பிறிதொரு தேசத்தை ஒடுக்கும் தேசம் தான் சுதந்திரமாக இருக்கமுடியாதுஎன மார்க்சும் ஏங்கல்சும் சுயநிர்ணய உரிமைக்கோட்பட்டிற்கு அடி எடுத்துக் கொடுத்தனர்.
1900ம் ஆம் ஆண்டின் முற்பகுதியில் முதல் இரண்டு தசாப்தங்களிலும் சுயநிர்ணய உரிமை பற்றிய விவாதங்கள் தோழர் லெனின், தோழர் ரொட்ஸ்கி , தோழர் ரோசா லக்ஸ்ஸம்பேர்க், தோழர் ஸ்டாலின் ஆகியோரால் அறிவார்ந்த முறையால் விவாதிக்கப்பட்டது.
தேசங்களின் சுயநிர்ணய உரிமை என்பது தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் தனித்தனி தேசங்கள் என்ற நிலைக்குக் கொண்டுசென்று விடும் என்று ரொஸ்கி, லோசா லக்ஸ்ஸம்பேர்க் ஆகியோர் விவாதித்தனர்.
எனினும் தேசங்களின் சுயநிர்ணயம் என்பது அது குட்டி முதலாளித்துவ அல்லது முதலாளித்துவ தலைமைகளின் கோரிக்கையாக இருந்தாலும் கூட ஒரு சமுதாயத்தின் அரசியல் சுதந்திரத்தையே குறிப்பிடுகிறது. அதனை அங்கீகரிப்பதன் ஊடாகவே தொழிலாளி வர்க்கத்தை ஒன்றிணைக்க முடியும் என்ற வாதத்தை தோழர் லெனின் முன்வைத்தார்.
குடும்பத்தில் கணவன்- மனைவி விவாகரத்துக்கூட கணவன் மனைவியரிடையே அவர்களை நெருக்கமாக இருக்கச் செய்வதற்கான சுதந்திர ஜனநாயகம் தொடர்பிலான உரிமையே என்று அதனை எளிமைப்படுத்தி விளங்க வைத்தார்.
ஏகாதிபத்திய நாடுகளின் காலனித்துவத்திற்கு எதிராகவும் தேசங்களின் சிறைச்சாலையாகவும் உள்ள நாடுகளுக்கும் இதனை மார்க்சியத்தின் முன்னோடிகள் பிரயோகித்தனர்.
தோழர் ஸ்டாலின் வரையறுக்கப்பட்ட நிலம், பொருளாதாரம், கலாச்சாரம் உளப்பாங்கு என்பவற்றின் அடிப்படையில் ஒரு தேசம் அமைய முடியும் அவர்களுக்கு சயநிர்ணய உரிமை உண்டு என்று குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானின் மன்னர் நிலப்புரபுத்துவ நோக்கங்களை கொண்டிருந்தாலும் ஆப்கானிஸ்தானுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என தெரிவித்திருந்தார்.
ஸ்டாலினின் வரைவிலக்கணம் இன்றைய யதார்த்தங்களில் தீவிர பரிசீலனைக்குரியது.
தொழிலாளி வர்க்க இயக்கத்தின் முன்னோடிகள் எந்த காழ்புணர்வும், குரோதமும் இல்லாமல் தோழர் லெனின் வாழ்ந்த காலத்தில் விவாதங்களில் ஈடுபட்டனர். அவர்களிடம் உண்மையைத் தேடும் ஆத்மார்த்தமான உணர்வு இருந்தது.
காலனிகளின் விடுதலைக்கும் பல நாடுகளின் சுதந்திரத்திற்கும் இந்த தத்துவார்த்த தேடல் உந்துசக்தியாக இருக்கிறது.
சுயநிர்ணய உரிமையின் அந்தந்த பிரச்சினைகளின் ஸ்தூல நிலையையொட்டி பிரயோகிக்கப்படுகின்றது. இன்று சுயநிர்ணய உரிமை பற்றிய கருத்து உலகளாவியளவில் வியாபித்திருந்தாலும் அதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றகரமான நிலைமைகள் ஏற்பட்டிருந்தாலும் தொழிலாளி வர்க்க இயக்கம் பற்றிய கருத்துக்கள் அந்தளவு தூரம் விஸ்தரிக்கப்படவில்லை என்பது நாம் அவதானிக்க முடியும்.
முதலாளித்துவ உற்பத்திமுறை உலகளாவிய ஏகாதிபத்திய ஆட்சிமுறை என்பன சுயநிர்ணய உரிமை பற்றிய கருத்துக்கள் பல்வேறுவிதமான வியாக்கியானங்களை அனுமதித்த அளவுக்கு தொழிலாளி வர்க்கம் பற்றிய கருத்துக்கள் வியாபிக்க அனுமதிக்கவில்லை.
உலகில் நிலவிய பெயரளவிலான சோசலிச அரசு முறைகளையும் அது நிர்மூலம் செய்தது. வசதிப்பட்ட இடத்தில் சுயநிர்ணய உரிமை என்ற பிரயோகத்தையும் தங்களுக்கு சரிபட்டு வராது. தமது நலன்களுக்கு பாதகமானது என்று வரும்போது ஆக்கிரமிப்பையும் மேற்கொண்டனர்.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் கடந்த 20 வருடங்களில் நிகழ்ந்த உலக நிகழ்வுகளில்; பரவலாக இவற்றை நாம் அவதானிக்க முடியும்.
இவற்றை விரிவாக இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.
சுயநிர்ணய உரிமையை புனிதப்படுத்தத் தேவையில்லை அதை எங்கும் உயர்பீடத்தில் வைத்து பூசிக்க தேவையில்லை. அது சாதாரண ஜனங்களின், தேசங்களின் சுதந்திரம் பற்றி பேசுவது. இலங்கையில் மலையக மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கும் ஏன் சமத்துவமற்ற வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட தொலைதூர பிரதேசங்களில் வாழும் சிங்கள மக்களுக்கும் பிரயோகிக்க முடியும்.
வடக்கில் சாதி, சமூக ரீதியாக ஒடுக்கப்படுகிறோம் என கருதும் மக்களும் சுயநிர்ண உரிமை கோரிக்கையை முன்வைக்க முடியும். ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் சுயநிர்ணயத்தைப் பற்றி பேச முடீயும். பிரதேச அநீதிகளால் யாழ்ப்பாணியத்தின் மீது சந்தேகம் கொண்டுள்ள கிழக்குத் தமிழர்களும் அதனை கூற முடியும். மலையகத்தில் அடுத்தடுத்த இனவன்முறைகளால் இடம்பெயர்ந்து வன்னியில் குடியேறிய மலையக மக்களும் அதனை கோரமுடியும். யாழ்ப்பாணத்தின் மேலாதிக்க வாதம்தான் சுயநிர்ணய உரிமை, தேசம் என்று அழைக்கப்படுவது தவறானதாகும். அது பௌத்த சிங்கள இனவாதத்திற்கு நிகரான மேலாதிக்கவாதமாகும்.
மேல்குறிப்பிட்டு சமூகங்கள் ஒன்றோ பலவோ இணைந்து தேசமாக அமைய முடியும். வரலாற்று எதாhத்த நிலைமைகளே அதனை தீர்மானிக்கும். நிர்ப்பந்தமான எதனையும் செய்ய முடியாது. அது சுயநிர்ணய உரிமையின் அடிப்படைகளுக்கே எதிரானது
தற்குறிகள், அகங்காரிகள் ஜனநாயக விரோதமான முறையில் சுயநிர்ணயம், தேசம் பற்றி பேசுகிறார்கள். அது தமது ஏகபோம் என்கிறார்கள்.
சுயநிர்ணம், தேசம் என்பதெல்லாம் ஜனநாயக கோரிக்கைகளே. ஜனநாயக விரோத நிலைப்பாடுகளுக்கு அது எதிரானது.
சுயநிர்ண உரிமை என்பது ஒரு குறிப்பிட்ட வரைவிலக்கணத்துக்குள் அடங்குவதாக இல்லை. அது கால இயக்கத்தில் அது மேலும் செழுமைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு நாட்டிற்குள் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதும் சுயநிர்ணய உரிமைக்கான இயக்கவியல் செயற்பாடே.
அது இலங்கையில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அனைத்துடனும். சம்பந்தப்பட்டது.
வடக்கு கிழக்கு அல்லது கிழக்கு, அல்லது யாழ்ப்பாணம் என்பன பிரிந்து போக வேண்டுமென்றால் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் தென்பகுதியில் வாழும் தமிழர்கள் என்ன செய்வது?
இங்குதான் யாழ்ப்பாணியத்தின் போலி முகத்திரை கிழிகிறது. அது இது பற்றியெல்லாம் பேசுவதில்லை. தீக்கோழிபோல் மண்ணில் தலை புதைத்து தன்னை மறைக்கப் பார்க்கிறது.
இனப்பிரச்சினை தீர்வு காணும் விடயத்தில் தமிழ், முஸ்லீம் மலையக மக்கள் நாம் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டுமென்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்,ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் வெளியிட்ட அறிக்கைகள் கவனத்திற்குரியவை.
இந்த யாழ் மையவாதம் அன்றாடப் பிரச்சினைகளைப் பற்றியும், நீண்டகால பிரச்சினைகளை பற்றி பேசும் போது தனக்குப் பிடிக்காததை ஜீரணமாகாததை தந்திரமாக தவிர்த்து விடும்.
மக்களின் மீள்குடியேற்றம் பற்றி பேசும் போது வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லீம் மக்களை பற்றி இது பேசுவதில்லை. இதேபோல் வடக்கு கிழக்கு இணைப்புப் பற்றி பேசும் போது கிழக்கில் பாரம்பரியமாக வாழும் முஸ்லீம்கள் கிழக்கின் பிரதேச உணர்வுகள் பற்றி பேசுவதில்லை.
இரண்டு சொற்கள் இங்கு சிலவேளை பாவிக்கப்படும் தமிழ் பேசும் அல்லது “கையாள்வது” . இவற்றை நாங்களும் கையாண்டு கொண்டிருக்கிறோம். இச் சொற்களின் அர்த்தம் புரிய வேண்டும். தமிழ் பேசும் என்பதைவிட தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் தம்மை முஸ்லீம்கள் என்றே அடையாளப்படுத்த விரும்புகிறார்கள். மலையகத்தவர்கள் தம்மை மலையகத் தமிழர்கள் அல்லது இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று அடையாளப்படுத்த விரும்புகிறார்கள். அதிலேதும் தவறு கிடையாது. அது அவர்களின் பாதுகாப்பு உணர்விலிருந்து வெளிவருகிறது.
கையாள்வது என்ற சொல் பாவிப்பது அல்லது ஆட்டுவிப்பது அல்லது கட்டுப்படுத்துவது என்ற அர்த்தத்தில் வரும். இதில் புலி பாசிசத்தின் கூறுகள் தொக்கி நிற்கின்றன. எனவே உதிரிகளோ தனி மனிதர்களோ வௌ;வேறு சமூகக் குழுக்களோ ஒரு சமத்துவமான நிலையில் இருந்துதான் விடயங்களை பேச முடியும். இதில் யாரும் யாருக்கும் உத்தரவு போடவும் முடியாது பயன்படுத்தவும் முடியாது.
பௌத்த சிங்கள பேரினவாதம் தமிழர்களையும், முஸ்லீம்களையும், மலையக மக்களையும் அடிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டுமென்று சதா காலமும் சிந்திக்கின்றது. புலிச்சாயலுடன் கூடிய யாழ் மேலாதிக்கவாதம் தனது வரட்டு பிடிவாதத்தை எல்லா சிறுபான்மை சமூகங்கள் மீதும் எல்லா தனித்துவ அடையாளங்கள் மீதும் திணிக்க முற்படுகிறது.
இது எதுவும் இல்லாமல் ஒரு அமரத்துவ நிலையில் இருந்து விடயங்களை பரிமாறிக்கொள்வதற்கான பக்குவம் எல்லாத் தரப்பிலும் உருவாக வேண்டும்.
கற்பு நிலையென்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அதனை பொதுவில் வைப்போம். – பாரதியார்



6:14 PM
Jana Master
0 கருத்துரைகள்:
Post a Comment