Sunday, December 25, 2011

யாழ்ப்பாணத்தை விட்டு எப்பொழுது இந்த இலங்கைத் தமிழ் அரசியல் வெளிவருகிறதோ அன்றுதான் தமிழர்களுக்கு நல்லகாலம் தொடங்கும்.

*நடேசன் *
யாழ்ப்பாண சிவில் சமூகம் என கூறிக்கொண்டு வெளியிட்ட அறிக்கையை படித்தபோது அக்கால விடுதலைப் புலிகளுக்கு அறிக்கைகள் எழுதியவர்களின் எழுத்துப் போல் இருந்தது. இந்த அறிக்கையிலிருந்து ஒரு வார்த்தையில் இவர்கள் யார?; என என்னால் கூற முடியும்.
பாம்புக்கு தலையில் மட்டும் நஞ்சு உள்ளது. தமிழ் அரசியல் சமூகத்தின் மனிதர்களுக்கு நினைப்பிலும் எழுத்தில் நஞ்சு வடிகிறது. இவர்களது இந்தநஞ்சு நிச்சயமாக போரில் தப்பிப் பிழைத்து இருக்கும் சாதாரண தமிழ் மக்களை கொல்லப் போகிறது என்ற பயத்தில் இந்த பத்தியை எழுதுகிறேன்.
அந்த அறிக்கையில் இரண்டு பந்திகளிலிருந்து, இவர்களும் விடுதலைப்புலிகளைப் போல் ஜனநாயகத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு ஜனநாயக சமூகத்தில் உதிரிக்கட்சி என ஒன்று இல்லை. ஒவ்வொரு மனிதனின் கருத்தும் கணக்கெடுக்கப்பட வேண்டியது. மேலும் ஒரு இனம் தனது உரிமையை கேட்கும் போது மத்திய வகுப்பினர் விவசாயிகள் முதலாளிகள் தொழிலாளிகள் என்ற வர்க்கங்கள் மட்டுமல்ல பிரதேச ரீதியாக மக்கள் தேவைகள் ஆராய்ந்து கணக்கெடுக்கப்பட வேண்டும். யாழ்ப்பாண மக்களது தேவைகள் மட்டக்களப்பு வன்னி மாவட்ட மக்களது தேவைகளில் இருந்து மாறுபட்டது. தமிழ்ப் பேசும் மக்கள் என்னும் போது மலையக இஸ்லாமிய ஏன் தற்பொழுது கொழும்பில் வாழும் மக்களையும் அனுசரித்து அவர்கள் தலைவர்களையும் சேர்த்துக் கொண்டே தமிழ் உரிமைகள் பற்றி பேசப்படவேண்டும். 6,40,000 யாழ் குடாநாட்டு மக்கள் மட்டுமோ அல்லது அவர்களது தலைவர்கள் மட்டுமோ ஏனைய தமிழர்களின் தலைவிதியை பேசிய காலம் இறந்தகாலம். நாங்கள் பார்க்கும் நிகழ்காலம் தமிழ்மக்கள் அதாவது 4 சதவீதமானோர் வாழ்வது இலங்கையின் 9.5 வீத நிலப்பரப்பைக் கொண்ட வடக்கு மாகாணம்.
தற்போதைய அரசியல் நிலையை கருத்தில் கொள்ளாமல் வடக்கு கிழக்கு இணைப்பு தமிழ் தேசியம் காணி பொலிஸ் என கடந்த கால கனவுகளில் வாழ்ந்து வரும் வெளி நாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்கள் போல கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேல் எதுவித நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இந்த அறிக்கை மூலம் தமிழ்கூட்டமைப்பினரை ஆட்டிப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட முனைகிறார்கள். இந்த சிவில் சமூகத்தில் .யாழ் மேலாதிக்க தன்மையின் அசலான கருத்தியல் வடிவம் தெரிகிறது. இவர்களில் பலர் முக்கிய புலி ஆதரவாளர்கள். மடுவில் விடுதலைப் புலிகளால் ஷெல் அடித்து பொது மக்கள் கொல்லப்பட்டபோது அதனைக்கண்டிக்காமல் மௌனம் காத்தார் மன்னார் ஆயர். இவரது நடத்தை நேர்மையானது அல்ல. மற்றொரு ஆயர் மக்களுக்காக கொடுக்கப்பட்ட மில்லியன் டொலர் பணத்தை விடுதலைப்புலிகளின் கைகளில் தூக்கிக் கொடுத்தவர். இவர்கள் யார் என்பது அவர்கள் சேவை செய்யும் கர்த்தருக்குத் தெரியும். இவர்களை தமிழர் கூட்டமைப்புக்கும் தெரியும். இலங்கையில்லாத மேற்கு நாடாக இருந்தால் இவர்களுக்கு பயங்கரவாதத்திற்கு துணை போனதற்காக 25 வருடங்கள் சிறைவாசம் கிடைத்திருக்கும் .
இவர்களது அறிக்கை மீண்டும் ஒரு ஆயுதப் போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தின் காரணத்தால்தான் இதை கடுமையாக விமர்சிக்க விரும்புகிறேன். வட்டுக்கோட்டை தீர்மானத்தை தமிழர் விடுதலைக்கூட்டணியின் வைத்த போது எனக்கு 17 வயது .அதன் பின் விளைவு தெரியாமல் போய்விட்டது. ஆனால் 77 இல் உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் இராசலிங்கம் அவர்களுக்காக பாhரளுமன்ற தேர்தலில் பத்து பல்கலைக்கழக நண்பர்களுடன் சென்று வேலை செய்து விட்டு ‘உங்கள் தனிநாட்டில் நம்பிக்கை இல்லை’ என அக்காலத் தலைவர் உடுப்பிட்டி சிவசிதம்பரம் அவர்களிடம் சொல்லிவிட்டு அத்தேர்தலில் வாக்குப் போடாமல் மீண்டும் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு திரும்;பினேன்.
80 களில் இளைஞர்கள் ஆயுதம் எடுத்ததற்கு நியாயமான காரணம் உள்ளது. 83 இல் தமிழர் மேல் திணிக்கப்பட்ட வன்முறை, வெலிக்கடை படுகொலைகளின் பின்பு சிறையில் கூட பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் தமிழர்கள் தற்பாதுகாப்புக்காக ஏந்திய ஆயுதத்தை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். இந்தியா மேற்கு உலகம் ஏன் ஏராளமான சிங்கள மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அதன் பின்; 86 இல் அப்பாவி சிங்கள மக்களின் மேல் பயங்கரவாதத்தை திணித்து சகோதர கொலைகள் மூலம் தற்பாதுகாப்பு போரட்டம் பயங்கரவாதப் போராட்டமாக மாற்றப்பட்டது. இதில் ஒரு விந்தையான விடயம்; இக்காலத்தில் கூட பிரபாகரனோ புலிகளோ தமிழத்;தேசியம் என்ற பதத்தைப் பாவிக்கவில்லை.
வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பொறுத்தவரை மிகவும் இலகுவான கருத்தியல் “சிங்களவர் தமிழர் மேல் வன்முறையை திணித்தார்கள். நான் இவர்களுக்கு அதே மருந்தை கொடுக்கிறேன். மற்ற இயக்கங்கள் இதற்கு தேவை இல்லாமல் அரசியல் மாக்சிசம் எனப் பேசி இவர்கள் சிங்களவரையோ ஆமியையோ கொல்லவும் போவதில்லை. அத்தோடு எனக்கும் அரசியல் அது இது என்ற சொல்லி கரச்சல் படுத்துகிறாரகள்;. இவர்களைத் தட்டிப்போட்டு நான் சிங்களவரைப் பார்த்துக் கொள்கிறேன்.” என்பதுதான்.
இந்த சிம்பிள்டனுக்கு 92 - 95 ஆண்டுவரையும் தமிழ் ஈழம் என்று போரிட்டாலும் தமிழ்த்;தேசியம் என்ற கோட்பாடு இருக்கவில்லை. வெளிநாட்டில் விடுதலைப்புலிகளுக்கு காசு கொடுத்தவர்களுக்கும்; மதியுரைஞர், டாக்டர் என பல பட்டங்கள் வைத்திருந்த பாலசிங்கத்தாருக்கும் இந்த நினைப்பு இல்லை.
92-95 இற்கு இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்;;பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில புத்திஜீவிகளும் மற்றும் கொழும்பில் பத்திரிகை நடத்திய சில இடதுசாரி சிந்தனையினரும் சேர்ந்து புலிப் பயங்கரவாதத்திற்கு தமிழ் தேசிய முலாம் பூசி பின்பு வேலுப்பிள்ளையின் மகன் தேசியத் தலைவராக்கப்பட்டார். நடிகர் இராமச்சந்திரன் கிருஷ்ணசாமி என்பவரால் புரட்சித்தலைவராகியது போல் இதுவும் அமைந்துவிட்டது.
இந்தத் தமிழ் தேசியம் யாழ்ப்பாண மையவாதத்தால் உருவாக்கப்பட்டது. அது கருத்தியலாகியதால்; இது மாற்றுக்கருத்தோ ஜனநாயகமோ அற்ற இயக்கத்துக்கு பொருந்தியது. யாழ்ப்பாண சாதி அமைப்பில் அதாவது குடிமை – அடிமை அமைப்பில் தாழ்த்;தப்பட்ட சமூகத்தின் மேல் காலம் காலமாக ;பாவிக்;கப்பட்ட குருரமான வன்முறை கூராக்கிய ஈட்டி வடிவம் பெற்று இந்த இயக்கத்திற்குள் சென்றது. எதிரானவர்கள் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் எனவும் சிறு நிழல் போன்ற எதிர்ப்பும் கருவிலேயே அழிக்கப்படவேண்டும் என்ற கருத்தியலாக மாறியது. சிங்களமக்களுடன் ஒப்பீட்டு ரீதியில் தாழ்வு மனப்பான்மையுடன் மற்றவர்கள் துன்பப்பட நாம் நாட்டைவிட்டு விட்டு ஓடினோம் என்ற குற்ற மனப்பான்மை கொண்ட புலம் பெயர்ந்தவர்களால்; அளிக்கப்பட்ட பணத்துடன் இந்த தமிழ்த் தேசியம் வளர்க்கப்பட்டது.
;தேசியத் தலைவர்’ என்ற முள்முடியும் தமிழ்த்;தேசிய முலாம் பூசப்படாமல் இருந்தால் சிலவேளையில் சமாதான ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருக்கலாம் அல்லது வேறு ஒருவர் மூலமாவது சமாதானத்திற்கான வாய்ப்;பு உருவாகி இருக்கலாம். பாரிய மனித அழிவுகள் தடுக்கப்பட்டிருக்கலாம்.
நரமாமிசம் உண்டு உடலை வளர்த்தாலும் மூளை வளர்ச்சி பெறாத இராட்சதன் தன்னைத் தானே அழிப்பது போல் சுவரில் மோதி இந்த இயக்கம் அழிந்தது. ஜனநாயகம் அற்ற இந்த அமைப்பு தலை போன பின்பு எச்ச சொச்சமில்லாமல் உலகம் எங்கும் சிதறியது. இதனது கூறுகள் தங்களைத் தாங்களே போட்டி போட்டுக்கொண்டு அழிக்கும்.. அது பற்றிய சந்தேகம் எவருக்கும் இருக்க வேண்டியது இல்லை
பிரச்சினையான விடயம் என்னவெனில் வீட்டுத் தோட்டத்தில் நஞ்சு போட்டு நத்தை இறந்த பின்பு கழற்றி விடப்பட்ட கூடு போல் இந்தத் தமிழ்த்தேசியம் இப்பொழுது கிடக்கிறது. இந்த நத்தை ஓட்டுக்குள் மாக்;சிசம் பேசிய சுரேஸ் பிரேமசந்திரன், முற்றாக இராணுவ வாதம் பேசிய ரெலேவில் இருந்த செல்வம் அடைக்கலநாதன் என எல்லோருமே குடியேறி விட்டார்கள். இதைவிட அமெரிக்காவில் வசிக்கும் உருத்திரகுமாரன் தனது காலையும் விநாயகம் நெடியவன் கோஷ்டிகள் தங்கள் தலைகளையும் இந்த நத்தைக்கூட்டுக்குள் நுழைக்கப் பார்க்கிறார்கள். இது மட்டுமா சில இந்திய சக்திகளும் மேற்கு நாட்டினரும் இந்த நத்தையை உசுப்பி விடப்பார்க்கிறார்கள். டக்ளஸ் தேவானந்தா கூட பிரபாகரன் கெட்ட கொலஸ்ரோல் தான் நல்ல கொலஸ்ரோல் எனக் கூறுவது இந்த நத்தை ஓட்டை முற்றாக கை விட மனமில்லாமல்தான்.
என்னைப் பொறுத்தவரையில் இந்தத் தமிழ்த்தேசிய கருத்தியலை சிம்மாசனம் ஏற்றியவர்கள் ஜுலை 2009 இற்குப்பின் அந்தரத்தில் தொங்கவிட்டு மீண்டும் இரண்டரை வருடத்தின்பின் மீண்டுவந்து தங்கள் யாழ்ப்பாண ஆதிக்கத்தை முருங்கை மரத்தில் ஏற்ற முனைகிறார்கள்.
சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வளவுகாலமும் எங்கே இருந்தார்கள்;?
முள்ளிவாய்க்காலுக்கு அப்பாவிப்பொதுமக்களை கால்வாய்கட்டி கொண்டு சென்ற போது இவர்கள் எங்கு போனார்கள்?
பிரபாகரனின் மகன் ;சார்ள்ஸ் அன்டனி, தப்பியோடியவர்களை சுட்டும் வாள் கொண்டு துரத்திய போதும் நமது மத குருமார்கள் மவுனித்தது ஏன்?
வலயர்மடத்து தேவாலயத்தில் இருந்து பெண்குழந்தைகளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற போது நீங்கள் கர்த்தரின் பேரால் என்ன அறிக்கைவிட்டீர்கள்?
எந்த ஒரு சமுதாயத்திலும் சிவில் சமூகம் மதிப்புக்குரியது. இந்த மூன்று இலட்சம் மக்கள் அகதியாக அல்லல்பட்ட இரண்டரை வருடத்தில் உங்களது செயல்பாடுகள் என்ன என்பதை மக்கள் முன்னால் வைத்து விட்டு அறிக்கையை விட்டிருக்கலாம்.
விடுதலைப்புலிகள் இருக்கும் வரை பொட்டம்மானுக்கு பயந்து பயந்து சீவித்து இப்பொழுதுதான் கூட்டமைப்பினர் சுதந்திரகாற்றை சுவாசிக்கிறார்கள்.
அவர்களை சுயமாக நடவடிக்கை எடுக்க விடுங்கள்.
இப்படிச்சொல்வதனால் நான் கூட்டமைப்பின் ஆதரவாளன் என்று கருதவேண்டாம்.
ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்;;பட்ட அவர்களை நாடுகடந்த ஈழம் பேசுவோரும் மற்றும் நெடியவன் தலைமையிலான குழுவினரும் கைப்பற்றி தங்கள் அரசியலை நடத்த விரும்புகிறார்கள். அந்த கோஷ்டியில் சிவில் சமூகம் சேர்ந்து விட்டது.. சிங்கள சமூகத்திலும் உங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் எதிர்ப்;போராட்டம் நடத்தினால் இதனால் ஏற்படும் விளைவுகள் மீண்டும் ஒரு வன்முறைப்போராட்டத்தையே உருவாக்கும். மீண்டும் ஒரு புலி இயக்கத்தை உருவாக்கி குளிர்காய முற்பட வேண்டாம். அதனால் அதற்கு பலியாவது நீங்களாகக் கூட இருக்கலாம். 77இல் தலைவர் அமிர்தலிங்கம் தனது செயல்களால் 89 களில் தன்னுயிருக்கு ஆபத்து வரும் என்பதை சிந்தித்திருக்கமாட்டார்.
நீங்கள் சொல்லும் இந்த இந்தப்பகிஷ்கரிப்பு விடயம் புதிகாக உங்கள் மூளையில் மலரும் புதிய சாணக்கியம் என பெருமிதம் கொள்ளவேண்டாம். நான் பிறக்க முன்பிருந்தே இதைத்தான் யாழ்ப்பாணத் தமிழன் செய்து கொண்டிருக்கிறான்.
கொஞ்சம் சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டி பார்ப்போம். தமிழர்களுக்கு பகிஷ்கரிப்பு புதியதில்லை. 1931இல் டொனமூர் கமிசனால் உருவான சபையை பகிஷ்கரித்த சேர். பொன் இரமநாதன் குழுவினர் வெள்ளாளர் அல்லாதோருக்கு வாக்குரிமைகிடைக்கக் கூடாது என்றனர். இளைஞர் காங்கிரஸ், இலங்கைக்கு முழு விடுதலை கிடைக்கவில்லை என பகிஷ்கரித்ததால் யாழ்ப்;பாணம், காங்கேசன்துறை , பருத்தித்துறை ,ஊர்காவற்றுறை போன்ற இடங்களுக்கு தேர்தல் நடக்கவில்லை. பின்னர் யாழப்;பாணமக்கள் தாங்கள் தவறிழைத்து விட்டோம் எனச்சொல்லி தேசாதிபதிக்கும் இங்கிலாந்துக்கும் மகஜர் எழுதினார்கள். ஆனாலும்; 1934 ஆண்டில் மீண்டும் நடந்த தேர்தலின்போதுதான் மேற்கண்ட தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இப்படியான முட்டாள்தனமான பகி;ஷ்கரிப்பு இன்றுவரையும் தொடர்ந்து வருகிறது.
இலங்கையில் தமிழ் அரசியல் என்பது காலம் காலமாக நல்ல கணவனுக்காக காத்திருக்கும் பெண் கடைசியில் கன்னி கழியாமல் கல்லறைக்கு போவது போலாகிவட்டது. இதுதான் கடந்த எண்பது வருட சரித்திரம்.
குப்பை மேட்டு சேவல்; அந்தக் குப்பையைச் சுற்றி கொக்கரிப்பது போல்தான் இந்த பகிஷ்கரிப்பு கோஷமும். யாழ்ப்பாணத்தை விட்டு எப்பொழுது இந்த இலங்கைத் தமிழ் அரசியல் வெளிவருகிறதோ அன்றுதான் தமிழர்களுக்கு நல்லகாலம் தொடங்கும்.
* நன்றி* தேனீ

Wednesday, December 21, 2011

இலங்கை முஸ்லிம் ஆண்கள் @ ஈழத்தமிழ்ப்பெண்கள் : தீர்வு..?

முஸ்லிம் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் 'சந்ருவின் பக்கம்' என்ற வலைப்பூவில் சகோ.யோகராஜா சந்ரு என்ற பதிவர், இலங்கை முஸ்லிம்கள் சிலர் குற்றங்களில் ஈடுபட்டதாக புதிய சில குற்றங்களை தகவல்களாக பகிர்ந்து இருந்தார். "ஒரு சில நன்னெறி தவறிய தீய முஸ்லிம்களின் குற்றச்செயல்களால், இலங்கையின் மொத்த முஸ்லிம் ஆண்களையும் குற்றம் சாட்டுவதாக உள்ளது இந்த தலைப்பு" என்ற விமர்சனம் பலரிடம் இருந்து வரவே அந்த தலைப்பில் உள்ள முதல் வார்த்தையை மட்டும் நீக்கிட்டார். எனினும் தமிழ்மணத்தில் பதிவிட்ட தலைப்பை மாற்ற இயலாது என்பதால் தொடர்ந்து ஹிட்ஸ் மழை அந்த தலைப்புக்கு குவித்தது. இந்த சூடான தலைப்பால் அந்த பதிவு தமிழ்மணத்தின் சூடான இடுகையின் உச்சத்தில் போய் உட்கார்ந்து கொண்டுவிட்டது.

முஸ்லிம்கள் தீயவர்களாக இருப்பது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் தவறானது. பொதுவாக தற்போது இவ்வுலகில் மற்ற பிற சமுதாயத்தவர் ஒரு குற்றத்தை செய்ய... அதே குற்றத்தை முஸ்லிம்கள் செய்தால் மட்டும்... அது மிகப்பெரிய செய்தியாவது மட்டுமின்றி பொதுப்பார்வையில் அது அஜீரணத்தை ஏற்படுத்துகிறது. முஸ்லிம்கள் மீது கோபம் அடைய வைக்கிறது.

உதாரணமாக, இவ்வுலகில் ஏனைய பிற சமூக சமய நாத்திக சித்தாந்த தீவிரவாதிகள் பயங்கரவாதங்களில் ஈடுபட்டால் அவர்களின் சமயம் சேர்த்து குற்றம் சாட்டப்படுவது இல்லை. ஆனால், 'இஸ்லாமிய பயங்கரவாதம்' என்ற பதம் மட்டும் ஊடகத்தில் மிகவும் பிரபலம் என்பதை அறிவீர்கள்.

இதே அடிப்படையில், எத்தனையோ கேவலமான ஆபாச பின்னூட்டங்கள் அனுப்பப்பட்டு இந்த பதிவுலகில் பிரசுரம் ஆகியுள்ளன. ஆனால், முஸ்லிம் பதிவர் ஒருவர் அப்படி செய்துவிட்டால்... "எனக்கு அநாகரிக பின்னூட்டம் போட்ட முஸ்லிம் அன்பர்" என்று தனிப்பதிவு போட்டு அவரை தாளிப்பது நடக்கிறதா இல்லையா..? (அந்த முஸ்லிம் பதிவர் தன் தவறுக்கு மனம் வருந்தி அந்த பதிவரிடம் மன்னிப்பு கேட்டபின் அந்த பதிவு நீக்கப்பட்டது)

இதுபோன்று முஸ்லிம்களுக்கு மட்டும் தனிக்கண்ணோட்டம் என்றால் ஒரு நோக்கில் அது அநீதிதான் என்றாலும்... இதை இன்னொரு நோக்கில் நான் வரவேற்கிறேன்..!?!

முஸ்லிம்கள் என்றால் மிகவும் நல்லவர்களாக வாழ வேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள். முஸ்லிம்களிடம் இறைவன் எதிர்பார்ப்பதும் இதைத்தான்..! :-))

இதுபோல 'கெடுபிடி கடிவாளம்' இருந்தால் தான் குற்றம் செய்ய எத்தனிக்கும் ஓரிரு தீய முஸ்லிம்கள் கூட அதனை செய்ய தயங்குவார்கள். இந்த அடிப்படையில் சகோ.சந்ரு பதிவின் தலைப்புக்கு எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. மாறாக வினவு போன்றவர்கள் போல அதே பதிவுக்கு "இஸ்லாத்தின் காமவெறிக்கு இரையாகும் ஈழத்தமிழ்ப்பெண்கள்" என்று முஸ்லிம்கள் செய்யும் குற்றத்துக்கு இஸ்லாமின் மீது அவர் பழிபோட்டிருந்தால் நிச்சயம் நான் கண்டனம் தெரிவித்திருப்பேன்.

சரி..., அந்த பதிவில் சகோ.சந்ரு எழுதி இருக்கும் முக்கியமான சில விஷயங்கள் கீழே சிகப்பு எழுத்துக்களில் தரப்பட்டு உள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திலே நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் இளம் விதவைகள். இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக இருக்கும் விதவைகளும் அதிகமாக இருக்கின்றனர். மிகவும் இளம் வயதில் திருமணம் முடித்து கணவனை இளந்த இளம் பெண்களைப் பொறுத்தவரை. பலரால் தமது உணர்ச்சிகளை இளம் வயதில் கட்டுப்படுத்த முடியாத வயதில் இருக்கின்றனர். (இவர்களுக்கான வடிகால் என்ன என்ற தீர்வை சகோ.சந்ரு சொல்லவில்லை) இதனைப் பயன்படுத்தி பலர் காம வேட்டையாடி வருகின்றனர்.
மறு புறத்திலே குடும்ப சுமையை தாமே சுமக்க வேண்டிய நிலையில் பல பெண்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களைப் பொறுத்தவரையில் வருமானம் என்பது இல்லை. இதன் காரணமாக தமது கஸ்ரங்களை, வறுமையை போக்க உழைப்புக்கான வழியாக விபச்சாரங்களை பல பெண்கள் நாடிச் செல்கின்றனர். (இதை ஏனோ தவறாகவோ ஒழுக்க குறைபாடாகவோ கேவலமாகவோ அறிவித்து கண்டிக்கவில்லை சகோ.சந்ரு)
இவ்வாறான விடயங்களுக்கு, விபச்சாரத்துக்கு, தமது காம இச்சைகளை தீர்த்துக் கொள்வதற்கு தமிழ் பெண்களை பயன் படுத்துவது. முஸ்லிம் ஆண்களாக இருக்கின்றனர். இவ்வாறான தமிழ் பெண்களுக்கு பணம் கொடுத்து வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று தமது காம இச்சைகளை தீர்த்துக் கொள்கின்றனர். இவற்றில் பரவலாக முஸ்லிம் வர்த்தகர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். (இதை எப்படி தடுப்பது என்பது குறித்து ஒன்றும் கூறவில்லை சகோ.சந்ரு) அவர்கள் பற்றிய விடயங்களையும். ஆதாரங்ளுடன் வெளியிட நாம் தயங்கப் போவதில்லை.
இவ்வாறான சமூக சீர்கேடுகளை தொடர விடுவது எமது சமூகத்தின் எதிர்கால நிலையை கேள்விக்குறியாக்கிவிடும். சின்னச்சின்ன பிரச்சினைகளை எல்லாம் பெரிது படுத்தி அறிக்கையிட்டுக் கொண்டிருக்கின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் மௌனம் சாதிப்பது ஏன்? ஆனாலும் சமூக அக்கறை கொண்ட நாம் இவ்வாறான சமூக சீர் கேடுகளை இனிமேலும் தொடர விடக்கூடாது. (சகோ.சந்ருவினது எல்லாமே நியாயமான ஆதங்கங்கள்..! இவர் கூறாவிட்டாலும் நாம் சில தீர்வுகளை முன்வைக்கிறேன்.)
இதனைத்தொடர்ந்து நடந்த மூன்று குற்றச்சம்பவங்களை விவரித்தபின்னர் பதிவை முடிக்கிறார்.

சகோ.சந்ருவின் குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில்,

முதற்கண், முஸ்லிம் ஆண்களின் காம வெறிக்கு எனது வன்மையான கண்டனங்கள்..!

விபச்சாரத்தில் ஈடுபடும் ஈழத்தமிழ்ப் பெண்களுக்கும் எனது கடும் கண்டனங்கள்..!

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படி குற்றம் செய்யும் இந்த இரு தரப்பினருக்கும் நாம் கண்டனம் தெரிவிப்பதோடும் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபமும் வருத்தமும் தெரிவிப்பதோடு நின்று விடுவதால் பலன் ஒன்றுமே இல்லை.

இறையச்சம் இல்லாத நன்னெறி தவறிய இந்த முஸ்லிம் ஆண்களின் பயங்கரமான குற்றங்களுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது..?

அடுத்து கணவனை இழந்த ஈழ விதவைப்பெண்களை விபச்சாரத்திலிருந்து மீட்பது எப்படி..?

ஈழப்பெண்கள் இனியாரும் புதிதாக விபச்சாரம் பக்கம் போகாமல் தடுப்பது எப்படி..?

இதற்கு எல்லாம் சரியான நிரந்தர தீர்வுதான் என்ன..?

இந்த கோணத்தில் சகோ.சந்ரு பயணிக்கவில்லை என்றாலும் நாம் தீர்வு பற்றி சிந்திப்போம்.

இது ஒன்றும் புதிய தீர்க்க முடியாத விடை சொல்லப்படாத பிரச்சினை அல்ல என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

தீர்வு-1

முஸ்லிம் ஆண்கள் இதுபோன்ற பாலியல் பலாத்கார வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டாலோ அல்லது விபச்சாரம் போன்ற குற்றங்களுக்கு தரகர் மாதிரி செயல்பட்டாலோ கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும். சும்மா ஒருவருஷம்... ஏழு வருஷம்.. எல்லாம் வேலைக்காகாது. இலங்கையில் முஸ்லிம்களுக்கு என்று "தனி சிவில் சட்டம்" இருப்பது போன்று முஸ்லிம்களுக்கு என்று "தனி கிரிமினல் சட்டம்" கொண்டுவரச் சொல்லி ஈழமக்கள் இலங்கை அரசிடம் விண்ணப்பித்து, அதுபோன்ற நெறிதவரும் முஸ்லிம் ஆண்களுக்கு இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் குற்றங்களுக்கு ஏற்றவகையில் மரணதண்டனை கொடுக்க வைத்தால்... ஈழப்பெண்கள் தப்பலாம்..!

சகோ.சந்ரு தன் பதிவில் சுட்டிக்காட்டிய அந்த மூன்று தீய முஸ்லிம் ஆண்களின் குற்றம் ஐயத்துக்கிடமின்றி நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டு விட்டால்... அந்த மூன்று பேருக்கு மரணதண்டனை விதித்தாலே போதும்..! இனி அது போன்ற குற்றத்தை இனியொரு... ஒரே ஒரு தீய முஸ்லிம் கூட செய்ய... இல்லை... இதுபற்றி சிந்திக்கக்கூட மாட்டான். நல்ல முஸ்லிம் என்பவன் சட்டம் என்ற ஒன்றே இல்லாவிட்டாலும்கூட இறையச்சம் கொண்டு இன்னொரு பெண்ணை தீய பார்வை கொண்டு நிமிர்ந்து கூட பார்க்க மாட்டானே..?

தீர்வு-2

விபச்சாரம் புரியும் ஈழத்தமிழ்ப்பெண்களுக்கு அது தவறு என்றும் குற்றம் என்றும் அறிவுறுத்தி அதனால் மருந்தில்லாத தீராத எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் பரவும் என்றும் விழிப்புணர்வூட்டி பின்னர் அதில் ஈடுபடும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும். சும்மா 'பெட்டி கேஸ்' போல அபராதம் எல்லாம் வேலைக்கு ஆகாது. நீண்டகாலம் சிறைத்தண்டனை நன்று. சோற்றுக்காத்தானே இதை செய்கிறார்கள்..? சிறையில் மூன்றுவேளை சோறு கிடைக்கும் அல்லவா..?

தீர்வு-3

விபச்சாரத்தின் பக்கமே செல்லாத விதவைகளுக்கு வாழ வழி..? இலங்கை போன்ற ஒரு நாட்டில், திடீரென லட்சக்கணக்கில் கணக்கில் வேலைவாய்ப்பை ஏற்படுத்த இயலாது. அப்படியே இயன்றாலும், அவை வயிற்றுப்பசிக்கு மட்டுமே தீர்வாக அமையும். எனவே, விதவை மறுமணம் ஊக்குவிக்கப்படல் வேண்டும். ஆனால், சகோ.சந்ருவின் பதிவின் அடிப்படையில், மட்டக்களப்பு என்ற ஒரே ஒரு மாவட்டத்திலேயே 40,000க்கும் மேல் விதவைகள் இருந்தால்... ஈழம் முழுவதும் எத்தனை பேர் இருக்க வேண்டும்..? அத்தனை பேருக்கும் எப்படி தனித்தனி மாப்பிள்ளை கிடைப்பார்கள்..?

ஆக, இதுபோன்று பலவருடங்கள் போர் நடந்து முடிந்த ஒரு நாட்டில் ஆண்மக்கள் எண்ணற்றோர் மடிந்து ஆண்கள் எண்ணிக்கையில் வெகுவாக குறைந்து... விதவைகளும் முதிர்கன்னிகளுமாக பெண்மக்கள் மிகுதியாகி... இப்படியான ஒரு குழப்ப சூழல் ஏற்படுவது இயல்பே..! இதொன்றும் புதிய சூழல் இல்லை. 1400 ஆண்டுகால பழசுதான்..! இப்போது, மாப்பிள்ளை பற்றாக்குறை என்று இளம் விதவைகளை திருமணத்திலிருந்து தள்ளி வைக்க முடியாது. இந்நிலையில் விதவை மறுமணம் என்பதும் ஒரு பெண்ணுரிமை.

இப்படியான கட்டத்தில், "இந்த குழப்ப நிலைமையில் இதற்கு என்ன தீர்வு" என்றுதான் நாம் சிந்திக்க வேண்டும். போரில்லாத சகஜ நிலையில் உள்ள வாழ்க்கையின் வாழ்வியல் தீர்வை இங்கே சட்டமாகவோ மதச்சடங்காகவோ வலுக்கட்டாயமாக திணிக்கக்கூடாது. அது இயங்கியல் ரீதியாக நடவாது. அப்படிச்செய்வதால்தான் சகோ.சந்ரு தன் பதிவில் குறிப்பிட்டிருந்த குற்றங்கள் நடந்தன. நடக்கின்றன. நடந்தே தீரும்.

இதற்கு என்ன செய்யலாம்..? தமக்கு இன்னும் இளம் வயதும், செல்வமும், சம்பாரிக்கும் ஆற்றலும், உடல்திடமும், தாராள மனமும் கொண்ட ஈழத்து ஆண்கள் நிறைந்த மனதோடு தாமாக முன்வந்து வரதட்சினை சீர் போன்ற ஏதுமின்றி ஈழத்தமிழ் விதவைகளை அவர்களின் குழந்தைகளோடு எவ்வித நிபந்தனையுமின்றி முதல் தாரமாகவோ, இரண்டாம் தாரமாகவோ, மூன்றாம் தாரமாகவோ மணக்க முன்வரவேண்டும்..!

இதொன்றும் புதிய தீர்வு இல்லை. 1400 ஆண்டுகால பழசுதான்..! இதில் வரக்கூடிய ஒரே ஒரு பெரிய எதிர்ப்பு முதல் மனைவியிடமிருந்து வரலாம். தன் கணவனை போரில் இழக்காத அதிர்ஷ்டசாலிகளான அவர்கள், சமூகத்துக்காக பெருந்தன்மையுடன் தம் ஈழ சகோதரிகளுக்காக தம் வாழ்வை பகிர்ந்தளித்து விட்டுக்கொடுக்க வேண்டும்.!

அதாவது... ஈழப்பெண்களும் சமூகமும் மதத்தலைவர்களும் சட்டமும் பல 'சிலதார மணம்' செய்துகொள்ள பல ஆண்களை அனுமதிக்க வேண்டும்..!

ஈழத்தைவிட பன்மடங்கு பாதிக்கப்பட்ட நாடு இராக் என்பதை அறிவீர்கள். பல 'சிலதாரமணம்' இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாயினும், 1959-ம் வருடம் முந்தைய ஆட்சியாளர் அப்துல் கரீம் அல் காசிம் என்பவரால் இராக்கில் சட்டப்படி அது (polygamy) தடை செய்யப்பட்டு இருந்து வந்தது..!!! ஆனால், அந்த தடை இவ்வருடம் வேறு வழியே இன்றி நீக்கப்பட்டதோடு மட்டுமின்றி, ஒரு மனைவிக்கு மேல் விதவைகளை திருமணம் செய்யும் ஆண்களுக்கு எக்கச்சக்கமாக பொருளாதார நிதியுதவியை செய்ய இராக் அரசே முன்வந்துள்ளது..!!! காரணம்: அங்கே போரின் விளைவால் பத்து லட்சத்திற்கும் அதிகமான இளம் விதவைகள் உள்ளனர்.


Iraq toys with polygamy as solution for war widows
By Roula Ayoubi BBC News, Baghdad 26 January 2011
Years of conflict in Iraq have left the country with more than one million war widows and a shortage of young unmarried men – pressures that may be bringing about the return of polygamy.
Politicians have suggested financial incentives for men who marry widows.


Polygamy Returns to Iraq ; Half a man is better than none?
By Will Offensicht | March 4, 2011
"I used to feel vulnerable with no support, afraid that anyone could attack me and anyone could harass me," she says.
"A man's protection is like a shelter. And this is what a woman needs from a man." she, the war widow adds

Thanks - http://pinnoottavaathi.blogspot.com/

Tuesday, December 20, 2011

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நோக்கிய சிவில் சமூகத்தினது கோரிக்கை சாமானிய மக்களின் உளவிருப்புகளின் பிரதிபலிப்பு அல்ல.

அண்மையில் சிவில் சமூகத்தினர் எனும் பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நோக்கி ஒரு பகிரங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையானது கொண்டுள்ள விடயதானங்கள் பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதோடு பொதுமக்களிடையே பெரும் குழப்பநிலையையும் தோற்றுவிக்கத்தொடங்கியுள்ளது.

முப்பது வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மீள உயிர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. நீண்டகால யுத்தத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்ட அப்பாவி மக்களின் சின்னாபின்னமாக்கப்பட்ட வாழ்வு எதிர்காலம் மீதான நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மெல்ல மெல்ல நகர ஆரம்பித்துள்ளது.

வடக்கு கிழக்கு மக்கள் பிரிவினைவாதத்தையும் வன்முறைக் கலாசாரத்தையும் மறந்து இலங்கையராக பெரும்பான்மையின மக்களுடன் ஐக்கியப்பட்டுவாழ தலைப்பட்டுள்ளனர். நாட்டில் குடிகொண்டிருந்த பகைமை உணர்வுகளும் இனக்குரோதங்களும் பழங்கதையாய்ப்போய் இனங்களிடையேயான பரஷ்பர புரிதலும் இன நல்லிணக்கமும் மேம்பட்டுவருகின்றன. இந்தநிலையில்தான் தமிழ் மக்கள் சார்பில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தினைக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரச தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றது. இப்பேச்சுவார்த்தைகள் இடையிடையே முறிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவருகின்றபோதிலும் மீண்டும் மீண்டும் நம்பிக்கையுடன் கூட்டமைப்பினர் அரசுடனான பேச்சுக்களை தொடர்துகொண்டே வருகின்றனர். அதனைத் தொடர்வதைத் தவிர வேறு வழியேதும் இல்லை என்பதை அமெரிக்காவரை சென்று களைத்துவிட்ட கூட்டமைப்பினரும் உணர்ந்துகொண்டதனால்தான் என்னவோ அரசுடன் பேசி இணக்கப்பாடு ஒன்றைக்காணும் முயற்சியில் கூட்டமைப்பினர் இறங்கியுள்ளனர் எனத் தெரிகின்றது.

இதற்கிடையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றைக் கூட்டுகின்றேன், அங்கே அனைத்து தமிழ் கட்சிகளும் ஒருமித்த தீர்வொன்றுடன் வந்து முன்வையுங்கள்;. அதை அடிப்படையாக வைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என்று ஜனாதிபதியும் அடிக்கடி கூறியுள்ளார். இந்திய தரப்பும் அதையே வேண்டி நிற்பதாக அறிய முடிகின்றது. கடந்தகாலங்களில் ஜனநாயகப் பாதையில் பயணித்திருந்த தமிழ் கட்சிகள், அல்லது ஜனநாயகப் பாதைக்கு திரும்பிய தமிழ் கட்சிகள் ஏதாவது தீர்வை முன்வைக்கின்ற வேளைகளிலோ ஏற்றுக்கொள்ளுகின்ற வேளைகளிலோ அதற்கு புலிகள் முட்டுக்கட்டை போட்டு வந்திருந்திருந்தனர். அதிர்ஸ்ட வசமாக அந்த இக்கட்டான நிலைமை இன்றில்லை. இந்த சூழலை பயன்படுத்தி ஏதாவது ஒரு குறைந்தபட்ச தீர்வில் தமிழ் கட்சிகள் ஒன்றிணையும் வாய்ப்புக்கள் அதிகரித்திருக்கின்றன. இப்படியானதொரு சூழலை பயன்படுத்திக்கொள்ள கூட்டமைப்பினர் மனதார முன்வருவார்களா என்கின்ற கேள்விகள் ஒருபுறமிருக்க பெரும்பான்மையான மக்களின் உளவிருப்பம் அதைநோக்கியே காணப்படுகின்றது. அதை உணர்ந்துகொண்டதனால்தானோ என்னவோ கூட்டமைப்பினரும் அப்படியொரு தீர்வை நோக்கி நகரவேண்டிய நிலைமையில் இருக்கின்றர்கள்.

முதலில் தம்மோடு மட்டுமே அரசு பேசவேண்டும் என்று கூட்டமைப்பினர் புலிகளின் பாணியில் மார்பு தட்டிக்கொண்டாலும் அது ஜனநாயகத்துக்கு விரோதமான ஏகபிரதிநிதித்துவ கோரிக்கை என்பதனால் அதையிட்டு கூட்டமைப்பினரது இறுக்கம் நெகிழும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே நடத்தப்படப் போகும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுத்து முதலில் ஏதாவதொரு தீர்வினை ஏற்றுக்கொள்வதையிட்டு சிந்திப்பார்கள் என்று மக்கள் நம்பியிருக்கின்றனர். இதுவே எமது மக்களின் இன்றுள்ள அவசியத் தேவையுமாகும்.

இந்தநிலையில்தான் சிவில் சமூகத்தின் சார்பில் கூட்டமைப்பினரை நோக்கிய மேற்படி கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை வெளியாகியுள்ளது. இவ்வறிக்கையானது கொண்டுள்ள கோரிக்கைகளின் சாராம்சம் பேச்சுவார்தைகளின் ஊடாக கூட்டமைப்பினருக்கும் அரசுக்குமிடையில் எந்தவிதமான தீர்வும் எட்டப்பட்டுவிடக்கூடாது என்பதை நோக்கியதாகவே காணப்படுகின்றது. மீண்டும் மீண்டும் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்று புலிகளின் பாணியில் பிரிவினைவாதக் கருத்துக்கள் மீது கட்டப்பட்டவையாகவே இக்கோரிக்கைகள் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி இவ்வாறான தூண்டுதல்களும், உருவேற்றுதல்களும் மென்மேலும் முரண்பாடுகளை வளர்க்கவே உதவும். தீர்வுகளை நோக்கி இருதரப்பினரும் நகரும் வாய்ப்பினை அது சீர்குலைக்கும்.

சிவில் சமூகத்தின் அரசியல் வெளிப்பாடுகள் என்பது ஒரு சமூகப்பொறுப்புமிக்கதாக மிளிரவேண்டும். அமைதியையும் சமாதானத்தையும் நோக்கி மக்களையும் கட்சிகளையும் நாட்டையும் வழிநடத்த அந்த வெளிப்பாடுகள் முயலவேண்டும். ஆனால் இங்கோ வெளியாகியுள்ள சிவில் சமூகத்தின் அறிக்கையானது இன்நோக்கங்களுக்கெல்லாம் எதிர்மாறானதொன்றாகவே காணப்படுகின்றது என்பதுதான் ஆச்சரியமாகும்.

சமாதானம் என்பதோ தீர்வு என்பதோ இருதரப்பினரதும் பரஷ்பர விட்டுக்கொடுப்புகளிலும், சமரசங்களிலும் இருந்தே கட்டியெழுப்பப்பட வேண்டியதொன்றாகும். அதைவிடுத்து விடாப்பிடியாக நிற்பவர்களால் ஆக்கபூர்வமாக எதையுமே செய்யமுடியாது. புலிகள் இருந்த காலத்தில் கூட்டமைப்பினரை தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற தீவிரவாத பிரிவினைக் கொள்கைகளுடனேயே அவர்கள் வழிநடத்தினார்கள். அதன்காரணமாகவே பேச்சுவார்த்தைகளில் தீர்வுகள் எட்டப்பட முடியாமல் போயிற்று. பல பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் கொண்டுவரப்பட்ட தீர்வுப்பொதியில் இன்றைய மாகாணசபைகளைவிட கூடிய அதிகாரங்கள் அடங்கியிருந்தன. ஆனாலும் புலிகளின் அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு தமிழ்தேசியக் கூட்டமைப்பினரே அத்தீர்வுப்பொதியை நிராகரித்தனர். அன்று கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து சந்திரிகாவின் தீர்வுப்பொதியை எதிர்த்திருக்காவிட்டால் அமைதியும், தீர்வும் எப்போதோ ஏற்பட்டிருக்கும். அது மட்டும் அன்றி அதன்பின்னரான எவ்வளவோ அழிவுகளும் இழப்புகளும் தவிர்க்கப்பட்டும் இருக்கும். அது போன்ற அரிய பல சந்தர்ப்பங்களை கூட்டமைப்பினர் நிராகரித்து வந்தமைக்கு புலிகளது தீவிரமான தேசியவெறியும், இறுக்கமான போக்குகளுமே காரணமாயின. புலிகளைப் பொறுத்தவரையில் வன்முறைமீதும் பயங்கரவாத நடவடிக்கைகள் மீதும் நம்பிக்கை கொண்ட அரசியல் ஞானசூனியங்கள் அவர்கள். அவர்களால் அப்படித்தான் வழிகாட்டமுடியும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் இன்று வெளியாகியுள்ள கூட்டமைப்பினரை நோக்கிய அறிவுறுத்தல் கோரிக்கைகள் ஒரு சிவில் சமூகத்தின் பெயரால் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அன்றைய புலிகளது அறிவுறுத்தல்களுக்கும் இன்றைய சிவில் சமூகத்தினரது அறிவுறுத்தல்களுக்கும் இடையில் எவ்வித வேறுபாடுகளும் தெரியவில்லை. எப்படியான ஆலோசனைகளையும் அறிவுறுதல்களையும் புலிகள் கடந்தகாலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழங்கி எந்தவொரு சமாதானத்தையும் எட்டமுடியாதவாறு தவறாக வழிநடாத்தினார்களோ அதிலிருந்து சற்றேனும் பிசிறாமல் அதே பாணியிலான அறிவுறுதல்களே ஆனோசனைகள் எனும் பெயரில் இன்று இந்த சிவில் சமூகத்தினராலும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதற்கு முழு சான்றாக சிவில் சமூகத்தினரின் கோரிக்கைகளில் காணப்படும் தேர்தல் பகிஷ்கரிப்பு அறிவுறுதல்களைக் கொள்ளலாம். அதாவது வடமாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படும் பட்சத்தில் அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பகிஷ்கரிக்க வேண்டும் என்று அப்பட்டமாக கேட்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் என்பன ஜனநாயகத்தின் உயிர்நாடிகள் என்பார்கள் அரசியல் அறிஞர்கள். ஜனநாயக ஆட்சியொன்றின் முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்றாகவே தேர்தல்களும் வாக்களிப்புகளும் நடாத்தப்படுகின்றன. அத்தகைய தேர்தலை அதுவும் சுமார் 25 வருடங்களின் பின்னர் மறுக்கப்பட்டிருந்த வடமாகாண மக்களுக்கான அந்த வாய்ப்பினை பகிஷ்கரிக்கக் கோருவதென்பது நிட்சயமாக ஒரு சிவில் சமூகத்தினரின் பொறுப்புமிக்க கடமையாக இருக்கமுடியாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இந்த நிலையில் வடகிழக்கு இணைப்பு பற்றி மேற்படி சிவில் சமூகத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கையானது கிழக்கு மாகாணத்தின் இயல்புநிலையை சீர்குலைக்கும் முயற்சியாகவே காணப்படுகின்றது. அதுமட்டும் அன்றி கிழக்குமாகாண மக்களின் இறைமைக்கு எதிரான கருத்தாகவே இதனை நாம் காண்கின்றோம். கிழக்கில் மறைந்திருக்கும் தேசியவாத உணர்வலைகளை கிளறிவிட்டு தமிழ் தேசியம், முசுலிம் தேசியம் என்ற குரோதங்கள் மீள எழுவதற்கு இந்த இணைப்புகோரிக்கை வழிவகுக்க நேரிடும். அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் யாரும் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேசமாட்டார்கள்.

சுமார் அரைநூற்றாண்டு காலத்தால் உழுத்துப்போன வடக்கு – கிழக்கு இணைப்பு கோரிக்கையை தூசுதட்டி எடுத்து சிவில் சமூகத்தினர் எனும் பெயரில் மீண்டும் அரசியல் முக்கியத்துவம் கொடுக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளமையானது கிழக்கு மாகாண மக்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப்போடும் முயற்சியாகும். இவ்விணைப்பு கோரிக்கையானது காலமாகிவிட்ட கதை என்பதை கூட்டமைப்பினரும் புரிந்துகொண்டுள்ளனர் என்பதனால்தான் “பிரிந்த கிழக்கில் போட்டியிட மாட்டோம்” என்று அன்று கூறியவர்கள், “கிழக்கு மாகாணசபை என்ற ஒன்றே எம்மைப்பொறுத்தவரை இல்லை” என்றவர்கள் இன்று தனித்த வடக்கு மகாணசபைக்கு போட்டியிட தயாராகிவருகின்றனர்.

இன்று கிழக்கு அமைதிப் பூங்காவாக இருக்கின்றது. அபிவிருத்தியில் கிழக்கு முதல்வர் மன்னராக திகழ்கின்றார் என்று கூட்டமைப்பு எம்பி செல்வராசாவே புகழாரம் சூட்டியிருக்கின்றார். வடக்கும் கிழக்கும் அடாத்தாக இணைக்கப்பட்டிருந்த 22 வருடங்களும் உக்கிரமடைந்திருந்த தமிழ் – முசுலிம் குரோத நிலை இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இனநல்லுறவு மேலோங்கியுள்ளது.

இந்த நிலையில் வடக்கு கிழக்கு இணைவு பற்றி மேற்படி சிவில் சமூகத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கையானது கிழக்கு மகாணத்தின் இயல்பு நிலையை சீர்குலைக்கும் முயற்சியாகும். கிழக்கில் மறைந்திருக்கும் தேசியவாத உணர்வலைகளை கிறளிவிட்டு தமிழ் தேசியம், முசுலிம் தேசியம் என்று குரோதங்கள் மீள எழ இந்த இணைப்ப கோரிக்கை வழிவகுக்க நேரிடும். அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் யாரும் இன்றைய நிலையில் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைப்பது பற்றி பேசமாட்டார்கள். ஆனால் யேசுவின் பெயரால் சமாதானம் செய்யும் பேராயர் தலைமையிலான இந்த சிவில் சமூகத்தினர் அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றார்கள். தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்று சாமானிய மக்களின் வாழ்வியல் தேவைகளுக்கு குழிபறிக்கும் இவ்வரசியல் கோசங்களை இந்த சிவில் சமூகத்தினர் முன்வைத்திருப்பது மிகவும் வேதனைமிக்க செயலாகும்.

ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி

Wednesday, December 14, 2011

பிரபாகரன்:ஓர் அவலத்தின் அடையாளம்

„ஒரு தியாகி துரோகி ஆவதற்கும், ஒரு துரோகி தியாகி ஆவதற்குமான இடைவெளி, சீன மதிற்சுவர் போன்று பாரியதல்ல“

எமது கட்டுரைகள் இன்றைய தமிழ் அரசியல் நீரோட்டத்துடன் (Trend) ) கலப்பதாக இல்லை என்றும், அதே சமயம் மக்களை ஈர்த்துக்கொள்ளும் வகையில் மென்மையாகவும் அமையவில்லை என்றும் பல நண்பர்களும், உறவுகளும் நேரடியாகவும், பின்னோட்டங்கள் வழியாகவும் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அவர்களுக்கு எமது நன்றிகள்.

எம்மைப் பொறுத்தவரை, ஈழத் தமிழர்கள் மத்தியில், ஈ வே ரா பெரியாரை மீண்டும் பிறபிக்கவேண்டிய, மீளுயிர்ப்புச் செய்யவேண்டிய காலமிது. தமிழர் சிந்தனை முறைமையில் ஓர் சம்மட்டி அடியைக் கொடுத்தவர் பெரியார். இச் சம்மட்டி அடி முறைமைதான் தமிழ் சமூகத்தை விழிக்கவைத்தது! நிலப்பிரபுக்கள் காலத்துக்கும் அதற்கு முந்தையதுமான தமிழர் அல்லது திராவிடர் கலாச்சாரச் சித்தாந்தங்ளை மிகுந்த துணிச்சலுடன் கேள்விக்கு உட்படுத்தினார், விவாதங்களை முன்னெடுப்பதற்கான நெம்புகோல்களை உருவாக்கினார் ஈவேரா பெரியார். அப்போது, பெரியார் சுயநோக்கங்களைக் கொண்டிருக்கவுமில்லை, சுயலாபத்தை எதிர்பார்த்திருக்கவுமில்லை. 1968ல் யாழ்ப்பாணச் சாதியச் சிந்தனையை சிதறடிப்பதற்குக் கால்கோலாக அமைந்ததும் இதே சம்மட்டி அடிகள்தான். இதை துணிச்சலுடன் கையிலெடுத்தவர்கள் நா. சண்முகதாசனும் அவர் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியுமே!

இன்று, 60 ஆண்டுகால தமிழ்த் தேசிய சிந்தனை முறைமை மீதும், 30 வருடங்கள் கோலோச்சிய புலிகளின் ஆளுமை மீதும் அதிர்ச்சியூட்டும் வகையில் மின்சாரத்தைப் பாய்ச்சவேண்டிய காலமிது. இதே 60 ஆண்டு காலங்கள் இலங்கைத் தீவு முழுமையும் கோலோச்சிய சிங்கள தேசியத்தின் ஆளுமையையும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய காலமும் இதுதான். ஆனால் உள்ளகரீதியில் அவர்களுக்கான தேவையும் அவசியமும் கனிவதற்கு இன்னும் காலம் இருக்கிறது.; கலாச்சாரரீதியான, கருத்தமைவு முறைமையிலான எமது நடவடிக்கைகளின் வலிமையும் பெறுபேறுகளும்தான் அவர்கள் மீது பாதிப்பை உண்டுபண்ணும். அவர்கள் தங்களைத் தாங்களே கேள்விக்குள்ளாக்கும் காலத்தையும் அதுவே (எமது நடவடிக்கைகளின் வலிமையும் பெறுபேறுகளும்தான்) கனியவைக்கும்.

மேற்படி வகையிலான ஒரு பிறப்புத்தான் „பிரபாகரன்: ஓர் அவலத்தின் அடையாளம்“ எனும் இத் தேடல்! இக் கட்டுரையை வாசிப்பவர்கள், மே 18 இயக்கத்தின் வெளியீடாக கனடாவில் இருந்து வெளிவந்திந்த „வியூகம்“ அறிவுபூர்வ அரசியல் சஞ்சிகையில் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் பற்றியும் வந்திருக்கும் கட்டுரையையும் சேர்த்து வாசிப்பது சிறப்பு! மேலும் இது போன்ற கட்டுரையை அவருடன் இருந்து கூடப் பழகியவர்கள் யாராவது எழுத்தத் துணிந்தால் அவர்களையும் நாம் மனமார வரவேற்கின்றோம்.

இலங்கையில் யாழ்மாவட்டத்தில் கரையயோரச் சமூகத்தில் பிறந்த ஒருவர் தமிழ் சமூகத்தில் காத்திரமான ஓர் இடத்தைப் பிடித்திருப்பதுதான் பிரபாகரனது முக்கியத்துவம். பதின்ம வயதிலேயே (17) தமிழ் இனவிடுதலை நோக்கிய பயணத்துக்காக, தன்னை அர்ப்பணிக்கத் துணிந்த அவரது உணர்வுகள் மேன்மையானவை! பேர் மதிப்புக்குரியவை! இலங்கை வரலாற்றில், தமிழ்-சிங்கள-முஸ்லிம் சமூகங்களினாலும் மிக அவதானிக்கப்பட வேண்டிய அதிர்ச்சி தரும்வகையிலான ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தவர் பிரபாகரன்.

அவரது இருப்பு தமிழ் சமூத்துக்குக் கிடைத்த ஓர் அற்புதப் படைப்பாகக் கருத்தப்பட்டது. நவீன உலகில் தமிழரின் தொன்மையை, புறநானூற்று வீரத்தை பறைசாற்றும் விதத்தில் அமைந்ததுதான் அவரின் பிறப்பு என்றும் சொல்லப்பட்டது! சூரியத் தேவன் என்றும், தமிழ் குமரன் (முருகன்) என்றும் அவரது இருப்பின் விந்தையைப் போற்றிப் புகழ்ந்தது தமிழ் தரப்பு! ஆனால் அவரது இறப்பு எவரும் எதிர்பாராத வகையில் முடிந்திருந்தது. மிகுந்த ஆச்சரியத்தையும் அளித்திருந்தது. எம்மைப் போன்ற பலரின் நித்திரையை பல நாட்கள் குழப்பியது.

2009 மே 17ந் திகதிய அவரது சரணடைவுச் செய்தி அவர்மீது செதுக்கப்பட்டிருந்த பல்வேறு சித்திரங்களையும், கட்டப்பட்டிருந்த உயர் சிகரங்களையும், கோட்டைகளையும் தகர்த்து தவிடுபொடியாக்கியது! ஆனால் ஒப்பற்ற உயரத்தில் வைக்கப்பட்ட ஒருமனிதனின் இறப்பு இன்று மூன்று ஆண்டுகளாகியும் அங்கீகரிக்கப் படாமலும், அவதானிக்கப்படாமலும் பராமுகமாக்கப்பட்டிருக்கிறது!

அவரது இறப்பு பேரவலத்துக்கு உட்பட்டது என்பது வெள்ளிடைமலை. ஆனால் இவரது அரசியல் வாழ்வு அவலத்துடன் ஆரம்பித்து, அவலத்துடன் நகர்ந்ததை பலர் ஊகித்திருக்கவோ, அறிந்திருக்கவோ வாய்ப்பில்லை. அத்தைகைய ஒரு ஆய்வுதான் இக்கட்டுரையின் சாரம்.

போத்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோர் எமது நாடுகளுக்கு படையெடுத்துபோது, அவர்களது இயங்கு திறன் பற்றிய, முன்னனுமானத்தையோ அன்றி முன்னறிவையோ பெற்றிருக்காததன் தார்ப்பரியம்தான், பண்டார வன்னியன், சங்கிலியன், வீரபாண்டிய கட்டப்பொம்மன் போன்ற தமிழ் மன்னர்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. இவர்கள் அடிப்படையாக் கொண்டிருந்ததெல்லாம் புறநாநூற்று வீரம் பற்றிய, மன்னர்களுக்கிடையிலான போர் பற்றிய கதைகளைத்தான்.

„பிரபாகரன் இவற்றையும் மீறி புறநாநூற்று வீரத்துக்கு சற்று மேலாகச் சென்று, தற்கொலைப் போராளிகளைப் பயன்படுத்துவது பற்றியும், நவீன ஆயுதங்களை கையாளும் முறைமைகளையும் தெரிந்திருந்தார். கெரில்லா யுத்தம் பற்றிய பன்மை அறிவையும் வளர்த்திருந்தார். ஆனால் உலகம் பற்றிய நவீன கோட்பாடுகளை, அரசியல் நடைமுறைகளை, சமூகம் பற்றிய அறிவியலை, இயங்கியல் முறைமைகளை அறிந்திருக்கவில்லை. அறிந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டவும் இல்லை. நவீன உலகம் பற்றிய புரிதல் இன்மை, இவரை மாபியா (Mafia) வழி அரசியலுக்கு இட்டுச் சென்றதுடன், இவரது அவலங்களுக்கான அடிப்படையாகவும் அமைந்தது. ஆனபோதும், அப்பாத்துரை அமிர்தலிங்கத்தின் சந்திப்பும் அவருடனான தொடர்புகளும்தான் பிரபாகரனின் அவலத்துக்கான ஆரம்பம் என்று கூறுவதில் தப்பேதுமில்லை!

யாழ்ப்பாணச் சமூகத்தைப் பொறுத்தவரை பதின்ம வயது என்பது படிப்புக்குரிய வயது. அந்த வயதில் படிப்பில் கவனம் செலுத்தத் தவறும் பக்கத்து வீட்டுப் பி;ள்ளைகளையும் கூட, -பூவரசம் தடியைப் பிடுங்கி முழங்;காலுக்குக் கீழ் அடிபோட்டு- கண்டிக்கின்ற சமூகம்தான் யாழ்ப்பாணத்துச் சமூகம். பிரபாகரன் பிஸ்ரலுடன் அமிர்தலிங்கத்தைச் சந்திக்கச் சென்றதும் இதே வயதில்தான். அப்போது, இதே வயதை ஒத்த அல்லது சற்றுக் கூட, குறைந்த வயதை உடைய வாலிபப் பையன்களுக்கு தந்தையாக இருந்தவர் அமிர்தலிங்கம் அவர்கள். அதே தந்தைக்குரிய பண்புகளுடன் படிப்பின் முக்கியத்துத்தை எடுத்துரைக்கும் வகையில் பிரபாகரனை அணுகியிருக்கவில்லை அமிர்தலிங்கம் அவர்கள். பதிலாக ~தியாகி’ - ~துரோகி’ எனும் பதப் பிரயோகங்கள் மூலம் உசுப்பேத்தி தனது அரசியல் எதிரிகளைத் தீர்ததுக்கட்டுவதற்கான பகடைக் காய்களாக பயன்படுத்திக்கொண்டார் பிரபாகரனையும் அவரது நண்பர்களையும். இந்த வாலிபர்கள் வெளியில் இருந்தால் தமக்குத் தொல்லை என்பதை உணர்ந்த அமிர்தலிங்கம், துரையப்பா கொலை மூலமாக தலைமறைவு வாழ்வுக்கும் அனுப்பிவைத்தார். தொடர்ந்து பல கொலைகளை மேற்கொள்வதற்கும் இதுவே சாதகமாக அமைந்தது.

1960களின் மத்தியில் இருந்து 1970களின் ஆரம்ப காலம் வரை தமிழ் வாலிபர்கள் மட்டுமன்றி சிங்கள வாலிபர்களும் கூட சண்முகதாசனின் அரசியற் கோட்பாடுகளினால் கவரப்பட்டனர். ஜே வி பி தலைவர் றோகன் விஜயவீரா அவர்கள் இவரது கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பின்புதான் ஜே வி பி;யை உருவாக்கினார். தமிழ் மாணவர்கள், வாலிபர்கள், இளைஞர்கள் பலரும் மாக்சீய அறிவியல் மூலம் நவீன அரசியலைப் புரிந்துகொள்ள முனைப்பட்டதும் இதே காலகட்டத்தில்தான். பிரபாகரன் இத்தகைய நவீன அறிவியல் சார் அரசியலைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றிருக்கவில்லை. அதில் ஆர்வப்பட்டிருக்கவுமில்லை. அவரது அரசியல் வாழ்வு அவலத்தில் முடிந்ததற்கான முக்கிய காரணமும் இதுவே!

இத்தகைய நிலைமைகளில் பல பலவீனங்களுக்கு மத்தியிலும் பிரபாகரன் தலைவர் ஆனமை மிகுந்த ஆச்சரியத்துக்குரிய விடயமே! „ஆற்றல் மிகு கரத்தில் ஆயுதம் ஏந்துவதே மாற்றத்திகான வழி“ என்று துணிந்த சாதியத்துக்கு எதிரான சண்முகதாசன் அணியினரின் போராட்ட வழியினை அடுத்து, ஜே வி பி கிளர்ச்சின் தாக்கங்களும் சேர்ந்து, தமிழ் இளைஞர்கள் மத்தில் ஆயுதப்போராட்ம் பற்றிய கருத்தியலை வேரூன்றச் செய்த காலமது. பிரபாகரனும் அவரது குழுவினரும் ஆங்காங்கே பல்வித வன்முறை வழிகளில் காவல்துறையினருக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தனர். இதுவே, 1983ல் யூலையில் 13 இராணுவத்தினரை பலிகொள்ள வைத்த ராணுவ றக்கின் மீதான தாக்குதலாக மாறியது! இதைத் தொடர்ந்தும், இதன் எதிர் வினையாகவும்; சிங்களத்தேசியம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையினால் தமிழ்த் தேசியப் பிச்சனை பூதாகர நிலைமையை அடைந்தது.

தமிழர் விடுதலைப் போராட்டம், குருவியின் தலையில் பனங்காயைக் கட்டிவிட்ட நிலைக்குட்பட்டது! தமிழ் தேசியத்தை கையிலெடுக்கும் நோக்கில் வௌ;வேறு அமைப்புக்கள் உருவாகின. சிறிய சிறிய குழுக்களாக உருவாகிய தமிழ் இளைஞர் அமைப்புகளுக்கு கொள்கை ரீதியான முடிவுகளை விவாதிப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் என காலஅவகாசம் தேவைப்பட்டது. இதே குழப்பங்களும் குளறுபடிகளும் விடுதலைப் புலிகளையும் ஆட்கொண்டிருந்தது. கொள்கை கோட்பாடுகள் என்பவற்றுக்கு அப்பால், ஆயுதப் போராட்டம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்த இளைஞர்கள் மத்தியில், புலிகளின் கீழ்நிலை உறுப்பினர் ஒருவர், வயதில் இளையவராக இருந்ததனால் தம்பி என்று அழைக்கப்பட்டவர், வன்முறைகள் மீதான பல்வேறு அனுபவங்களைக் கொண்டிருந்த செயலூக்கம் மிக்க இளைஞன் ஒருவன் தனது தலையை நிமிர்த்திக்கொண்டான். எப்போதும் எதையும் சந்தேகிக்கும் மனநிலையையும், தன் உயிர்மீதான அவதானத்தையும் மட்டும் மூல ஆதாரமாகக் கொண்டு இயங்கத் தலைப்பட்டான்.

நிலப்பிரபுத்துவத்தின் எச்சங்களும் அதன் பண்புகளும் நிறைந்திருக்கும் ஒரு குறைவளர்ச்சி நாடு இலங்கை. ஐரோப்பிய நாடுகளின் முதலாளித்துவத்துக்குரிய மனித உரிமை ஜனநாயகப் பண்புகளை (இங்கும் 1970களின் பிற்பகுதியில்தான் வேரூன்றத் தொடங்கிய) இலங்கையில் எதிர்பார்க்க முடியாது. ஆண்களின் அசைவுகளுக்கு ஏற்ப பெண்கள் இயங்கவேண்டும். அண்ணன் சொல்வதை தம்பி கேட்க வேண்டும். தலைவன் சொல்வதை மக்கள் சிரமேற்கொள்ளவேண்டும். இத்தகைய பிரபுத்துவப் பண்புகளை தனது இருப்புக்கு அனுசரணையாக்கிக்கொண்டார் தம்பி பிரபாகரன். இளைஞர்கள் மத்தியில் செயல்திறன் மிக்க பிம்பத்தையும் உருவகப் படுத்திக்கொண்டார். தாம் சந்தேகிக்கும் அனைவரையும் துரோகி என்ற வட்டத்துக்குள் இழுத்துவந்து போட்டுத்தள்ளினார். ஒருகையில் இனவிடுதலைக்கான ஆயுதத்தையும் மறு கையில் மக்களை தம் வயப்படுத்துவதற்கான உளவறியும் முறைகளயும் வன்முறைகளையும் ஒருங்கே கையில் எடுத்துக்கொண்டு தலைவர் ஆனார். காலம் காலமாக தமிழர் சிந்தனையைக் குடைந்துகொண்டிருந்த, தமிழர் வீரம் பற்றிய புறநானூற்றுக் கதைகள் இளைஞர்களின் துணிச்சலுக்கும், தியாக மனப்பான்மைக்கும் நெய்யூற்றின.

83ன் வன்முறையைத் தொடர்ந்து ஆயுதத்தை கையில் எடுப்பதை ஒரு கவர்சிக் கலாச்சாரமாக மாற்றிக்கொண்டது தமிழ் இளைஞர் சமூகம். அவ்வேளை ஆயுதங்களைக் கையகப்படுத்துவதற்கான ஒரு மையமாகவும் கெரில்லாத் தாக்குதல் வழியில் முன்னிற்பவர்களாகவும் தம்மை முன்னிறுத்திக்கொண்டது விடுதலைப் புலிகள் அமைப்பு பிரபாகரனின் தலைமையில். ஏனைய பல நாடுகளில் கெரில்லாத் தாக்குதல்கள் போராளிகளின் திறனை அடிப்படையாகக் கொண்டிருந்தபோது, தற்கொலைத் தாக்குதல்கள்தான் புலிகளின் போர்த் தந்திரமாக அமைந்தது. தற்கொலைப் போராளிகள், கரும்புலிப் போராளிகள் எனத் தொடர்ந்து கடற்படை, தரைப்படை என்று உயர் நிலையையும் எட்டியது. பிரேமதாசாவுடன் கூட்டுச் சேர்ந்து இந்தியப் படையை திருப்பி அனுப்புவதிலும் வெற்றி பெற்றது. ஆனையிறவுத் தாக்குதல்களிலும் வெற்றிவாகை சூடியது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் உலக நாடுகள் விழித்துக்கொண்டன. ஆனால் வரப்போகும் ஆபத்தை உணர்ந்திராத தமிழ் தேசியத்தின் அறிவு மட்டம் பிரபாகரனை தேசியத் தலைவர் நிலைக்கு உயர்த்தியது! சில சமயங்களில் இவர் போராளிகளின் முகாமுக்கு வந்து சமையல் செய்து தாமே பகிர்ந்தளிப்பது, ஓடும் அணிலை குறிதவறாமல் சுடுவது போன்ற போராளிகளைக் கவர்ச்சிப்படுத்தும் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளையெல்லாம், பிரபாகரனின் பெருமிதத்துக்குரிய ஆற்றல்களாக மாற்றிக்கொண்டது தமிழ்ச் சமூகம். அவரை குழு நிலையில் வைத்திருக்கச் செய்யும் வகையில் அவரது அகவை 50ஐயும் கொண்டாடிக் குதூகலித்தது!

ஆனால் பிரபாகரனின் அவலம், சர்வதேசம் விழித்துக் கொண்ட அபாயகரமான இந் நிலைமகளில் கூட, சர்வதேசம் பற்றிய அரசியற் கோட்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கு முனைந்திருக்கவில்லை. பணம் சேர்ப்பதில் இருந்து, சிறுவர்களை படையில் சேர்ப்பது மற்றும் புத்திஜீவிகளை உள்வாங்குவது அல்லது போட்டுத்தள்ளுவது, மக்களை ஓர் அச்ச நிலைமையில் வைத்திருப்பது வரையிலான தொடர்ச்சியான தமது மாபியா வழியிலான அரசிலை கைவிட்டிருக்கவில்லை.


இவ்விதமாக அவரது அறிவுமட்டம் வளர்ச்சிடையாததன் வெளிப்பாடு…

„தன்னளவில் ஒடுக்குமுறையைக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் விடுதலை என்பது மிகக் கடுமையானது“ அதாவது தன்னுள் வைத்திருக்கும் முழு வளங்களையும் சரிவரப் பயன்படுத்தும் பட்சத்தில்தான், ஒடுக்குமுறைக்குட்பட்டிருக்கும் ஒரு சிறுபான்பைச் சமூகத்தின் விடுதலை சாத்தியமாகும். ஆனால் பிரபாகரன் இச் சூத்திரத்தின் உள் அர்த்தத்தைப் புரிந்திருக்கவில்லை. புரிந்துகொள்ளத் தலைப்படவும் இல்லை. தன்னார்வத்துடன் இயங்கி வந்த பல சமூக அமைப்புக்களுக்கு தடைவிதித்தார். சன சமூக நிலையங்களைக் கூட தமது கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இயங்க வைத்தார். முஸ்லிம்களை ஒடுக்கினார். சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சாதிய அமைப்புகக்களை இயங்க விடாமல் தடுத்தார். மற்றும் தமிழ்த் தேசியம் எனும் ஒரே நேர்கோட்டில் பயணித்த அனைத்து விடுதலை அமைப்புக்களுக்கும் சாவுமணியடித்தார்.

யாழ்ப்பாணச் சமூகத்தின் வெள்ளாளரிய சாதிய சிந்தனையின் பொறிமுறையையும் இவர் விளங்கியிருக்கவில்லை. மதிவதனியை மணம் முடித்ததன் மூலம் சமூகத்தில் சமத்துவம் அடைந்ததாக எண்ணிக்கொண்டார். 2009 போர் முடிந்த சில நாட்களில் ஓர் பேராசிரியர் தனது மனக்கவலையை தனது பழைய மாணவி ஒருவரிடம் இப்படி வெளிப்படுத்தினார்… „எடியே… பிள்ளை ~எங்களுக்கு’ ஒண்டும் தெரியாது எண்டு சொல்லுற உவங்கள் இனி ~எங்களுக்கு’ ஒண்டுமே தெரியாது எண்டு சொல்லப்போறாங்கள்“ என்று. அவரது இறுதிக்கால அவலத்திற்கு வெள்ளாளரியத்தின் பொறிமுறையும் காரணமாக அமைந்ததை இறுதிநேரத்திலாவது உணர்ந்துகொண்டாரோ என்னவோ?

தனது அமைப்புக்குள் ஏற்பட்ட உட்கட்டுமான பிரச்சனைகளை புத்திபூர்வமான முறையில் கையாள்வதற்கு, எதையும் சந்தேகிக்கும் அவரது இயல்பான குணம் தடையாக இருந்தது. பாரிய தவறுகளைப் புரிவதற்கும் வழிகோலியது. மாத்தையவைப் போட்டுத்தள்ளியதை தவிர்த்துப் பார்த்தாலும், பொட்டம்மானுக்கும் கருணாம்மானுக்கும் இடையிலான பிரச்சனையில் இவரது அணுகுமுறையை நோக்கலாம். இலங்கை ராணுவத்தின் பல்வகைப் படையணிகளை தோற்கடிப்பதில் முன்னணித் தளபதியாக இருந்த ஒருவரை மட்டுமன்றி இதன் மூலம் ஒரு பிரதேசத்தையே இழந்துவிடுகிறோமே எனும் பிரக்ஞை அற்றவராக இருந்தார் பிரபாகரன். பிரிந்து சென்ற கிழக்கிலங்கைப் பெண் போராளிகள் சரணடைந்து மீளவும் இயக்கத்தில் இணைய முற்பட்டபோது அவர்களைக் கொலைசெய்து (புலிப் போராளிகளால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார் எனும் தகவலும் உண்டு) பழிவாங்கியதன் மூலம், கிழக்கு மக்களின் ஆண்டாண்டு காலப்பழிக்கு உள்ளானதும் பிரபாகரன் தனது இறுதிக் காலத்துக்கு முன்பு சுமந்துகொண்ட பேரவலம்!

ஒட்டுமொத்த தேசத்தின் உள்ளார்ந்த பிரச்சனைகளை அவரால் புரிந்துகொள்ள முடியாமல் போனதுடன் தேசத்துக்கும் சர்வதேசத்துக்கும் இடையிலான உறவுக்கும், முரணுக்கும் இடையிலான நுண்ணிய வேறுபாடுகளை இவரால் விளங்கிக்கொள்ள முடிந்திருக்கவில்லை. சிங்களச் சமூகத்தில் தனியாளுமை பெற்றிருந்த பிரேமதாசவுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக இந்திய ராணுவ வெளியேற்றத்துடன் அவரின் உயிரைப் பலியெடுப்பதை போர்வெற்றியாக நினைத்தார். சந்திரிகாவின் பேச்சுவார்த்தையில் பொறுமையிழந்தார். அமெரிக்காமுறை ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்டிருந்த ரணில் விக்கிரமசங்காவைத் தோற்கடித்து, மகிந்த ராஜபக்சாவை ஆணையில் இருத்தியதன் மூலம் தனக்கான சவக்குழியை தாமாகவே அமைத்துக்கொண்டார்.

மேலும் சர்வ தேசமும் எதிர்பார்த்திருந்த இவரது மாவீரர் உரையின் உள்ளடக்கம் (இவர் எழுதியதாக நம்பினாலும்) வெறுமனே நடைமுறை அரசியல் பற்றி விளம்பியதே அன்றி, நவீன அரசியற் கோட்பாடுகள் பற்றி எடுத்தியம்பியதில்லை. இதன் மூலம் சர்வதேச அரங்கில் இவரது அரசியல் ~ஞானம்’ வெள்ளிடைமலையாகியது. அறிவை அறியமுடியாத ஒருவர் நவீன சிந்தனையை அறிந்துகொள்ள ஆர்வப்பட்டிருப்பார் என்று எண்ணிவிட முடியாது. ஆதனால்தான் எறிக் சொல்கைம் „சர்வதேச அரசியலில் இவர் ஒரு கற்றுக்குட்டி“ என்று பிரபாகரன் பற்றிய தனது புரிதலை வெளிப்படுத்தினார். அனைத்துக்கும் மேலாக இறுதிக் கட்டத்தில் இவர் குமரன் பத்மநாதன் (கே பி) எனும் தனிமனிதனை முழுமையாக நம்பியதும், அமெரிக்காவின் கப்பலைக் காத்திருந்து, தப்பி ஓடுவற்கானான வாய்ப்புக்களை தவறவிட்டதும் இவரது சர்வதேச அரசியல் அறிவைப் புலப்படுத்தும் மேலதிக புள்ளிகளாகும்’’.

புலிகளின் அரசியல் சித்தாந்தவாதியாக திகழ்ந்தவர் பாலா அண்ணன் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். அரசியலில் இவர் ஓர் அறிவுபூர்வமான புத்திஜீவியாகத் தோன்றியவர்! ஆனால் மாற்றத்திற்கு உட்பட்டிருக்கும் நடைமுறை உலகின் நவீன கோட்பாடுகளையோ தத்துவங்களையோ இவர் புரிந்திருக்கவில்லை. அதற்கான கடும் உழைப்பைச் செலுத்துவதற்கு அடிமையாகிப் போன இவரது மதுப்பழக்கம் தடையாக அமைந்தது. அதனால் இவர் அரசியல் ஆலோசகர் என்பதற்குப் பதிலாக, பிரபாகரனின் நடவடிக்கைகளுக்கு அரசியல் விளக்கமளிக்கும் ஒரு பொழிப்புரையாளராக (ஐவெநசிசநவழச) மாறினார்.

அடுத்து பிபாகரைனைச் சூழ்ந்திருந்த மிக முக்கிமாவர்களாக, பிரபாகரன் புகழ்பாடியாக விளங்கிய இரத்தினைதுரையையும், கட்டுண்டிருந்த பாலகுமாரனையும் குறிப்பிடலாம். இவர்களது அரசியல் ஞானம் பற்றி ஆய்வதை விட, பிரபாகரனுக்கு சேவை செய்யும் வாய்ப்பை மட்டுமே பிரபாகரன் இவர்களுக்கு வழங்கியிருந்தார். ஏனைய தளபதிகளும் போராளிகளும் அரசியல் ஞானம் குன்றியவர்களாக இருந்தார்களோ இல்லையோ, பிரபாகரனுக்கு ஆலோசனை வழங்குவதற்கான துணிச்சலை அவர்கள் பெற்றிருக்கவல்லை. அந்தளவுக்குத்தான் உள்ளக ஜனநாயகத்தை வழங்கியிருந்தார் என்பதும் அவலத்தின் அடையாளமே!

அடுத்து பொட்டம்மான்! நாம் அறிந்த தகவல்கள் சிலவற்றின் பிரகாரம், பிரபாகரன் ஓர் சந்தேகியாக இருந்தபோதும், அவர் ஒருவரை நம்பிவிட்டால், நம்பிக்கைக்குரிய அந்நபரின் கூற்றுக்களை, தர்க்கரீதியான அல்லது கோட்பாட்டு ரீதியான எந்த அணுகுமுறையும் இன்றியே ஏற்றுக்கொண்டுவிடுவார் என்பதும் அவரது அவலத்துக்கான காரணங்களில் ஒன்றாகும். அவ்வகையில் பொட்டம்மான் உளவுப் பிரிவின் உயர் பொறுப்பாளியாக இருந்தவர் என்பதனால் அவரது முடிவுகளை ஆய்வுக்குட்படுத்தியிருக்கவும் வாய்ப்பில்லை! அதே சமயம் முடிவுகளை முன்வைக்கும் முறைமையில் பொட்டம்மான் எந்தளவுக்கு காத்திரமான பங்கை ஆற்றியிருப்பார் என்பதும் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டிய விசயமே!

பொட்டம்மானின் உளவுத்துறை அறிவுதான் மக்கள் நாட்டை இழந்து, நகரை இழந்து, ஊரை இழந்து உற்றாரை இழந்து, காட்டை இழந்து கடைசியில் வீட்டையும் (பங்கர்) இழக்கும் அவலத்துக்கு உள்ளாக்கியது!

இவ்விதம், தனது சொந்த அறிவை மேம்படுத்தாமலும், சூழ இருந்தவர்களின் ஆலோசகைள உள்வாங்கிகொள்வதற்கு முனையாமலும், நம்பிக்கைக்குரியவர்களின் ஆலோசனைகளை ஆய்வுக்குட்படுத்தாமலும் தனது சொந்த அனுபவத்தின் மூலம் தனது தலைமையை வலுப்படுத்தியவர்தான் பிரபாகரன். விரிந்து பரந்த இவ் உலகில், மிகச் சுருங்கிய தனது சொந்த அனுபவத்தை மட்டும் படிப்பினையாகக் கொண்டு, ஓர் இனத்தையே கையாளத் துணிந்தமைதான் அவரது தனிப்பட்ட அவலங்களுக்கு மட்டுமன்றி, முழு இனத்தினது அவலங்களுக்கும் கால்கோளாகியது!

பொட்டம்மானின் உளவுத்துறை அறிவினால் எதிரியின் பலத்தை அறிவதற்கு முடியாமல் போனது. புலிகளின் பலவீனத்தை உணர்வதற்கும் வழி செய்யவில்லை! தமது தளப்பிரதேச வாழ்க்கையை நிரந்தர வாழ்விடமாக நினைக்க வைத்தது. எதிரி இவ்வளவு பலத்துடன் உயிர்ப்பான் என்பதை உய்த்துணர முடியாமல் போனது. சமாதான காலத்து வாழ்க்கை முறை இவர்களது உடற்பருமனை அதிகரிக்கச் செய்தது. இயங்கு திறன் குன்றிப்போவதற்கும் வழி வகுத்தது. கருணாவின் பிரிவு எதிரியை வலுப்படுத்தியது. தற்கொலைத் தாக்குதல் முறையை நிறுத்தும்படி சர்வதேசம் அழுத்தியது.

இவ்விதம் பல்வேறு காரணங்களினால் குன்றிப்போயிருந்த தமது பலவீனத்தை மறைப்பதற்கான கடைசி ஆயுதம்தான் புலிகளின் வான்வெளித் தாக்குதல்! இந்தியாவைக் கோபப்படுத்தியதும் இதுவே! இச் சிறு விமானம்தான் புலிகளுக்கு எதிராக சர்வதேசத்தையும் ஒருங்கிணைத்த போர்க் கருவி! ஆயுதத்தால் மட்டும் எதிரியை வீழ்த்திவிடலாம் என எண்ணிய பிரபாகரனின், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் சிந்தனை மீது வீழ்ந்த பேரிடியும் இதுவே!

ஆனால் பிரபாகரனின் இறுதி முடிவில் பல்வேறு அவலங்கள் தேங்கி வழிகின்றன. 25 ஆண்டுகள் கோலோச்சிய ஒரு தலைவன்! இறுதி யுத்தத்தில் முடிவுகளை எடுப்பதற்கு திணறியமை! ஆயிரக்கணக்கில் இளந் தலைமுறை உறவுகளின் கழுத்தில் சையனைட்டைக் கட்டுவித்து, ~~செய் அல்லது செத்து மடி’’ என்று உணர்ச்சியூட்டி போர்க்களத்துக்கு அனுப்பிவைத்த நம்பிக்கைக்குரிய தலைவன், ஆயிரம் ஆயிரம் விடுதலை வித்துக்களின் ஆத்ம அமைதியைக் குலைக்கும் விதத்தில் தனது உயிரை முதன்மைப் படுத்தி எதிரியின் காலடியில் பணிந்தமை! 17 வயதில் தான் நம்பிய சித்தாந்தத்துக்காக, போராட முனைப்பட்டு, பல்வேறு பரிமாணங்களின் ஊடாக உயர் நிலையடைந்து இறுதியாக தனது மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் ஓருசேர பலி கொடுத்தமை! இத்தனை அவலங்களைச் சுமந்த மனிதன் தானும் போராடி மரணித்திருந்தால், தானே வகுத்த வழியில் சயனைட்டை உட்கொண்டிருந்தால் மிகவும் இலகுவான முடிவை தழுவியிருக்க முடியும் என்பதைக்கூட புரிந்திருக்கவில்லை என்பதே அவலத்தில்; அவலம்!

அதனிலும் மேலான அவலம், அவர் சரணடைந்ததும், மனித உரிமை மீறல்களுக்கு உட்பட்ட வகையில் பிரபாகரன் கொல்லப்பட்டதும் பேரின தேசியவாதிகளுக்கும், தமிழ் தேசியத்திற்கும் தெரிந்த ஓர் உண்மை! ஆனால் இரு பகுதியினரும் உண்மைகளை மறைக்கின்றன! ஒரு பகுதி தமது மனித உரிமையை மீறிய குற்றச் செயல்களை மறைப்பதற்காக! தமிழ் தரப்பு ஒரு மனிதனின் இருப்புக்கான தன்னுணர்வையும் மீறி புறநாநூற்று வீரத்தை தக்கவைப்பதற்காக! அல்லது அதன் மீதான பொய்ம்மையை மேலும் நிலை நிறுத்துவதற்காக! அல்லது தலைவனின் தோல்வியில் துவண்டுபோன வெட்கத்தை மறைப்பதற்காக!

எம்மைப் பொறுத்தவரை பிரபாகரனின் சரணடைவு முடிவு சாதாரண மனிதனின் இருப்புக்கான ஒரு முயற்சி! அவ்வளவுதான்!

நாங்கள் அவரை தமிழ் குமரன் என்றோ, சூரியத் தேவன் என்றோ, சாகத் துணிந்தவன் என்றோ கற்பனையில்கூட நினைத்ததில்லை! தமிழ் தேசியத்தின் யதார்த்தத்தையும் அவ்விதமே புரிந்துகொள்வோம்

Tuesday, December 13, 2011

வட மாகாண சபைத் தேர்தலில் த.தே.கூ. நேரடியாக பங்குபற்றக் கூடாது: தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை

வட மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில் த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம் என்ற தலைப்பிலான மனுவொன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப், மதகுருமார், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் சட்டத்தரணிகள், மருத்துவர்கள் , மாணவர்கள் உட்பட பலர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
மேற்படி அறிக்கை தமிழ் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கை மற்றும் கையெழுத்திட்டவர்கள் விபரம் பின்வருமாறு:-

தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள தமிழ் சிவில் சமூகம் என்ற அடிப்படையில் நாம் பின்வரும் விடயங்களை எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளான உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்:

1. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு தொடர்பிலானது:

அ) பல சுற்றுத் பேச்சுவார்த்தைகளின் பின்னர் பேச்சுவார்த்தைகளின் போது பேச்சளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பது போல் தென்பட்ட போதிலும் அரசாங்கத்திடமிருந்து மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் எமுத்து வடிவில் விளக்கம் கிடைக்கப் பெறும் வரை அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திகதியை நிர்ணயிக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தை கடந்த 04 ஓகஸ்ட் 2011 அன்று நீங்கள் எடுத்திருந்தீர்கள். உங்களது அறிக்கையில் அது வரையிலான பேச்சுவார்த்தைகளை 'ஏமாற்றும்' தன்மையானவை –‘deceitful process’ என வர்ணித்திருந்தீர்கள். இந்நிலைப்பாட்டை த. தே. கூ. எடுத்திருந்தமை தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்றது என்பது சிவில் சமூகத்தினர் என்ற வகையில் நாம் அறிந்துள்ளோம்.

இது இவ்வாறிருக்க 14 செப்டம்பர் 2011 அன்று திடீரென பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பு தங்களிடமிருந்து வந்த போது நாம் பெருவியப்படைந்தோம். பேச்சுவார்த்தையில் மீளக் கலந்து கொள்ளும் உங்களது இந்தத் தீர்மானமானது தங்களது ஓகஸ்ட் 4 திகதியிட்ட அறிக்கையை முற்றிலும் அர்த்தமற்றதாக்கிய செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம்.

குறிப்பாக ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் - அரசாங்கத்துக்கெதிரான சர்வதேச அழுத்தம் அதிகரித்து வந்து கொண்டிருந்த காலப்பகுதியில் - பேச்சுவார்த்தையில் மீளக் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்த தங்கள் முடிவானது அரசாங்கத்தைக் காப்பாற்றும் விதத்தில் அமைந்து விட்டதாக நியாயமான விமர்சனம் ஒன்று முன்வைக்கப்படுகின்றது. இதற்கான விளக்கத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டியது தங்களது தார்மீகக் கடமையாகும்.

அண்மையில் டிசம்பர் 1 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு த.தே.கூ பெயர்களைப் பிரேரிக்கத் தவறியமையால் பேச்சில் விரிசல் நிலை அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பேச்சுவார்தைகள் டிசம்பர் 6 அன்று இடம்பெற்றன. வடக்குக் கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக நிற்பதாகக் கூறப்படுகின்றது. இவை மூன்றும் மறுக்கப்படின் தொடர்ந்து பேசுவதில் அர்த்தமில்லை. பேச்சுக்களில் உண்மையில் என்ன நடைபெறுகின்றது என்பது தொடர்பிலான விளக்கத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டியது தங்களது கடமையாகும்.

ஆ) புதுடில்லியில் கடந்த ஓகஸ்ட் 23 மற்றும் 24 திகதிகளில் இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் அவர்களால் கூட்டப்பட்ட பல்-தமிழ் கட்சி மகாநாட்டில் 'தேசியம்','சுயநிர்ணயம்' என்ற வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடங்கிய தீர்மானமொன்றில் த.தே.கூ சார்பில் பங்குபற்றிய அதன் ஆரம்பகால அங்கத்துவ கட்சிகளின் உறுப்பினர்கள் கையெழுத்திட மறுத்தமை எமக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கருத்தொருமிப்பு ஏற்படாததால் கையெழுத்திடவில்லை என்ற விளக்கம் எந்த வகையிலும் ஏற்புடைத்தன்று.

இந்த வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடக்கப்படுவதை எதிர்த்த தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் போன்ற அமைப்புக்கள் த.தே.கூ வில் அண்மைக்காலத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள். (இந்த வார்த்தைப் பிரயோகங்களை எதிர்த்த மற்றைய இரு உதிரிக் கட்சிகள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். (பத்மநாபா அணியும்) ஈ.என்.டி.எல்.எஃப்பும்.). மேற்சொன்ன தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் ஆகிய கட்சிகளை அண்மைக்காலத்தில் உள்வாங்கி, கடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் நீங்கள் போட்டியிட்டமை யாவரும் அறிந்தது.

த.தே.கூ வின் கொள்கைகளுக்கு எதிராக அவர்கள் செயற்படுமிடத்து அவர்கள் த.தே.கூ. வின் அடிப்படை அரசியற்கோட்பாடுகளுக்கு உட்பட வேண்டிய கடப்பாட்டை அவர்களுக்கு நீங்கள் இடித்துரைத்திருக்க வேண்டும் அல்லது அவர்களது நிலைப்பாட்டுக்கான விளக்கத்தை கேட்டிருக்க வேண்டும். த.தே.கூ அவ்வாறான வலியுறுத்தலை மேற்கொள்ளாமல் போனதை அல்லது அவர்களின் விளக்கத்தை கோராதுவிட்டதை அவர்களது கொள்கை நிலைப்பாட்டை நீங்களும் - த.தே.கூ. - ஒப்புக் கொள்வதான சமிக்ஞையாகவே கருத வேண்டியுள்ளது. இலக்கற்ற ஒற்றுமை என்பதில் அர்த்தமில்லை. தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை என்பது தமிழ்த் தேசிய அரசியலுக்குத் துணை செய்வதாக, வலிமை சேர்ப்பதாக இருக்க வேண்டும். அதனை அழிப்பதற்கான ஒற்றுமையில் பயனேதுமில்லை.

இ)த.தே.கூ. வினது அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாடு தொடர்பாக, அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்கின்றவர்களும் கட்சியின் பிரதான சர்வதேச தொடர்பாளர்களுமாகிய சம்பந்தன் அவர்களும், சுமந்திரன் அவர்களும் செய்து வருகின்ற பொது வெளிப்படுத்தல்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து முரண்படுவதை நாம் அவதானித்து வருகின்றோம்;.

தீர்வு'தேசியம்', 'சுயநிர்ணயம்' என்ற அடிப்படைகளிலன்றி தமிழர்கள் சிறுபான்மையினர், சம உரிமைகள் தேவை என்ற அடிப்படையிலேயே முன்வைக்கப்படுவதாக மீளவும் மீளவும் தெரிவிக்கப்படுகின்றது. (உதாரணமாக: சுமந்திரனினால் 26 ஏப்பிரல் அன்று வழங்கப்பட்ட அமரர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் நினைவுப் பேருரை, சம்பந்தனின் 04 ஒக்டோபர் 2011 திகதியிட்ட கல்முனை மாநகரசபைத் தேர்தலை ஒட்டிய அறிக்கை போன்றவை)

சிறுபான்மையினங்கள் கோரி நிற்பது மொழி மற்றும் கலாசார உரிமைகளையே. தம்மை ஒரு தேசமாகக் கருதுகின்ற மக்களைக்கொண்ட ஒரு தேசிய இனத்துக்கே தன்னாட்சி உரிமைகளை தமக்கிருக்கும் சுயநிர்ணயத்திற்கான உரிமையின் அடிப்படையில் கேட்கும் உரிமை உள்ளது. தமிழர்களாகிய நாம் எம்மை ஒரு தேசமாகக்கருதியே எமக்குரித்தான சுயநிர்ணயத்திற்கான உரிமையின் அடிப்படையில் சுயாட்சியை கோருகின்றோம்.
அதே போன்று சமவுரிமைகளைக் கேட்பதானது சுயாட்சியைக் கேட்பதாகாது. சட்டத்தின் ஆட்சியும் (Rule of Law) நல்லாட்சியும் (Good Governance ) பூர்த்தி செய்யப்படும் ஒரு நாட்டில் சகலரதும் 'சமவுரிமைகள்' பாதுகாக்கப்படும். தமிழர்களது பிரச்சனைகள் வெறுமனே சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதினூடாக தீர்க்கப்பட முடியாதவை. சுயாட்சியைப் பெற்றுக் கொள்வதினூடாகவே எமது அரசியற் பிரச்சனைகள் தீர்க்கப்படலாம்.
தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட பட்டறிவின் பயனாகவே எமது முன்னைய தலைவர்களும் மக்களும் ஈற்றில் 1976இலும் 1977இலும் தமிழ்த்தேசம், சுயநிர்ணய உரிமை, சுயாட்சி என்ற அரசியல் கோட்பாடுகளை தமது அரசியல் அபிலாiஷகளாகக்கொள்ளும் நிலைப்பாட்டை வந்தடைந்தனர். பின்னர் வந்த எமது 30 வருட வாழ்வும், அரசியல் வரலாறும் இந்த அடிப்படையிலேயே இயங்கியது. இப்போது ஒருசிலருக்கு ஏற்புடையதாக இல்லை என்பதற்காக இந்த அடிப்படைகளை விட்டுவிட்டோ, அல்லது மறைத்தோ எமது அரசியல் பயணத்தை நாம் தொடரமுடியாது.
தேசியம், சுயநிர்ணயம் என்று கூறுவதன் மூலம் தனிநாட்டைக் கோருவதாகப் பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்த அபிலாiஷகளைப் பூர்த்தி செய்வதற்குரியநிறுவன ரீதியான ஏற்பாடுகள் தொடர்பாக நாம் பேச்சுவார்த்தை மேசையில் பேசித் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால் தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படையிலான ஒரு தீர்வுக்கு நாம் செல்லத ;தவறுவோமாயின் நாம் உண்மையான சுயாட்சியைப் பெற்றுக் கொள்ள முடியாததாகிவிடும். இந்த அடிப்படைகளை ஏற்றுக்கொள்ளாத, உள்ளடக்காத எந்த ஒரு அரசியல் தீர்விலும் பிரயோசனம் இல்லை. மாறாக இந்த அடிப்படைகளை ஏற்றுக் கொள்கின்ற தீர்வு மட்டுமே நீடித்து நிலைக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வைத் தருவதோடு,இத்தீவின் இனங்களுக்கிடையில் நீடித்து நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும், வெளியார் தலையீட்டுக்கான தேவையையும் இல்லாமல் செய்யும்.

தமிழர் ஒரு தேசிய இனம், தமிழர் ஒரு தேசம், எமக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற அரசியல் நிலைப்பாட்டை நாம் எடுத்தமையில் எந்தத் தவறும் இல்லை என்ற மனவுறுதி உங்களிடத்தில் எப்போதும் வெளிப்பட வேண்டும். இத்தகைய மனவுறுதி உள்ளவர்கள் தான் தமிழர் சார்பில் பேச வேண்டும். பேச முடியும். தனியேஇவற்றை கோஷங்களாக முன்வைப்பதனூடாக நாம் இந்த இலக்கை அடைந்து கொள்ள முடியாது என்பது உண்மையே. அரசியல் உபாயங்கள் மிகவும் அவசியம். ஆனால் அரசியல் உபாயங்களுக்காக எமது இந்த அரசியல் அடிப்படைகளை, அபிலாiஷகளை விட்டுக் கொடுத்துவிட முடியாது. இவை பேரம் பேசும் பொருட்களல்ல. விட்டுக் கொடுப்போமெனின் எதற்காக நாம்அரசியல் செய்கின்றோம் என்ற கேள்விக்கு மக்களுக்கு விடை கூற வேண்டியிருக்கும்;.

2. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக

எதிர்வரும் 2012 இல் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவிருப்பதாக அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டு வருகின்றது. இத்தேர்தலை த.தே.கூ சந்திக்குமானால் அதில் அமோக வெற்றி பெறும் என்பதில் எமக்கு சந்தேகமில்லை. ஆனால் இதனையே அரசாங்கமும் விரும்புகின்றது என்பதில் உள்ள சூட்சுமத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். இலங்கையின் அரசியல் யாப்பின் ஓரங்கமான13ஆம் திருத்தத்தின் நடைமுறை வடிவத்திற்கப்பால் எவற்றையுமே தீர்வு தொடர்பில் கருத்தில் கொள்ள விரும்பாத அரசாங்கம், 13ஆம் திருத்தத்தை ஏற்க மாட்டோம் என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் மக்களிடமிருந்து ஆணை பெற்ற த.தே.கூ வை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வைத்து அத்தேர்தலில ;அது வெற்றி; பெறுவதையும் விரும்புகின்றதென்றால் அதற்கான உள்நோக்கம் பூடகமானதல்ல. மாகாண சபை முறைமையினை தழிழர்கள் ஒரு தீர்வாக ஏற்றுக் கொண்டுவிட்டதாகப் பிரச்சாரம் செய்வதற்காகவே அரசாங்கம் இதனை முயற்சிக்கின்றது.

அமெரிக்க, இந்திய அரசாங்கங்களும் 13 ஆவது திருத்தத்தை தீர்விற்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துவதிலிருந்து இவ்வரையறைக்கப்பால் செல்லுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதைச் சுட்டுவதாக கருதமுடியும். ஆகவே மாகாண ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இன்னும் மேலதிகமாக கேட்டு வாங்கலாம் என்ற உபாயம் ஆபத்தானது. 13ஆவது திருத்தம் என்ற வரையறைக்குள்ளிருந்து ஓர் எல்லைக்கப்பால் பிரயாணிக்க முடியாது என்பதை சட்ட அறிஞர்கள் பலரை உங்கள் மத்தியில் வைத்திருக்கின்ற உங்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டியதில்லை.
கட்டம் கட்டமாக அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனையும் மேற்சொன்ன காரணங்களுக்காக சாத்தியப்படாது. 13ஆவது திருத்தத்தை அல்லது அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் சில திருத்தங்களை அடிப்படையாகக் கொண்ட ஓரு தீர்வுப் பொதியை இடைக் காலத் தீர்வாகக் கருதவும் முடியாது. மக்களுடைய அன்றாடப் பிரச்சனைகளுக்குக் கூடத் தீர்வுகளைத் தர முடியாத இவ்வகை இடைக்காலத் தீர்வுகளால் எந்தப் பயனும் இல்லை.

இவை எல்லாவற்றிற்கும் மேலதிகமாக பிரிந்த வடக்குக் கிழக்கில் த. தே. கூ போட்டியிடுவதனால் ஏற்படக்கூடிய அரசியல் அபத்தத்தையும் மனதில் கொள்ள வேண்டியுள்ளது. வடக்குக் கிழக்கு இணைப்பு என்பது ஒரு போதும் விட்டுக் கொடுக்கப்பட முடியாதது, பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாதது. இதை த.தே.கூ. இந்திய, அமெரிக்க அரசுகளுக்கு வலியுறுத்த வேண்டுமே அன்றி, இந்த அழுத்தங்களுக்கு பயந்து தமிழ்த்தேசத்தின் ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலத்தை மீள முடியா பாழுக்குள் தள்ளக்கூடாது.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்கள் எமது அரசியல் தீர்வு தொடர்பில் நாம் முன்நோக்கி நகர்வதற்கு ஒரு பெரும் தடைக்கல்லாக அமையும். மேலும் குறிப்பாகச் சொல்லுவதாயின் மாகாண சபையை த.தே.கூ கைப்பற்றும் தருவாய் என்பது எமது நீண்ட அரசியல் பயணத்தின் அவல முடிவாக அமைந்து விடும். அத்தகைய நிகழ்வு ஈற்றில்முற்றுமுழுதான அரசியல் முள்ளிவாய்க்காலாகவும் அமைந்துவிடும். இது நடைபெறாமல் தடுக்கும் வரலாற்றுக்கடமை த.தே.கூ. விடமே இன்று உள்ளது.

பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்தத் தறுவாயில் மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு பொருத்தமற்றது எனவும் தேவையற்றதெனவும் த.தே.கூ நிலைப்பாடெடுக்கவும் அதை பேச்சுவார்த்தை மேசையிலும் சர்வதேசத்திடமும் வலியுறுத்தவும் தேவையான நியாயப்பாடு த.தே.கூ. இடம் உள்ளது. அதேபோல் இன்னுமொரு தேர்தலில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுத்தான் த.தே.கூ. தமிழ் மக்களின் அபிலாiஷகளை அரசுக்கும் உலகுக்கும் அறிவிக்க வேண்டுமென்றுமில்லை.

அரசாங்கம் இதனை மீறி தேர்தல்களை நடாத்துமாயின் தேர்தலில் த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது. மாறாக, தமிழ்த் தேசிய விரோத சக்திகள் அல்லது அரச சார்பு சக்திகள் மாகாண சபையைக் கைப்பற்றுவதைத் தடுக்க நாம் வேறு மாற்று உபாயங்கள் தொடர்பில் சிந்திக்கலாம். இவை தொடர்பில் த. தே. கூ.மக்களோடு கலந்தாலோசிக்க வேண்டும்.

தேர்தல் அரசியலுக்கப்பால் ஓர் அரசியல் விடுதலை இயக்கமாக செயற்பட வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமாகவே தமிழ் மக்கள் த. தே. கூ வைக் கருதுகின்றார்கள். இந்தக் குறிக்கோளின் அடிப்படையில் த. தே. கூ தொடர்ந்து செயற்படும் என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் தொடர்ந்து வந்த சகல தேர்தல்களிலும் த. தே. கூ. க்கு தமது ஆணையை வழங்கி வருகிறார்கள்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத்தருணத்தில் இந்த விண்ணப்பத்தை, எமது தேசத்தின் ஆன்ம வெளிப்பாடாக உங்களிடத்து முன்வைக்கின்றோம். இலட்சக் கணக்கில் மரணித்த எம்மக்களினது எதிர்பார்ப்பும் இதுவே. தொடர்ச்சியான ஒடுக்குமுறைக்குட்பட்டிருக்கும் எமது மக்களின் அவாவும் இதுவே. ஒரு கௌரவமான, நீடித்து நிலைக்கக்கூடிய, அரசியல் தீர்வொன்றை அடைய சரியான முடிவை மக்களின் அபிலாசைகளுக்கமைவாக எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் நிறைவு செய்கின்றோம்.

நன்றி.

அதி வணக்கத்துக்குரிய கலாநிதி. இராயப்பு ஜோசப், மன்னார் கத்தோலிக்கப் பேராயர்.

கலாநிதி. ஆறு. திருமுருகன், தலைவர், துர்க்காதேவி தேவஸ்த்தானம், தெல்லிப்பளை
நிறுவுனர், சிவபூமி அறக்கட்டளை, யாழ்ப்பாணம்

செல்வி சாந்தா அபிமன்னசிங்கம், ஜனாதிபதி சட்டத்தரணி, யாழ்ப்பாணம்.

வைத்திய கலாநிதி சு. ரவிராஜ், சத்திரசிகிச்சை நிபுணர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.
தலைவர், யாழ் மருத்துவ சங்கம்.

பேராசிரியர். க. கந்தசாமி, விஞ்ஞான பீடாதிபதி, யாழ் பல்கலைக்கழகம்.

பேராசிரியர் இ.விக்கினேஸ்வரன், கணித, புள்ளிவிபரவியற்றுறைப் பேராசிரியர்,
தலைவர், யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்.

பேராசிரியர். ப. புஸ்பரட்ணம், தலைவர், வரலாற்றுத்துறை, யாழ் பல்கலைக்கழகம்.

தி. இராஜன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு

கலாநிதி. ஆ. ச. சூசை, புவியியற்றுறை, யாழ் பல்கலைக்கழகம்
நல்லைக் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள்,
யாழ்ப்பாணம்

அதி வணக்கத்துக்குரிய கலாநிதி. எஸ் ஜெபநேசன், முன்னாள் தென்னிந்தியத் திருச்சபைப் பேராயர்.

பேராசிரியர். சி.க. சிற்றம்பலம், ஓய்வுநிலைத் தகைசால் வரலாற்றுப் பேராசிரியர்,
முன்னாள் பீடாதிபதி, பட்டப்பின் படிப்புகளுக்கான பீடம், யாழ் பல்கலைக்கழகம்.

பேராசிரியர்.இ. குமாரவடிவேல், சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர்,
முன்னாள் பதில் துணைவேந்தர், யாழ் பல்கலைக்கழகம்.

பேராசிரியர். வி.பி. சிவநாதன், தலைவர், பொருளியற்றுறை, யாழ் பல்கலைக்கழகம்.
தலைவர், அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம்.

க. சூரியகுமரன், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனப் பிரதிநிதி,வடமராட்சி வடக்கு க. தொ. கூ. சங்க சமாசப் பிரதிநிதி

வணபிதா. கி. ஜெயக்குமார், பங்குத் தந்தை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்

எஸ். அரசரட்ணம், முன்னாள் வங்கியாளர், அம்பாறைத் தமிழர் மகா சபை

க. ச. இரத்தினவேல், சிரேஷ்ட சட்டத்தரணி, கொழும்பு. நிறைவேற்றுப் பணிப்பாளர்,
மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம்.

வைத்திய கலாநிதி. (திருமதி). சி. உதயகுமார், பொது வைத்திய நிபுணர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வைத்திய கலாநிதி. சி. சிவன்சுதன், பொது வைத்திய நிபுணர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

அ. பஞ்சலிங்கம், ஓய்வு பெற்ற அதிபர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி

திருமதி. நாச்சியார் செல்வநாயகம், சிரேஷ்ட விரிவுரையாளர், இந்து நாகரிகத்துறை, யாழ் பல்கலைக்கழகம்.

வைத்திய கலாநிதி. சி. குமாரவேள், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

அ. இராசகுமாரன், விரிவுரையாளர், ஆங்கில மொழிப் போதனை நிலையம், செயலாளர், யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்.

வைத்திய கலாநிதி. செ. கண்ணதாசன், சிரேஷ்ட விரிவுரையாளர், நோயியற்றுறைத் துறை, மருத்துவ பீடம்,
யாழ் பல்கலைக்கழகம்

நா. இன்பநாயகம், தலைவர், கிராமிய உழைப்பாளர் சங்கம்

வைத்திய கலாநிதி. ச. பகீரதன், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வைத்திய கலாநிதி. ஏ. கமலநாதன், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வே. அரசரட்ணம், முன்னாள் கூட்டுறவு உதவி ஆணையாளர், அம்பாறைத் தமிழர் மகா சபை

பொ. தியாகராஜா, முன்னாள் தலைவர், பரந்தன் இரசாயனப் பொருட்கள் கூட்டுத்தாபனம்.
கலாநிதி. து. குணராஜசிங்கம், சிரேஷ்ட விரிவுரையாளர், உடற்றொழியல் துறை, மருத்துவ பீடம், யாழ் பல்கலைக்கழகம்

வைத்திய கலாநிதி. சு. பிரேமகிருஷ்ணா, உணர்வழியியல் வைத்திய நிபுணர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வைத்திய கலாநிதி. பூ. லக்ஷமன், இருதய நோய் சிகிச்சை நிபுணர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வணபிதா. இ.இரவிச்சந்திரன், இயக்குநர், யாழ் மறைமாவட்ட இளைஞர் ஆணைக்குழு, யாழ்ப்பாணம்

கா. சந்திரலிங்கம், ஓய்வு பெற்ற அதிபர், அம்பாறைத் தமிழர் மகா சபை

சி. அ. ஜோதிலிங்கம், சட்டத்தரணி, அரசியல் ஆய்வாளர், பாடசாலை ஆசிரியர்

வி. புவிதரன், சிரேஷ்ட சட்டத்தரணி, கொழும்பு.

பி. நி.தம்பு, சிரேஷ்ட சட்டத்தரணி, கொழும்பு.

திரு. கு. குருபரன், விரிவுரையாளர், சட்டத்துறை, யாழ் பல்கலைக்கழகம், சட்டத்தரணி

வைத்திய கலாநிதி. கே. இளங்கோஞானியர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வைத்திய கலாநிதி. க. சுரேஷ்குமார், பெண்ணியல் மற்றும் மகப்பேற்று சிகிச்சை நிபுணர்,போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வைத்திய கலாநிதி. ஞா. ஹைரின் ஆர்க், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வைத்திய கலாநிதி. ப. நந்தகுமார், சுகாதார வைத்திய அதிகாரி, தெல்லிப்பளை

வைத்திய கலாநிதி. சு. மோகனகுமார், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

ஜே. தோ. சிம்சன், ஆசிரியர், மன்னார்.

து. இராமகிருஷ்ணன், முன்னாள் தொழில்நுட்ப உத்தியோகஸ்தர், அம்பாறைத் தமிழர் மகா சபை

சு. தவபாலசிங்கம், தலைவர், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழகம்.

எஸ். கிருபாகரன், தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழகம்.

எஸ். சிவசொரூபன், தலைவர், வணிக பீட மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழகம்.

ஏ. பிரசன்னா, தலைவர், விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழகம்.

செ. ஜனகன், தலைவர், மருத்துவ பீட மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழகம்.

அ. றொ. மதியழகு, தலைவர், மாதகல் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்

திருமதி. ஆ. மரியம்மா ஜெயமணி, மாதகல் மேற்கு மகளிர் அபிவிருத்திச் சங்கம்

க. செல்வரட்ணம், தலைவர், பண்டத்தரிப்பு ப.நோ.கூ சங்கம்

கி. பவளகேசன், மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்தி அமைப்பு,

வணபிதா. எஸ். ஜெயபாலன் குரூஸ், பங்குத் தந்தை, வங்காலை, மன்னார்.

வைத்திய கலாநிதி. எஸ். சிவதாசன், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

திருமதி. ம. தயாளினி, மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அபிவிருத்தி அமைப்பு

வைத்திய கலாநிதி. அ. யோ. தனேந்திரன், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

எஸ். ஜெயசேகரம், வணிக சங்கத் தலைவர், யாழ்ப்பாணம்

வணபிதா. எஸ். எம். பி. ஆனந்தகுமார், செயலாளர், யாழ் மறைமாவட்ட குருக்கள்மார் ஒன்றியம்.

வைத்திய கலாநிதி. ம. வாசுதேவன், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

கி. சேயோன், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் தன்னார்வலர்கள் அமைப்பு

ஜி. ரஞ்சித்குமார், மட்டக்களப்பு மாவட்ட மீனவர் அபிவிருத்தி அமைப்பு

ச. அ. பிலிப் மோய், ஆசிரியர், யாழ்ப்பாணம்

த. நிஷாந்தன், மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்தி அமைப்பு

அ. சிற்றம்பலம், தலைவர், மாதகல் விவசாய சம்மேளனம்

க. சவுந்தரநாயகம், தலைவர்,தூய அந்தோனியப்பர் கடற்றொழிலாளர் சங்கம்

க. அருமைதுரை, தலைவர்,தூய லூர்துமேரி கடற்றொழிலாளர் சங்கம்

ஆர்.ஜோன்பிள்ளை, நானாட்டான்

வணபிதா. அ. அகஸ்ரின், பங்குத் தந்தை, சக்கோட்டை, யாழ்ப்பாணம்

வணபிதா. அகஸ்ரின் புஸ்பராஜ், பங்குத் தந்தை, நானாட்டான், மன்னார்

வணபிதா. எல். ஞானாதிக்கம், பங்குத் தந்தை, வஞ்சியன்குளம்

க. சுகாஷ், சட்டத்தரணி, யாழ்ப்பாணம்.

தி. அர்ச்சுனா, சட்டத்தரணி, யாழ்ப்பாணம்.

அ. சந்தியாப்பிள்ளை, நீதி சமாதானப் பகுதி, யாழ் மறைமாவட்ட கத்தோலிக்கப் பொதுநிலையினர் கழகம்

Thursday, December 1, 2011

தமிழீம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் சிக்குண்ட கிழக்கு மாகாணம் பகுதி – 6


















தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்இன்னும் பல ஆயிரக் கணக்கான விதவைகளை உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலை என்ன? கிழக்கு மாகாணத்தின் இன்றைய அவசிய தேவை என்ன என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக கிழக்கு மாகாணம் பல வழிகளிலும் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசமாக இருக்கின்றது.
30 வருடகால யுத்தத்தில் சின்னாபின்னமாக்கப்பட்ட பிரதேசத்தை ஓரிரு ஆண்டுகளில் கட்டியெழுப்புவதென்பது சாதாரண விடயமல்ல. இருந்தபோதும் கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சர் பதவியினை பொறுப்பேற்றதன் பின்னர் கிழக்கு மாகாணம் பல்வேறு துறைகளிலும் துரிதமாக அபிவிருத்தி கண்டு வருகின்றது.
துரிதமாக அபிவிருத்தி கண்டுவருகின்றபோதிலும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி என்பது பல சவால்கள் நிறைந்த ஒன்றாகக் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியிலே யுத்தம் விட்டுச்சென்ற வடுக்கள் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த கால யுத்தத்தின் காரணமாக கிழக்கு மாகாணம் பல உயிரிழப்புக்களை சந்தித்திருக்கின்றது. இவ் உயிரிழப்புக்களின் வெளிப்பாடாக இன்று கிழக்கு மாகாணத்திலே நாற்பதாயிரத்துக்கும் அதிகமான விதவைகள் இருக்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் இளம் விதவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் அதிகமான விதவைகள் இருப்பதற்கு காரணம் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வீட்டுக்கொரு போராளி எனும் திட்டத்தின் மூலம் இளைஞர், யுவதிகள் பலர் பலவந்தமாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டமையாகும்.
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் பெரும் தடைக்கற்களாக இருப்பது இந்த நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகளாகும். இவர்கள் சமூக, பொருளாதார ரீதியில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக இவர்களில் அதிகமானவர்கள் இளம் விதவைகளாக இருப்பதனால் பல சமூகப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டியவர்களாக இருக்கின்றனர்.
பல விதவைகள் தங்கள் குடும்ப சுமையை பல்வேறு கஸ்ரங்களுக்கு மத்தியிலே சுமந்து வருகின்றனர். அன்றாட உணவுக்குகுகூட வழியில்லாமல் பல நாள் உணவின்றி தவிக்கின்ற பெண்கள் தலைமைதாங்கும்இ வதவைகள் தலமை தாங்கும் பல குடும்பங்கள் கிழக்கு மாகாணத்திலே இருக்கின்றன. விதவைகள் தலைமை தாங்கும் பல குடும்பங்களிலே பாடசாலை செல்லவேண்டிய வயதிலே இருக்கின்ற சிறார்கள் பலர் உடலை வருத்தி கூலித்தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் கூலி வேலைக்குச் சென்றால்தான் அன்றாடம் உணவு கிடைக்கும். இவர்களின் எதிர்கால நிலை என்ன? இவ்வாறு இருந்தால் எதிர்காலத்தில் எப்படி ஒரு சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்க முடியும்.
மற்றுமொரு புறத்திலே நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான விதவைகளின் வறுமையையும் கஸ்ரத்தினையும் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி பணத்தைக் கொடுத்து தமது உடல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்கின்ற கைங்கரியங்களை பல வசதி படைத்தவர்கள் செய்து வருகின்றனர். இவ்வாறான பல சம்பவங்கள் அண்மைக் காலங்களில் அம்பலமாகியிருக்கின்றன.
இவ்வாறான விடயங்களை தலைப்புச் செய்திகளாகவும், விபச்சாரம், விபச்சாரம் என்று பிரச்சாரம் செய்யும் ஊடகங்கள் இவற்றுக்கான தீர்வுகளை சொல்லாதது ஏன்? இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதற்கு யார் காரணம்? இதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் வீர வசனம் பேசிப்பேசியே மக்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற தழிழ் தலைமைகளும் தழிழ் தேசியக் கூட்டமைப்பினருமே.
அண்மையில் நடந்த சில சம்பவங்களை இங்கு குறிப்பிட்டாகவேண்டும். படுவான்கரைப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்களை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இருவர் தமது உடல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக ஆட்டோவில் கூட்டிச் செல்லும்போது மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அந்த இரு இளம் பெண்களையும் விசாரித்தபோது அவர்கள் குடும்பநிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதை அறிய முடிந்தது. அத்தோடு அவர்கள் தினமும் இவ்வாறு சென்றால்தான் கிடைக்கும் பணத்தில் தமது குடும்பத்தின் அன்றாட உணவுத் தேவையினைக்கூட பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பதனையும் அறிய முடிந்தது.
அதேபோல் வேப்பவெட்டுவான் உசன மலையைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருத்தியையும் அவளது சித்தியையும் புகையிலைத் தோட்டத்தில் வேலை பெற்றுத் தருவதாக ஏறாவூரைச் சேர்ந்த வெள்ளையன் என்று அழைக்கப்படுகின்ற இஸ்மாயில் அவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்னர் அழைத்துச் சென்றிருக்கின்றார். இதுவரை ஒரு நாள் சம்பளமாக 300 ரூபாவும், ஒரு சட்டையும் செருப்பும் வாங்கிக்கொடுத்து வயிற்றில் பிள்ளையையும் கொடுத்திருக்கின்றார். 15 வயது சிறுமி மூன்று மாத கர்ப்பிணியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இச் சிறுமி தந்தையை இழந்தவர் குடம்பத்தில் 10 பேர் குடும்ப சுமையை குறைக்க வேலைக்கு சென்றவருக்கு வயிற்றிலும் சுமை.
இவ்வாறு பல சம்பவங்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் காரணம் நாட்டில் இடம் பெற்ற யுத்தம் ஒரு காரணமாகும். யுத்தத்தின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கின்றனர். இவர்களில் 80 வீதமானவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.
கிழக்கு மாகாணசபை ஏற்படுத்தப்பட்டு கிழக்கு மாகாணசபையை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பொறுப்பேற்றதன் பின்னர் மாகாணசபை ஊடாக கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மூலமாக துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. இருந்தபோதும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியிலே விதவைகள் பிரச்சினை பாரிய தடைக்கற்களாக இருக்கின்றன. இவ் விதவைகள் சமூக ரீதியாகவும்இ பொருளாதார ரீதியாகவும் பாரிய பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர்.
சின்னச்சின்ன விடயங்களுக்கெல்லாம் அறிக்கை விட்டுக் கொண்டு வீர வசனம் பேசிக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும்இ தமிழீழம்இ தமிழீழம் என்று பெருந்தொகைப் பணங்களை போராட்டத்துக்காக வழங்கி வரும் புலம் பெயர் தமிழர்களும் யுத்தத்தின் பயனாக கிடைத்த விதவைகள் தொடர்பாக சிந்திக்காதது ஏன். கிழக்கு மாகாணத்திலே பாரிய பிரச்சினையாக இருக்கின்ற விதவைகள் தொடர்பாக என்ன திட்டங்களை செய்திருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இவ் விதவைகள் தொடர்பாக சிந்திக்காதது ஏன்? தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விதவைகளுக்காக என்ன செய்திருக்கின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விதவைகள் தொடர்பாக சிந்திப்பதனை விடுத்து இன்னும் பல ஆயிரக் கணக்கான விதவைகளை உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர். மீண்டும் தமிழர்களை உசுப்பேற்றி மற்றுமோர் யுத்தத்தின் மூலம் தமிழர்களை அழித்து பல விதவைகளை உருவாக்கும் கைங்கரியங்களை செய்து வருகின்றனர்.
ஆனாலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் விதவைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதுடன் பல செயற்திட்டங்களையும் செய்து வருகின்றார். இந்தியாவுடன் ஒப்பந்தங்களைச் செய்து இந்திய சேவா அமைப்புடன் இணைந்து பல திட்டங்களை செய்து வருகின்றார். அதன் ஒரு கட்டமாக பல இளம் விதவைகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு கைத்தொழில் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. இன்னும் பலர் அனுப்பப்பட இருக்கின்றனர். பயிற்சியை முடித்தவர்களைக் கொண்டு பல திட்டங்கள் மூலமாக விதவைகளின் வேலை வாய்ப்பை நோக்கிய தொழிற்துறைகள் உருவாக்கப்பட்டு விதவைகளுக்கான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட இருக்கின்றன.
தொடரும்…

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes