டக்ளஸ் அல்லது முப்பது வருடங்கள் போராட்டம் எனும் போர்வையில் வட கிழக்கில் முக்கியமாக தமிழ்ர்களையும் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் அச்சத்தில் உறைய வைத்திருந்த முழுமானிட குலமே வெட்கப்பட்டு உள்ளாய் அழிந்துபோக மாட்டார்களா என அனுதினமும் வேண்டுமளவு வெறுத்தொதுக்கிய புலிகளின் புலன் பெயர் தலைவர் கே. பீ. இன்று அழுதுகொண்டு மக்களை வாழ்விக்க வந்தவராக பிலிம் காட்டுவதும் இத்தனை விலை கொடுத்தா இதைப் படிக்கவேண்டி இருந்தது என்ற கேள்வியை எழுப்புகிறது.

முஸ்லிம் சமூகம் ஒருவியாபார சமூகமாகவே இருந்தது. இதில் வெட்கப்பட ஏதுமில்லை. அவர்களுக்கு கட்சிக் கொள்கை அரசியல் நிலவரம் உலகப்போக்கு எதிர்கால யுக்தி எதுவும் வேண்டியிருக்கவில்லை. தேர்தல் வந்தவுடன் சாறனை மடிச்சுக் கட்டி "எங்கட துரை 20000வோட்டு வித்தியாசத்துல ஜெயிப்பாங்க"என மனக்கணக்கை ஒப்புவித்து துரைக்கு வேலை செய்யும். துரை கவிழ்ந்து போனால் ஒருமாததுக்குள்ளேயே உறவுக்காற ஒருத்தரை பிடித்து வென்றவனுடன் சேர்ந்து கொள்ளும்.. இதற்கு நிந்தவுhரின் முஸ்தபா காலத்தைய ஒருபகிடிக் கதைகூட உண்டு.அவரைச் சூழ இருந்த ஊர்ப்பெரிய தலைகளிடம் நீலம் பச்சை ஆகிய இரு நிறங்களிலும் தலைப்பாகையும் சால்வையும் இருக்குமாம்.பெரியவர் கொழும்புவில் இருந்து போன் பண்ணுவார்:

'பிரதமரைச் சந்திக்கணும். புறப்பட்டு வாங்கப்பா"சின்னது பவ்வியமாய்க் கேட்கும்:
'எந்தச் சால்வையப் போட்டுட்டு வரணும் சேர்"
“என்ன இது?" எனக் கேட்டால் “ அது அவங்கட புளைப்பு. நம்முட புளைப்ப நாம பார்க்க வேணாமா?" எனத் திருப்பிக் கேள்வியாய்க் கேட்கும்.

ஏரியாவில் கொஞ்சம பெரிய கை என்றால் வென்றவரே துhதுவிட்டு சில கொண்றெக்டுகளை அல்லது அரச வேலையைக் கொடுத்து தன் வசப்படுத்தும். பெரும்பகுதி மக்கள் கண்டுகொள்வதேயில்லை.' இதுவும் ஒரு புளைப்பாடா?” எனத் தெரிந்தவருள் கிண்டல் செய்யும். ஆனால் ஒரு உண்மையை நாம் அனைவரும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். அப்போதைய எம். பிக்களைச் சூழவும் கல்வி மத சங்கங்களில் ஓரளவாவது தங்கள் மரியாதைக்கு பயப்படுபவர்களான பிரதிநிதிகளே இருந்தார்கள். அரச சார்பாளர்களுக்கும் சாதாரண பொது மகனுக்கும் பாரிய இடைவெளி இருக்கவில்லை.

மொத்த இலங்கை முஸ்லிம்களின் அதிகார மையம் கொழும்புவாழ் அரச பிரதானிகளிடமே இருந்த காலம் அது. அப்போது தமிழ் பேசும் தாழ்த்தப்பட்ட சாதியினரில் ஒரு பிரிவினரே முஸ்லிம்கள் என அறிவுக்கொழுந்து செலீவா சொல்லப் போய் வாங்கிக்கட்டிக் கொண்டதையும் அது வேடிக்கை பார்த்தது. (இன்றைக்கு வடக்குத் தமிழர் குறுந்தேசியவாதிகள் கிழக்குத் தமிழரை ஏய்த்துப் பிழைத்தனர் முன்னரங்கில் பலிகொடுத்தனர் கறிவேய்ப்பிலையாய் பாவித்துவிட்டு துhக்கிவீசினர் என்றெல்லாம் இராசதுரை கனகரெத்தினம் கருணா பிள்ளையான ஆலயடிவேம்பு பியசேன சொல்வது ஞாபகம் வரக் கூடும்)

இங்கு சொல்லவந்ததில் இருந்து முஸ்லிம்களுக்கு இலங்கையின் அரசியலில் அன்று இருந்த ஈடுபாட்டின் அளவை ஓரளவு நீங்கள் மட்டிட முடியும். இன்னும் இதைப் புட்டுவைத்தால் இராமன் அல்லது இராவணன் எவன் ஆண்டாலும் என்சோலியில தலையிடாமலிருந்தாச் சரி என்பதாகவே இருந்தது. இதன் சோலி என்ன என்பதைப் பார்த்தோமானால் அதன் ஒட்டுமொத்த வாழ்வும் புரிந்து போய்விடும். இன்றைய முஸ்லிம்சமூக வாழ்வுமுறையைப் பார்க்கிற ஒருத்தரால் கற்பனைகூடப் பண்ண முடியாத வாழ்வு முறை அது. அத்துடன் ஒர் எம். பி என்னென்ன செய்ய முடியும் என அதுவாகவே ஒரு பட்டியல் வைத்திருந்தது. ரோடு போட , பாடசாலை அரசகாரியாலயக் கட்டடம் கட்டுதல், முதலில் அரச உத்தியோகம், பின்னர் ஊரோடு இடமாற்றம், வீட்டின் பிரதான நிகழ்வுகளில் ( மௌத்து, மணமக்கள் சேர்வு) பிரசன்னம் (போகவில்லை என்றால்-'என்ர ஊட்டு விஷேசத்துகே வரல்ல அவனுக்கெதுக்கு வோட்டுப் போடுறது?' என்பார்கள்) மத, பாடசாலை விழாக்களில் பிரதம அதிதி....எந்தவிதக் கொலைப் பயமுமின்றிய ராஜவாழ்வுதான் போங்கள். என்ன தேர்தல் நேரத்தில் மட்டும் சில இலட்சங்களை மனம்நோவாதபடி கிள்ளிப் போடவேண்டியிருந்தது.

இன்றைய சமூக வாழ்வுக்கு நேரெதிரான கட்டமைப்பு இருந்த பொற்காலம் அது. போடியார் (காணி உரிமையாளர்) தன் வயல் செய்பவனின் வீட்டுக் கூரையில் ஏறிநின்று கிடுகு கட்டுவது.ஒரு போகம் நஸ்டம (வெள்ளம், அறக்கொட்டி) வந்தால் அடுத்தபோகம் கொடுப்பனவின்றி வயல் செய்வது ஒரு மாதத்துக்கு முன்னரே திட்டமிட்டு அல்லயல் எல்லாம் பாக்குவெட்டி வீதி முழுக்க வெள்ளைத்துணியால் ஜோடனை செய்து லௌட் ஸ்பீக்கருல மூணுநாளாத் துhங்கவிடாம சினிமாப் பாட்டுப் போட்டு கலியாணம் கந்துரி சுன்னத்து......அடப் போங்கப்பா எப்படியெல்லாம் வாழ்ந்துட்டுப் போனார்கள் தெரியுமா?;.

முதன் முதல் இலங்கையின் நாவல் அசன்பே சரித்திரம். அறிஞர் சித்திலெப்பை வெளியிட்ட தினசரிப் பத்திரிகை முழுக்க முஸ்லிம்களுக்கு இஸ்லாம்- அதிலும் குறிப்பாக ஆன்மீகம் சார்ந்ததாகவே வளர்த்தெடுக்கப்பட்டிருந்தது. மறு மணம் என்பது குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒருவிசயமாகவே கொள்ளப்படாத காலம் அது. இன்றைக்கும் மூத்தவர்களின் வாயிலிருந்து “ சோனிட தாலி அறுத்துக் கட்டுற தாலிதாண்டா" என்று சொல்லப்படுவதைக் கேட்கலாம். பருவமடைந்தவுடனேயே திருமணம் தேவைப்படுகிறதாயின் மணம் முடித்துக் கொடுங்கள் எனும் நபிவாக்கு தெரிந்தோ தெரியாமலோ பின்பற்றப்பட்டிருந்தது. கற்பு எனும் உடல்சார் மாய பிம்பத்தை உடைப்பதில்- தெரியாதிருந்ததில் நிம்மதியாகவே சமூகம் நகர்ந்தது. எந்தவிதப் பெருமையோ தியாகமோ விதவைத் (ஆணோ பெண்ணோ ) திருமணத்தில் இல்லை என்பதில் முன் மாதிரியாய் இருந்தது. புறத்தே தேவைப்படுகிற பொருளாதாரம், கல்வி நிலைமைகளுக்கும் காமத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென காலம் கடந்து ஞானம் கொள்கிற நிலைவராதபடி உண்மையிலேயே வாழ்ந்தது அது.

ஆங்கிலேயரின் ஆங்கிலக் கல்வியினுhடான தேவையை அது மறுதலித்தே வந்தது. தமிழர் அடுத்ததாக சிங்கள பிரதேசங்களில் நாம் காண்கிற ஆங்கிலேயர் காலத்து ‘சேர்ச்’ சார்ந்த எந்தவித பாடசாலையையும் நீங்கள் முஸ்லிம் பிரதேசங்களில் இன்றைக்கும் காண முடியாதிருக்கும். அதன் கல்வி ஓதப் பள்ளியுடன் அரசபாடசாலையுடன் மட்டுமாகவே இருந்து வந்தது.

முஸ்லிம்களுக்கான நியமன எம். பிக்களின் காலம்முடிந்து தேர்தல் முறை வந்தபோது வட- கிழக்கிலும் முஸ்லிம் பிரதேசங்களில் போட்டிபோட ஆட்கள் தேவைப்பட்டது.கொழும்புத் தலைமைகளுக்கு 'யேஸ் சேர் 'எனச் சொல்லக்கூடிய ஆங்கிலம் தெரிந்த தலைமைகள் உருவாகின. இதில் வெட்கப்படும் படியான ஒன்று அது அவர்களின் பரம்பரைச் சொத்தாகவே ஆகிப்போனதுதான். ஒரு சின்ன உதாரணம்: நிந்தவுhர் முஸ்தபா, கல்முனை மன்சூர் இசம்மாந்துறை மஜீத் எம்.ஸீ. அஹமது பலாங்கொடை அபுசாலி மு. கா. முதல் தலைவர் அஸ்ரப் (இன்னும் சிலர் விடுபட்டிருக்கலாம் ): இவர்கள் யாவருமே கேற் முதலியார் எம். எஸ். காரியப்பரின் குடும்ப அங்கத்தினர் களிலிருந்து கிளை விட்டவர்களாகவே இருக்கக் காணலாம். அது இன்னமும் தொடர்கதையாகவே பல பகுதிகளிலும் பேணப்படுவதைக் காண்கிறோம்.

முஸ்லிம் தலைமை கொழும்புவிலும் தமிழர் தலைமை யாழ் என்றும் பாராளுமன்ற ஆரம்பத்திலேயே ஆகிப் போயிற்று. நாம் இன்றைக்கு விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். ஆனால் கிழக்கில் எல்லாத் தொகுதிகளிலும் முஸ்லிம், தமிழ் வாக்காளர்கள் கலந்து காணப்படுவதுவும் எம். பிக்களாக இரு அரச கட்சிகளிலும் தமிழர்களும் முஸ்லிம்களுமாகத் தெரிவாவது கண்குத்தியதோ தெரியவில்லை. இருமுனைப் போட்டி இப்போது மும்முனை என்றானது. ஆனால் இவர்களும் முந்தியவர்கள் போலவே ராஜ வாழ்வுதான் வாழ்ந்தார்கள். தன் பிள்ளைகளுக்கு உயர் பாடசாலைகளிலுயர் கல்வி. சொகுசு வாழ்வு வேண்டி கொழும்புக்கு குடிபெயர்வு. மக்கள்? அடுத்த தேர்தலில் பார்த்துக் கொண்டால் போதாதா? இப்பதான் கோடி கோடியா வருதே: சில லட்சங்களை எறிஞ்சா பின்னால பெரிசுகள் நக்கிட்டு வராது.? தமிழர்களுக்கான கட்சிகளில் முஸ்லிம்களும் போட்டி போடத் துவங்கினர். கல்முனைத் தொகுதியில் சட்டத்தரணி சம்சுதீனுக்கு ஆதரவான கருத்தரங்கு அஸ்ரப் வீட்டில்(யாட் வீதியில் இருந்தது. பின்னர் தமிழ் முஸ்லிம் கலவரத்தில எரியுண்டது.) நடைபெற்றது.அமிர்தலிங்கம் அதிதி. அங்குதான் தம்பி அஸ்ரப் சொன்னார்:' அண்ணர் அமிர் தவறினாலும் இந்தத் தம்பி அஸ்ரப் ஈழம் பெற்றுத் தருவேன்." என்று. அடக் கஸ்ட காலமே? மக்களுக்கு அப்போதுதான் இவர்களைப் பாராளுமன்றம் அனுப்பினால் தனி நாடும் பெறறுத் தருவார்களென்பது தெரிந்தது. ஏற்கனவே அவர்களின் வார்த்தையில் சொன்னால் சிங்கள அரசிடமிருந்து வந்த வருடாந்த நிதியை. கொண்றெக்டுகளை. தொழில் நியமனங்களை எவ்வித ஊதியமுமின்றி மக்களுக்காக சேவையோ சேவை என்று வாழ்கிற தியாகச் செம்மல்களுக்காக விரல்பிளந்து இரத்தத் திலகமிட்டு உணர்வு பூர்வமாகத் திரண்டார்கள்.

இலங்கையின் முஸ்லிம் சமூகத்தினர் தமிழ் சமூகத்தினரிடமிருந்து தற்காலக் கல்விமுறையைக் கற்றுக் கொள்ளுவதற்குத் தங்கியிருந்தனர். 1980 களில் குடிசனப் பரம்பலில் 8 வீதத்தினரான முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி வீதம் 2க்கு அண்மித்ததுதான். இன்றைக்கு ஒரளவு கூடியிருப்பினும் இதற்கு அடித்தளமிட்டதில் தமிழாசிரியர்களை மறுதலிக்க முடியாது. இன்றைக்கு உலகுக்கு கல்வியை விற்கிற நாடாக இலண்டன் இருப்பதுபோல தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் கிழக்குத்தமிழர்களுக்கும் அன்று இலங்கையில் யாழ் இருந்தது. பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியினால் கிழக்கு வாழ் தமிழரும் முஸ்லிம்களும் அடைந்த நன்மையை இன்று மட்டிடக்கூடியதாக இருப்பினும்- அன்று யாழ்தலைமை சொன்னதை வழி மொழிய என்ன காரணம்? எண் சாண் உடம்புக்கு மட்டுமா மொத்த இலங்கைக்குக்கூட அதன் சிரசே பெரிசு எனக்கிடந்த காலமது.

முஸ்லிம் வாக்குவங்கியை இரு அரசகட்சிகளிடமிருந்து திருப்புவது பெரும்கஸ்டமானதாயிருந்தது. இருந்தும் தமிழரசுக்(யாழரசுக்) கட்சிகளில் ஓரிருவர் (முஸ்லிம்- தமிழ்) தெரிவானாலும் அரசுடனேயே போய்ச்சேர்ந்து விடுகிற தன்மை காணப்பட்டது. அது அதன் இயல்புக்கு அப்படித்தான் இருக்கும். ஏனெனில் ஊருக்கோ, மக்களுக்கோ ஒண்டுமே செய்யாமல் போனால் அடுத்தமுறை ஊரில் முகம் காட்ட முடியாது போகும். ஏனெனில், அவர்களுக்கு அரசியல் என்பதுவும் ஒரு வாழ்வுக்கு உதவுகிற வியாபரக் கொடுக்கல் வாங்கல் அவ்வளவுதான். அப்படியென்றால் இன உணர்வு தன் மானம், தமிழ் மொழி........இதுவெல்லாம்? சும்மா போங்கப்பா.. இதுவெல்லாம் கறிக்குதவாது என்பார்கள். சிங்களம்- தமிழ் எனப் பிரிந்து அரசியல் சித்து விளையாடிக் கொண்டிருந்த இரு இனத்தாரிலும் அருகாகவே இருந்துகொண்டு மதரீதியில் ஒன்றுபட்டிருக்கிற முஸ்லிம்களை அடையாளம் காண்பதில் இரு இனத்தலைமைகளும் தவறின.

அண்ணர் அமிர் நாக்கூச்சமின்றி மேடையில் வைத்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் 'தொப்பி புரட்டிகள்" என நாமமிட்டார். ஜே. ஆர்.தன் தந்திர மூளைகொண்டு இருஅலுவ்ல்களை நிறைவேற்றினார்.

1. தொழில் வங்கி. அடுத்தடுத்து பச்சை நீலம் என ஐந்து வருடங்களுகொருமுறை மாறாதபடி தன் வாக்குவங்கியை ஆக்குகிற காரியம்.

2. பாரளுமன்றத்தினுhடு தலைமை என்பதை விடுத்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை. இரு பெரும்பான்மை கட்சியைத்தவிர தமிழர் தரப்பு எட்டவே முடியாத உச்சம். இதில் பணம் கட்டி விளையாட முஸ்லிம்கள் வரவேயில்லை. ஒட்டு மொத்த முஸ்லிம்களில் (நுhற்று வீதப்படி) பெரும்பகுதியினர் வட கிழக்குக்கு வெளியிலேயே வாழ்கின்றனர். அவர்களுக்கு இந்த தமிழர் கட்சிகளும் அது பேசுகிற சுயாட்சி பற்றிய கதையாடல்களும் வேறொரு நாட்டுக்காரர் பேசுகிறது மாதிரி.

நாம் முன்னர் குறிப்பிட்டது போலவே முஸ்லிம்கள் தமிழர் தரப்பினரிடமிருந்து கல்விக்கு மட்டுமன்றி சிலபண்பாட்டு ரீதியான நடைமுறைகளையும் பின்பற்றத் துவங்கினர். சிலவேளை தாய்த்தரப்பு தமிழராக இருந்ததால் தொடர்ந்து வந்திருக்கக் கூடும். திருமணத்தின் போதான தாலி மணமகணைக் காசு கொடுத்து (சீதனம்) வாங்கிப் போடுதல். இதற்கும் ஒரு கிண்டல் கதை எங்கள் பகுதியிலுண்டு. பணத்தில் மிகக் கொழுத்த ஒருவர் தன் மூத்த மகளுக்கு முதன் முதலாக பல இலட்சங்களைக் கொடுத்து ஒரு வைத்தியரை வாங்கிப் போட்டார். தன் அடுத்த மகளுக்கு எஞ்சினியர் பார்க்க உள்ளாராம் எனக் கேள்விப்பட்டதுமே எங்களுhர் வாப்பாமாரெல்லாம் சூரியன் எழ முன்னரே தங்கள் ஆண் மக்களை எழுப்பத்துவங்கி விட்டார்கள். துhக்கக் கலக்கத்துடன் எழுந்து

'என்னப்பா " என மகன் கேட்டால்
'மெத்ஸ்ஸப் படி. மத்ஸ்ஸப் படி" என்றார்களாம் என்பதாக.

என்ன செய்ய வியாபாரச் சமூகம் அது. பணம் பண்ண இத்தனை சுருக்கு வழி இருக்க விட்டு விடுமா?

தமிழர் தரப்பு அரசியல் படிப்படியாக ஆயுதப் போராட்டம் எனப் பிந்திய காலத்தில் உருமாறத் துவங்குகிறது. அஸ்ரபுக்கு முத்ன் முதலாகக் கிழக்கில் ஒளிதெரிவதாகத் தோன்றியது. அது துப்பாக்கியின் வெடியிலிருந்து விபரம் கெட்டவர்களால் தோற்றமானது என்பதை அறியாதபடியே முதன் முதலாக மத ரீதியில் ஒன்றுபடுங்கள் எனும் கோசம் எழும்பத் துவங்கினார்..காத்தாங்குடியில் முதன் முதலாக அந்த நச்சு மரம் விதையுhன்றப்பட்டது.

சமூக ஆர்வலர்களால் முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சியை சமூக அழிவுகரமான ஒன்று எனப் பார்க்கிற தன்மை ஆரம்ப காலத்திலேயே அறியப்பட்டு இருந்தபோதும் புலிகளின் - தம் தம் பங்குக்கு ஏனைய இயக்கங்களின் மிலேச்சத்தனமான போக்கால் மரம் குறுகிய காலத்திலேயே அபரிதமாகக் கிளைவிட்டுப் பரவியது. ஆம் உலகில் கெட்டவை விரைவாகத்தான் வதந்திபோலப் பரவி விடுகின்றன. ஆசிய சமூகத்தின் ஒருகிளையாகிய இலங்கை முஸ்லிம்களும் உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் வயப்படுபவர்களாகவே இருந்தனர்.

முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சி இருகோசங்களுடன் முன்னெடுக்கப்பட்டது.

1. முஸ்லிம் சமூகமே ஒன்றுபடு. (அது சரி முஸ்லிமானவன் எதுக்கு ஒன்றுபடனும்?. நீங்க இன்னொரு வியாபாரக் கடை திறக்கவா?)

2. சந்திரிகா வரமுன்னர் யு. என் . பீக்கு ஏசோ ஏச்சென்று ஏசி முஸ்லிகளின் பாதுகாப்பு இருப்பிடம். பிறகு....ஆ ஆ..வாழ்வாதார உரிமை (இதில் இன்னும் என்னென்னவோவெல்லாம் சொல்லுவாங்க. எல்லாமே தமிழரசுக் கட்சிகள சொல்லிக் கொடுத்ததுதான்.) எல்லாம் சிங்கள யு. என். பீ. க்கட்சியினரால் சிதைக்கப்பட்டது.

இதில் ஓரளவு உண்மை இல்லாமலில்லை. புலிகள் வெளிப்படையாகவே ‘இனப் பிளவுக்கு அனைவரும் உட்பட வேண்டும. நாம் சார்ந்த நிலைப்பாடு;தவிர வேறெதுவுமாய் நடந்துகொள்ள வேண்டாம்’ எ ன வலிந்து திணித்து வாழ்வைக் காணாதபடி எல்லாமக்களையும் சிந்திக்க வைத்து வாழ்க்கைமுறையாய்க் கொள்ள வைத்து கொலை மலிந்த பூமியையும் உயிரச்ச வாழ்வையும் தந்தருளியதில் பதிலுக்குப் பதில் என மறைவாய் இரும்புக்கரம் கொண்டு ஆண்ட யு. என். பி. யையும் சாரும்தான்.

இதில் கவலைக்குரிய ஒரேவிசயம் என்னவென்றால் எந்தவித அரசியல் மானிட விழுமியமும் அற்ற பகல் கொள்ளைக்காறர்களிடமும் கொல்லுதலைக் கொண்டாடும் அமைப்புகளிடமும் நம் தலைமைகள் மாற்றப்பட்டதுதான். புலிகளின் மாத்தையா ஒருமுறை யாழ் வளாகத்தில் ஒரு விரிவுரையாளரிடம் ' கற்றவரும் சமூகப் பெரியாரும் எங்களை விட்டும் துhரமாகி விட்டார்கள்"என்று சொன்னதாகவும அவருக்கு பதிலாக' நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதை அது காட்டுகிறது" எனும் வசனம் கிடைத்ததாகவும் வாசிக்கக் கிடைத்தது.;.

முஸ்லிம் காங்கிரசின் அபரித தோற்றம் பார்த்து வளருகிற வீக்க வளர்ச்சி. எப்படிப் பிடிச்சிக்கும்.முஸ்லிம் பிரதேச நெஞ்சுகளில் தீவைத்தார்கள். முப்புறமுமான தீயில் எமனுக்குத் தலை கால் தெரியாத சந்தோசம்.

மானிட அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பது நாம் கேள்விப்பட்டதுதான். அந்த அயோக்கியர்களிடம் மனித அன்பைப்போதிக்க வந்த மதங்கள் பகடைக் காயாகிப் போனது இன்றைய காலத்துச் சோகம். இலங்கையின் முஸ்லிம்களுக்கான அரசியல் என்பதை முழுக்க கொந்தறாத்து அரசியலாக்கிய மையிலும் உடல் நோவின்றி எந்தவித ஹலாலான தேடுகையுமின்றி பணத்திற்காக அழிந்து போகும் பெருமைக்காக மதத்தைக் கொச்சைப்படுத்தியதிலும் மு. காங்கிரசின் பங்கு அளப்பரியது.

மு. காங்கிரசின் ஆரம்பத்தில் சமூக ஆர்வலர்களும் கற்றவர்களும் (பட்டம் பெற்ற படிப்பாளிகள் அல்ல) அதில் இணையாமலில்லை. இஸ்லாமியர்களின் உயிர்நாடியான குர் ஆன் அதன் யாப்பு என்றபோது என் அறியாச் சமூகம் நோன்பு பிடித்து இறைஞ்சியதையும் காணவேண்டி வந்தது. முறட்டுத்தனத்திற்கு இன்னொரு முறைப்பும் ஆணவப்போக்கும் சரிவராது எனக்கண்டு ஒதுங்கிப் போயினர் நல்ல இறையச்சமுள்ள மானிடரெல்லாம்..தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காறனாயினர். இங்கு போலவே அங்கும் மதத் தன்மை வாய்ந்த பெரியோர் மௌனமாயினர். தொகுதி முறையான தேர்தலின் பயனாக கட்சி அதன் கொள்கை என்பதற்கு அப்பால் முஸ்லிம்களின் வாக்களிப்பு முறை தனி நப ர். பிரபல்யத்திலும் குடும்ப பெருமையை வழிமொழியும் தன்மையுடையதாகவுமே இருந்தது.எனவே அஸ்ரப் இருவழிகளில் முஸ்லிம் வாக்கு வங்கியை தன்பக்கம் திருப்ப எத்தனித்தார்.

1. அரசு தனி சிங்களவருக்கான கட்சி எனும் பதிவை உருவாக்கல்.. - இதன் பொய்மையை விளக்குவதற்காக இரு நிகழ்வுகளைத் தரலாம்.

  • அண்மையில் கண்டி காதர் ஹாஜியார்-யு. என். பியிலிருந்து விலகியபின் பாரளுமன்றத்தில் ஆற்றிய உரை.அதில் எனக்கு 30000க்கு மேலான வாக்குகளை சிங்கள மக்கள் அளிப்பார்கள். இந்த முறை 10000க்குக் குறைவாக விழக் காரணம் ரணில் றவுப் ஹக்கீமிடம் ஒப்பந்தம் செய்து இனப் பிளவை அங்கு விதைக்கும் கைங்கரியத்தை இருசாராரும் செய்தமைதான். (தோப்பனார்(வெஸ்ற்) சொன்னதத்தானே செய்ய முடியும்) இதே நேரம் வட கிழக்குக்கு அப்பால்- முன்னாள் இன்னால் முஸ்லிம் எம்பிக்களெல்லாம் சிங்கள தமிழ் மக்களின் வாக்குகளையும் பெற்றே வருகிறார்கள்
  • .சிறிமா- அஸ்ரப் ஒப்பந்தத்தில் வட- கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்கள் அடங்கிய தனி மாகாண சபை தருவதாகச் சொன்ன பின்னரும் கொழும்பு மத்திய தொகுதியைத் தனக்குக் கேட்டதாகவும் மறுத்ததாகவும் - ஏற்கெனவே சிறிமாவோவுடன் சேர்த்து குடியுரிமை பறிக்கப்பட்ட ஹலீம் இஸாக் அங்கிருந்த போதும்- ஒப்பந்ததை முறித்து மக்களுக்கு சூ-தந்திரக்கட்சி எனக் காட்டிய பாவ்லா. பிரேமதாச பிரபாகரனை நம்பி மோசம் போனதால் சிங்கள மக்களையும் முஸ்லிம் மக்களையும் முஸ்லிம் பொலிசுகளை மட்டுமல்ல சிங்களப் பொலிசுகளையும் சிங்கள மக்களையும்தான் காப்பற்ற முடியாது போனார்.

2.அரச கட்சிகளில் செல்வாக்கு உள்ளோரை தன் கட்சியினுள் உள்வாங்கி தேர்தலில் போட்டியிடச் செய்தல். நாசமாய்ப் போன மாவட்ட தேர்தல் முறையால்-மொத்த மாவட்ட முஸ்லிம் என ஊட்டப்பட்ட வாக்குவெள்ளத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட அடிமைச் சேவகர் அரியாசனம் காண பழைய பெரிசுகள் அள்ளுப்பட்டுப் போயினர்.

புலிகள் துவங்கி நாம்பார்த்த எல்லா இயக்கங்களும் தமிழ் பேசிய முஸ்லிம்களையும் பௌத்தர்களையும் (வட- கிழக்கில் வாழ்ந்த ) தமிழரல்ல நீங்கள் எனப் பலமுறை துப்பாக்கிகளால் தீர்த்துச் சொல்லியுள்ளனர். இது புலிகள் எப்படி ஊர்ப்பொறுக்கிகளை வைத்து எல்லா மக்களினதும் வாய்களை மௌனமாக்கினரோ அதேபோல முஸ்லிம் பிரதேசங்களிலும் ஊர்ப்பணத்தை உலைவாயிலே போடும் சோம்பேறியாய்த் திரிந்த எந்தவித மார்க்க அறிவுமற்ற ஆனால் மார்க்க ரீதியான கட்டமைப்பு எனப் பேர்வாங்கிய அலிபாபாவும் நாற்பது திருடர்களும் நினைத்ததைச் செய்யும் நிலைக்களமாக்க உதவியானது.. அவர்களை மேவி கற்றவர்களோ. அறிஞர்களோ மக்களைப் பிழையிலிருந்து விடுவிக்க முடியவில்லை.என்றுமில்லாதபடி தமிழர்களை விட்டும் அன்னியப்பட்ட முஸ்லிம் மாணவர்கள் உத்தியோகத்தர்கள் வியாபாரிகள் பயணிகள் ஏன் பெண்களும்கூட பேதம் பார்க்கிற நிலைமை வந்து சேர்ந்தது.

முஸ்லிம் என்பது ஒரு மதத்தை தன்வாழ்வு முறையாய்க் கொண்டவனையே குறிக்கும் சொல். அவனது வாழ்வு முறை குர் ஆனிலிருந்து வருவது. ஆகவேதான் அடிமடியிலே கைவைப்பது போல குர் ஆனையே யாப்பாக்கி விட்டார் அஸ்றப். அவர்கள் சொல்வதைப் போல முஸ்லிம்களுக்கு மட்டுமாய கட்சி என்றிருந்தால் உண்மையில் அது தோன்றியது முதல் இற்றைவரையான அதன் செல்லுகை சரியாகவே இருந்ததுவா? வட- கிழக்கின் அகதிகளை இல்லாமலாக்குகிறேன் ஐந்து வருடத்துள் எனக்கூவி புனர்வாழ்வு அமைச்செடுத்த குர் ஆனை யாப்பாகக் கொண்ட தலையும் பெருசசாளிகளும் நமக்கு வெட்கக் கேடானவர்கள். புத்தளம் அகதியையும் பார்க்கவில்லை: வவுனியா வாழ்விழந்தவனையும் எழுப்பி விடவில்லை. எல்லாக் கொள்ளையர்களையும் போல வாக்கு நோக்கி வேட்டை. அதற்காக அகதிகளுக்கான பணம் கப்பல் துறைமுக அமைச்சினுhடு ஏனைய அமைச்சிக்களிடம் உருவாக்கப்பட்ட துவேச நிலைமை. அம்பாரை மாவட்டத்தில் தன் வாக்குவங்கி ஒன்றிக்காகவே தன் பின்னால் எலும்புத்துண்டுக்காக அலையும் கபோதிகளை முஸ்லிம் பிரதிநிதிகளாக்கிய அகோரம். இன்றைக்கு அதன் அடிநாதமாகிய "முஸ்லிம்களே ஒன்றுபடுங்கள்' எனும் கோசம் சுக்கான் சரிபட்டபின் சிதறிக்கிடப்பதன் மாயம் அதன் பணவெறியையும் பதவி ஆசையையுமே படம் பிடித்துக் காட்டுகிறது.

நடந்து முடிந்த புலிஅழிப்பு யுத்தம் இலங்கை மக்களுக்கு இரண்டாவது முறையாகவும் ஒருபாடத்தைக் கற்பித்திருக்கிறது. ஜே. வி. பியினர் எப்படி நாட்டு மக்களின் சுதந்திர அச்சமற்ற வாழ்வுக்கு இடையுhறாக இருந்தபடி போராட்டம் நடாத்த வெளிக்கிட்டார்களோ அதேபோல தமிழ் மக்களுக்கும் படம் காட்டி புறப்பட்டவர்களும் சரிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் இதைத் திறந்து சொன்னால் அரச படையின் பலத்தால் புலிகள் வெற்றி கொள்ளப்பட்டனர் என்பது காற்பங்குக்கு மட்டுமே உண்மையானது அங்கு வாழ்ந்த மக்களின் ஒருமித்த ஆதரவு இருந்தால் இராணுவப்படைகள் புலியின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது போயிருக்கும். புலிகளின் காட்டுமிறாண்டித்தனமான அராஜகம் தமிழ் மக்கள் வெற்றிலை வைத்து வரவேற்க முக்கால் பங்கு வெற்றியை வழங்கக் காரணமாயிற்று.

இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுகிறவர்களுக்கான- அல்லது முஸ்லிம்களுக்கான கட்சி எனப் பெயர்கொண்ட கட்சி உண்மையிலேயே முஸ்லிம்களுக்குரிய மையப் பிரச்சினைகளை அடையாளம் கண்டிருக்க வேண்டும்.

    1. புலிகளினால் ஏற்பட்ட வேளாண்மை நிலங்களின் பயன்பாடின்மை சீதனக் கொடுமை வறுமை என்பவற்றால் இன்னமும் முஸ்லிம் இளம் பெண்களும் தந்தையர்களும் ஏற்றுமதிப் பொருளாக மாறிவிட்ட அவலம்.

    2.இந்தியச் சினிமாவிலும் நாகரீகமோகத்திலும் சீர்கெட்டு பணமொன்றிற்காக எதையும் அங்கீகரிக்கும் மனநிலை கொண்ட உலக அரசியல் அறிவியல் முஸ்லிம்களின் மதப்பிளவின் சூட்சும அறிவு எதுவுமே தெரியாத நாட்களைக் கடத்தும் சமூக நிலைமை.இதற்குரிய அறிவு வழங்களை இனம் காணத் தவறியமை. இருந்தாலும் முதன்மைப் படுத்தவோ வசதி செய்து கொடுக்கவோ முயலாமை. (இதைச் செய்தால் முதலில் சரிந்து போவது உங்கள் கோட்டைகளே என்பதற்காக அடியாள் கூட்டம் கொண்டு அடக்குவதையே முளையிலேயே கிள்ளும் கைங்கயத் தையே அஸ்ரப் செய்து வந்தார்)

    3. வட கிழக்கில் பிறந்ததற்காகவும் முஸ்லிம் என்பதற்காகவுமே கொல்லப்பட வேண்டும் எனும் கொலைவெறியில் திரிந்த புலிகளிடமிருந்து இனத்தைக் காப்பாற்றத் தவறியமை.

கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிற தமிழர்களைக் கொல்லும் டிலுக்கு நாங்கள் இணங்கவில்லை என அண்டன் பாலா எழுதினால் அதில் இன்னொரு கேள்வியும் பதிலும் மறைவாய்ப் பொதிந்திருக்கிறது. இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகிற தமிழர்களைக் கொல்லும் டிலுக்கு நாங்கள் உடன்பட்டோமென்பது. இப்போதுள்ள கே.பீயைக் கேட்டால் எல்லாம் தெரிந்து போய்விடும்.அதுவல்ல இங்கு சொல்ல வந்தது

நிரஞ்சன் விஜேரட்ன பாதுகாப்பு அமைச்சராயிருந்தபோது முஸ்லிம்களுக்கான தனிப்படை அமைக்கலாமா என அஸ்ரபிடம் கேட்டபோது பின்வாங்கியது.

ஒரு உண்மை முஸ்லிம் தனக்கு அநீதி இழைத்தவனை அதேயளவில் தண்டிக்க உரிமை பெற்றவன். யாரால் அநீதி இழைக்கப்பட்டதோ அவர்களையே தண்டனைக்குட்படுத்தியிருக்கலாம். அதை விடுத்து அன்றாட உழைப்பிற்காகவே அல்லல் படும்- தங்களின் சந்தோசகர வாழ்வைச் சூறைகொண்ட இயக்கங்களைக் கேள்விக்குட்படுத்தவே அஞ்சிய ஊமையாய்ப் போன அப்பாவித் தமிழர்கள்-(எப்போதும் முஸ்லிம்களின் மீதான தாகுதலின் பின்னர்)கொல்லப்பட்டுப் போனதைக் கண்டிக்கவோ மன்னிப்புக் கேட்கவோ அல்லது தம் எதிரியைச் சரியாக இனம் கண்டு சொல்லவோ தவறியமை.: அஞ்சியமை..

ஆம். அவர்கள் ஒரு முஸ்லிமுக்குரிய தன்மையில் ஒருபோதும் இருக்கவில்லை. அஞ்சிக் கிடந்தார்கள் என்பதுவே உண்மையானது. வவுனியாக் காட்டில் இருந்தபடியே ராஜீவ் காந்தி பிரேமதாச என்றுபோய் துவங்கி மீலாது நபி விழா வரை ரிமோட் கொன்ரோலில் கொலைத் தாண்டவம் ஆடிய சூரியக் கடவுளுக்கு சரணடைந்தே கிடந்தார்கள். இதை மிக விசனப் பட்டே சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் முந்தைய முஸ்லிம் எம்பிக்களின் எல்லாச் செயற்பாடுகளையும் -ஏன் அவர்களின் மத நல்லிணக்க செயற்பாடுகளையும் தனிப்பட்ட வாழ்க்கை முறைகளையும் மேடை போட்டு கொச்சைப்படுத்தி மதத்தை மூலதனமாக்கி வந்த நீங்கள் அவர்களை விடவும் மிகக் கீழாக எம் மக்களின் வாழ்வை சிந்தனையை முடமாக்கி விட்டிருக்கிறீர்கள் இதில் மிகவும் கேவலம் கெட்ட தனம் கிளைமாக்ஸ் ஒன்றுண்டு.

இன்றைக்கு மரணித்துப் போன அஸ்ரப்பை வைத்து பல கடைகளாக சில்லறை வியாபரம் செய்கிறார்கள் ஆனால். அவர்களின் தானத் தளபதியின் மரணம் பற்றி ஒரு விசாரணை நடத்தக் கூடத் துப்புக் கெட்டவர்கள் இவர்கள். சந்திரிகா ரணில் மகிந்தா காலத்தில் அரச மந்திரிகளாக வலம் வந்த போதிலும் கூட. பேரியல் அஸ்ரப் அமைச்சராயிருந்து செய்யவில்லை. இப்போது நீதிக்கேஅமைச்சரயிருக்கிற பெரிய சேறாவது நீதி விசாரணையை ஆரம்பிக்குமா? பணம் மட்டுமல்ல பிணமும் தின்னும் பேய்கள் இவர்கள். ஆனால் ஒருவகையில் முஸ்லிம்களின் மிக மேலான சூபிஸத் துறவிகள் இவர்கள். அழியாக் காலங்களுள்ள மறுமை வாழ்வுக்காக இந்த உலகைத் துறப்பவன் துறவியானால் அந்தப் பெரும் மறுமை வாழ்வே வேண்டாம் இது போதும் என நினைத்து வாழ்வது பெரும் துறவு இல்லையா?

4. மொழி பற்றிய விளக்கமின்மையும் அதற்கான உரிமைக்கு கிஞ்சித்தும் பாடுபடாமை. நான் தமிழ் பேசுவதால் தமிழன் தான். தமிழ் பேசுவதானால் இந்துவாகத்தான் (இலங்கையில் மட்டும்) இருக்க வேண்டும் எனும் அவசியமில்லை. நான் மதத்தால் ஒரு முஸ்லிம். இதில் எது முதன்மையானது என்பது ஒருபோதும் எனக்குத் தேவை இல்லாதது. இந்த மாதிரி ஒரு கேள்வி எழுவதையே ஜீரணிக்கக் கஷ்டமாக இருக்கிறது. உலகெங்கிலும் நுhற்றுக்கணக்காண வேறுபட்ட தாய்மொழியைப் பேசிக்கொண்டு முஸ்லிமாகக் கோடிக்கணக்கான பேர் வாழ்ந்து கொண்டிருக்க இங்கு எம்மை தமிழரல்ல எனச் சொல்ல யாருக்கும்- குறிப்பாக புலி அடிவருகளுக்க்கும் உரிமையில்லை. மகராணிக்கே மெத்ஸ் படிப்பித்தவர்களும் கறுப்புக் கோட்டுப் போட்டுப் பொய்யிலேயே பணம் பண்ணும் கபோதிகளுக்கும் மொழிபற்றிய புரிதலும் அறிவும் தெரிந்து கொள்ள முடியாததாயிருக்கலாம். ஆனால் மொழியை ஆழுகிற தமிழ் எழுத்தாளன் என்பவன் –பிரதேசம் , இனம், மொழி அனைத்தும் கடந்த நிலையில் ஒவ்வொரு உயிரின் மலர்வும் பாடுகளும் அநீதிகளும் புலன் கடந்து காண்கிறபோதுதானே உண்மையைத்தர முடியும்.

தமிழ் முஸ்லிம் அல்லது சிங்கள எந்தத் தாயாயிருக்கட்டும் தன் வாரிசின் உடலருகே விழி வெறித்து உட்கார்ந்து பேசாதிருக்கிறாளே....என்ன நினைத்தாள் அவள். இன்னா பிரதேச இந்த மொழி பேசும் இயக்க-ராணுவ மகனார் என்றா? நம் அண்மைய எழுத்துக்கள் மலட்டுத்தனமானவை. துவேசம் கலந்த வார்த்தைகளால் உள்ளாய் உள்ள வேசைத்தனத்தை கபடத்தை எங்காவது காட்டி விடுவதால் தரமிழந்து நிற்பவை. நம்மால் ஒருபோதும் ஒருதாயையோ. இளம் சிறார்களையோ உயிர் வாழ்தலுக்காக மனிதன் போடுகிற அசிங்கங்களையோ .அதற்காக அவன் அடைகிற வெட்கம் கெட்ட வாழ்வையோ; உண்மையான சுதந்திரத்துக்குத் தடையான உலகின் கொடூர முகத்தையோ ஒருபோதும் கண்டு உலகின் முன் தன்வேதனையாகப் பார்க்கும்படி செய்ய முடியாதவர்கள்: நேரடியாகக் காணும் சந்தர்ப்பங்கள் ஆயிரம் இருந்தும் குருடர்கள் நம் எழுத்தாளப் பெரும் தகைகள்.

'என்ரதான் தமிழ்' என யாரும் இங்கு உரிமை பாராட்ட வேண்டிய அவசியமில்லை என்பதைச் சொல்வதற்கே. தப்பான செயற்பாடுகளினால் ஏற்பட்ட ஒன்றாகவே இதைக் கருத வேண்டியுள்ளது. இதற்கு தமிழ் ஈழ எனும் சொல்லாடலும் தமிழ் எங்களது எனும் தான் தோன்றித்தனமான தமிழ்ப் பேராசிரியர்களினது உரிமைகோரலும் காரணம். அப்துல் சமதுவின் நாவலுக்கு (எனக்கு வயது பதின் மூன்று ?) கிடைக்க வேண்டிய சாகித்தியப் பரிசை அச்சிலேயே வெளிவராத புத்தகத்துக்கே சாகித்தியப் பரிசாகக் கொண்டுபோக செ. யோகனாதனால் முடிந்திருக்கிறது.

முதலில் ஒருவனின் தாய்மொழி என்பது அவனின் சிந்தனை மொழியும் கூட என்பதைப் புரியப் பாருங்கள். இதை இன்னும் புலன் பெயராதவர்களுக்கு இப்படி விளக்கிச் சொல்லலாம். ஒருத்தரின் தாய் மொழி தமிழ் எனக் கொள்ளுங்கள் அவரிடம் ஆங்கிலத்தில் ஒருவர் பேசும் போது இவர் பதில் இறுக்க முன்னர் தன் உள்ளாய்

    1) பேசியவரின் ஆங்கிலத்தைத் தமிழ் படுத்தி விளங்கிக் கொள்கிறார்.

    2).அதற்குரிய பதிலைத் தமிழிலேயே எண்ண வடிவில் கொள்கிறார்.

    3.) 2) ஐ ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்கிறார்.

எனவேதன் எந்தப் புது வரவும் தாய்மொழியில் இருக்கும் போது இலகுவானதாகவும் பிரசவித்தவனின் சரியான பார்வையைச் சொல்லுவதிலும் சிறந்து நிற்கிறது. ஆகவேதான் பாரதிக்கு நாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இன்னொரு இனிமையான மொழி கிடைக்கவில்லை. புலம் பெயர்ந்து என்னதான் இங்கிலீசுல புள்ளயப் படிப்பிச்சாலும் உம்மா என் மூத்த மகன் சொல்லும்போது ஏற்படும் பரவசம் இளையது மம்மி எனச் சொல்வதில் ஏற்படவே இல்லை என்கிற தாய்மாருக்கு மொழி எவ்வளவு துhரம் உணர்வில் கலந்தது என்பது புரிபடும்.

மொழிக்கும் மதத்துக்கும் சம்பந்தமேயில்லை. குர் ஆன் அறபி மொழியில் எழுதப்பட்டது. அது சரி ஆனால் முஸ்லிம் என்கிற பெயரிடலும் இஸ்லாமும் இப்றாகிம் நபியுடன் ஆரம்பமாகிறது. இலங்கை முஸ்லிம்களின் தமிழ் மீதான பாரமுகத் தன்மைக்கு ‘எல்லாவற்றிலும்தான் பின்பற்றுகிறமே: தமிழும் உங்களோடது என்கிறீர்கள் சரி ;பின்னால் வழி; மொழிகிறமே’ எனும் போக்கு ஓரளவில் காரணமாயிருக்கிறது. பெரும் காரணம் தமிழறிஞர்கள் என்பவர்கள் இந்து மதத்துச் சொந்தக்காறர்களே எனும் ஆழ ஊடுருவி விட்ட விஷப் போக்குத்தான்.

இதை இன்னும் விபரமாக விரித்தால் அனேக அறிஞர்களின் குல்லாக்களும் கோவணங்களும் உரியப்பட்டுப் போகும். மிகச் சிறிய உதாரணம் இலங்கையின் சிங்கள சாகித்திய புத்தகங்களின் தராதரங்களும் தமிழ் சாகித்திய புத்தக எழுத்துக்களின் தராதரங்களும் எப்பீடி? அவ்வளவுதானா தமிழ் எழுத்தாளர்களின் வல்லமை? அப்படியல்ல: நம் மக்களுக்கு மு. மேத்தா வைரமுத்து, சுஜாதா என்போர் குசு உட்டாலும் முகரச் சம்மதந்தான் ஆனால் மேத்தாவையே வெற்றிகொண்ட (அக்கரைகள் பச்சையில்லை) அருளரைத் தெரியாது. மிக மேலான சிந்தனை வரவுகளை எழுத்தினுhடு நாம் அடைந்திருந்தோம்.

புலிச் சிந்தனையாலும் மேட்டுக்குடிச் சிந்தனையாலும் அரசியலுக்கு ஆலவட்டம் பிடிப்பவனாலும்- இவை எல்லாவற்றையும் விட தமிழக ஊத்தை மன விகார எழுத்துக்களாலும் ஒரு ஊனச் சமூகத்தை உருவாக்க நாம் துணை போய்க்கொண்டிருக்கிறம். எந்தப் பத்திரிகையுமே மானிட நீதிக்காய் செய்தி சொல்லும் நிலையைக் காண முடியவில்லை. அழியா எந்த எழுத்திலும் நாம் பேதம் காண முடிந்ததில்லை. அதாவது தால்ஸ்தோயின் இரு சகோதரர்களின் சோகத்தை நம்மில் கவியச் செய்வதாலேயே அவர் வெற்றி பெற்றவராகுகிறார். ஒரு மாற்று இனத்தில் பிறந்ததனால் மட்டும் குழந்தையின் சிரிப்பு கொடியவனின் கொடூரம் அவன் தோட்டத்து மலரின் சிலிர்ப்பு வறுமை வெட்கம்......உன்னில் பாதிப்பைத் தரவில்லையானால் நீ மனிதனேயல்ல.

அது எப்படி இந்த வீரகேசரி தினக்குரலுக்கு மட்டும் 'திருடிய முஸ்லிம் இளைஞர் கைது' எனத்தலைப்பிட மனம் வருகிறது. எந்த மதம் அநியாயம் செய்யச் சொல்லும்? திருடனுக்கு கொலைகாரனுக்கு கொள்ளைக்காரனுக்கு மதச் சாயம் பூசும் மர்மமென்ன? திருடன் கைது என்பது தானே சரியானது. அது நாம் ரெட்டை நாக்குக் கொண்ட நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமற்றகாவடி துhக்கிகளை எழுத்தின் பிதா மகர்களாகக் கொண்டதனாலாய பயன். இல்லாவிட்டால் போலிச் சித்தாந்தங்களுக்காக அன்றாடங்காய்ச்சி ஏழை ஜனங்களின் சாவைவைத்து நாடு கொள்ள உள்ளத்தாகவும் நியாயப்படுத்தியும் ஏ. ஸீயில் உட்கார்ந்தபடி எழுதுகிறவனிடம் வேறென்ன கொள்ள முடியும்.? கிழக்கின் அனேக தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்விட வறுமைக்கும் சிந்தனை வெறுமைக்கும் அரசியல்வாதிகளும் இந்தப் பேப்பர் பொறுக்கிகளுமே காரணம். கூலித் தொளிலாளி பரம்பரையாகவே இன்னும் உழன்று கொண்டிருக்க பெருச்சாளிகள் தன் இழி செயலை இன்னமும் நியாயப் படுத்தியபடி இடைவெளியைக் கூட்டிக் கொண்டே இருக்கிறார்கள். தங்கள் மீது தங்கிய நிலையைப் பேணுவதே தங்களின் இருப்பின் பலம் என்பதை அறிந்த தந்திரசாலிகள் அவர்கள்.இதை அகற்றுவதானால்

மானிடத்தின் மீது பேரன்புகொண்டவராகக் கூட இருக்க வேண்டாம். தன் கடமையை உணர்ந்த அரசியல்வாதிகளை (வியாதிகளை அல்ல) நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எம் மக்களுக்கு மானிட வாழ்வின் பெறுமதி அடுத்தவரை அங்கீகரிக்கும் மனநிலை படிம மனநிலையிலிருந்து விடுபட்டு அநீதிக் கெதிராக ஒன்றுபடுகிறமையையும் வளர்த்தெடுக்கிற நிலையை எழுத்துக்கள் உருவாக்க வேண்டும். அல்லாத விடத்து எற்கனவே பின் தங்கிவிட்ட தமிழ் பேசுகின்ற சமூகம் இன்னும் கீழ் நோக்கியே பயணப்பட வேண்டியிருக்கும். மீளவும் மேள தாளத்துடன் எல்லா உள்ளுhராட்சிகளிலும் குடுகுடுப்பைக்காரர்கள் மேடையிட்டு துவேசம் கக்க வெளிக்கிட்டிருக்கிறார்கள்:மக்களின் பொழுதை மட்டுமல்ல சிந்தனையையும் காவு கொள்ள.இன்னும் எத்தனை காலம்?

a.shaa25@yahoo.com

0 கருத்துரைகள்:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes