Saturday, November 20, 2010

கலாநிதி சி. சிவசேகரத்துடன் ஒரு உரையாடல் -ஜீவமுரளி



தேசம், மொழி, சாதி, பால், சிறூபான்மையினரின் உரிமைகள் சார்ந்த அரசியற் போராட்டங்களும், அவர்களின் அடையாள அரசியல் போராட்டங்களும் இறுதியில் தோல்வியைத் தழுவிக் கொள்கின்றன என்ற வாதங்களும், அவை தழுவிய உபதேசங்களும் இன்று தொடர்ச்சியாக வலியுறுத்தப் பட்டுக்கொண்டு வருகின்றன. இவை தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் என்று ஏற்கனவே எங்களுக்குத் தெரியும் என முன்முடிவுகளை அன்று சொன்னவர்களும், இன்று சொல்பவர்களும் பாலஸ்தீனத்தையும், குர்திஸ்தானையும், முள்ளிவாய்க்காலையும் உதாரணங்களாக மீண்டும் வலியுறுத்துகின்றனர். தேசம், அடையாளங்கள் சார்ந்த போரட்டங்களின் தோல்வி என்பன ஏகாதிபத்தியங்களினதும், வல்லரசுகளினதும் சதி என ஒற்றை வரியில் விளங்கப்படுத்தப் படுவனவாயும், ஒற்றைவரியில் விளங்கப்படவேண்டிய சூத்திரமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

இந்த ஒற்றை வரி விளக்கங்கள் இன்றுள்ள ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் விளிம்பு நிலை மக்களின் போராட்டங்களையும், பெண்களின் போராட்டங்களையும் அவர்களின் அரசியல் அபிலாசைகளையும் விளங்கிக்கொள்ள போதுமானவையா? என்ற கேள்வி என்னைக் கேள்விமேல் கேள்விகளை கேட்க வைக்கின்றன. எனது முதலாவது கேள்விக்கும் அதனைத் தொடந்து வருகின்ற நூற்றி ஓராவது கேள்விக்கும் கிடைக்கும் பதில் ஒரே பதிலாகவும், ஒற்றைவரிப் பதிலாகவுமே இருக்கின்றது. இவை எல்லாம் ஏகாதிபத்தியத்தின் சதி வர்க்கப்போராட்டமும் வர்க்கவிடுதலையுமே எல்லாவற்றிற்குமான சர்வரோக நிவாரணி என்பதே அந்தப்பதிலாக பல முனைகளிலிருந்தும் உபதேசங்களாக வந்து விழுகின்றன
உனது சாதியையும், உனது மனைவியையும், உனது காதலியையும், உனதுவீட்டுப் பெண்களையும், அண்டைவீட்டுப் பெண்களையும் தவிர ஏனையவை எல்லாவற்றையும் சந்தேகம் கொள்க என்றுதான், மாக்ஸின் “எல்லாவற்றையுமே சந்தேகம் கொள்“ என்ற வரிகளைப்புரிந்து வைத்திருக்கிறேன். இந்தப்புரிதலின் தொடர்ச்சியாகவே வரலாறு என்பது மக்களின் போரட்டங்கள் என்ற கோட்பாட்டையும் விளங்கி வைத்திருக்கிறேன். இந்தப் புரிதல்கள் ஒவ்வொன்றும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் பெண்களினதும் போராட்டங்களை விளக்கங்கிக்கொள்ள போதுமானவையாகத் தோன்றவில்லை.

அடையாளங்களினதும், தேசியவாதப் போராட்டங்களினதும் தோல்வி ஏகாதிபத்தியத்தின் சதி என்ற கோட்பாட்டையும், வர்க்கவிடுதலையே முடிந்த முடிவு என்ற ஒற்றை வரி சர்வரோக நிவாரணிக் கோட்பாட்டையும் தலித் போராட்டங்களுடனும் பெண்ணியப் போராட்டங்களுடனும் தொடர்புபடுத்தி ஒப்பீட்டளவில் முடிவுகளுக்கு வரலாமா என நான் குழம்பிக்கொண்டிருக்கும் பொழுது தான் கலாநிதி சி.சிவசேகரத்தின் "தொடரவேண்டிய போராட்டம்" என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அதைப் படித்தபின் தாறுமாறாக் குளம்பிப்போய்விட்டேன். தூக்கமற்ற இரவுகளும் ஒளியே அற்ற ஐரோப்பிய பகல்பொழுதும் என்னை கலாநிதி சிவசேகரத்துடன் ஒரு உரையாடலை செய்யத் தூண்டின. அந்த உரையாடலுக்காக தோழர்கள், மாக்ஸ், லெனின், மாஓ, அம்பேத்கார், ஈ வே ராமசாமி மற்றும் புகலிடங்களிலுள்ள மாக்சிச லெனினிய பற்றாளர்களையும், தமிழ்நாட்டிலிருந்து புதிய காலாச்சார ஜனநாயகக்காரர்களையும், வினவு டொட் கொம்மையும் அழைத்திருந்தேன். எல்லோரும் சமூகமளித்திருந்தார்கள் கூடவே ரோசாலுக்சம்பேர்க், சி மோன் தி பு வா மற்றும் இன்றுள்ள பெண்ணியவாதிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தேன். நீர் உம்மட வேலையைப் பாரும் எங்களுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்று தோழமையுடன் மறுத்து விட்டார்கள். என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்கு சொல்வதை விட்டு நீர் என்ன செய்யவேண்டும் என லெனினுக்கு போய் சொல்லும் அல்லது கேட்டுத் தெரிந்துகொள்ளும் என ஒரே குரலில் சொன்னார்கள். நான் முதலில் சங்கடப்பட்டாலும் அவர்கள் சொல்லுவதிலுள்ள நியாயத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இதைப்பற்றி வெளியே மூச்சு விடவில்லை. இதை நம் தோழர்களுக்குச் சொன்னால் மானமும் அவமானமும் சேர்ந்து உரையாடலை திசைதிருப்பி ஏகாதிபத்தியத்தின் சதி வரைக்கும் கொண்டு சென்றுவிடும் என்ற அச்ச உணர்வு காரணமாக தவிர்த்துக்கொண்டேன்.
ஒவ்வொரு தனிநபரினதும், அவரவருக்கே உரிய பாதுகாப்புக் காரணங்கள் கருதி காற்றும், ஒளியும் புகமுடியாத ஒரு அறையில் அருகருகே வட்டமாக இலகுவில் அறுத்தெடுத்துவிட முடியாத இரும்புச்சங்கிலி பிணைச்சல்கள் போல் அமர்ந்திருந்தோம். இந்த அறை ஒரு சிறையை ஒத்திருந்தது. பொலிஸ்காரர்கள் ஒருமனிதனைக் கைது செய்து முன் விசாரணைக்காக தள்ளி பூட்டிவிட்டுப் போகும் அறையைப்போல் தோற்றமளித்தது. அந்த இருட்டு அறையின் ஒரு பக்கச்சுவரில் தடித்த சிறுகண்ணாடி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. மங்கிய ஒளி அந்த தடித்த கண்ணாடி ஊடாக எட்டிப்பார்த்தது.

யாருடைய முகங்களும் தெளிவாக தெரியவில்லையாயினும் அவர்களுடைய முகவெட்டு குரல்கள் அசைவுகள் தாடி நடை உடை பாவனை என்பனவற்றை வைத்து அடையாளம் காணமுடிந்தது. தோழர் சிவசேகரத்தின் தொடர வேண்டிய போராட்டத்தின் கட்டுரை மீதான உரையாடலும் விவாதமும் தொடங்குவதற்கு முன் கூட்டத்தை ஒழுங்கு படுத்தியவர் என்ற நல்லபிப்பிராயத்தில் அதை நெறிப்படுத்த ஒரு தலைமை வேண்டுமென கூடியிருந்தவர்கள் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். எட கடவுளே! ஏன் எனக்கு இப்படி ஒரு சோதனை என நான் தலையில் கைவைத்த பொழுது பின் கதிரையில் இருந்த தோழர் என் முதுகில் தட்டி தோழரே நான் ஒரு வார்த்தை பேசலாமா என்று கேட்டார். நான் என் தலையிலிருந்த கையை எடுத்து ஓம் ஓம் சொல்லுங்க தோழரே என்றேன்.

பிரியத்துக்கும் அன்புக்குமுரிய தோழர்களே! வாழ்த்துகிறேன் உங்களை. கலாநிதி சிவசேகரத்தின் கட்டுரை சாதி முறைபற்றியும், தாழ்த்தப்பட்டவர்கள் பற்றியும், பெண்களைப்பற்றியும் வர்க்க விடுதலை பற்றியும் பேசுகிறது. ஆனால் இக்கட்டுரையில் தலித்மக்கள் பற்றியும், இந்துமதத்தைபற்றியும், சாதியமைப்பை பற்றியும் ஆய்வுகளையும் போராட்டங்களையும் செய்தவரான பாபாசாகேப் அம்பேத்கர் காணாமல் போய்விட்டார். இது தோழர் சிவசேகரத்தினது தனிப்பெரும் திறமை. ஆகவே அம்பேத்கர் இந்த உரையாடலுக்கு தலைமை தாங்குவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன் என்றார். கூட்டத்தில் சலசலப்பும் கூச்சலும் ஏற்பட்டது.

தோழர்களே அமைதிகாத்து உரையாடலை தொடங்குவதற்கு அனுமதியுங்கள் என்றேன்.
முடியாது அப்பேத்கர் தலைமை தாங்க முடியாது அவர் ஏகாதிபத்தியத்தின் அடிவருடி. எங்களின் ஆசான்கள் மூவரை இங்கு அழைத்து விட்டு அவர்களை அவமானப்படுத்துகிறீர் தோழரே என்ற குரல்கள் நான்கு பக்கங்களிலிருந்தும் வந்தன.

என் தலையிலேயே நானே மண்ணள்ளிப் போடுகிறேனோ என்று ஒருகணம் ஆடிப்போய்விட்டேன். இருந்தாலும் சுதாகரித்துக்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்ற பொருள்பட லெனினை கண்களால் பார்த்து கேள்வி கேட்டேன். அவர் கண்ணைச்சிமிட்டி ஒரு கோபம் கலந்த புன்முறுவல்மட்டும் செய்தார்.
ஒரு கோபம் கலந்த புன்முறுவலிருந்து நான் என்ன செய்யவேண்டும் என எப்படி விளங்கிக்கொள்வது?

நானும் பதிலுக்கு புன்முறுவல் கலந்த கோபத்துடன் தோழர்கள் லெனின் மாக்ஸ் மாஓ அவர்களைப்பார்த்து

தோழர் லெனின் அவர்களே தோழர் மாக்ஸ் அவர்களே தோழர் மாஓ அவர்களே நீங்கள் யாராவது ஒருவர் இந்த உரையாடலுக்கு தலைமை தாங்குகிறீர்களா? என்று கேட்டேன்

மார்க்ஸ் கொஞ்சம் தயக்கத்துடன் எழுந்தார்.
அது பொருத்தமாக இருக்காது தோழர்களே ஏகாதிபத்தியம், உலகமயமாக்கம் என் ஜீ ஓக்கள் இவைபற்றி எனக்கோ லெனினுக்கோ எந்த அனுபவும் இல்லை. தலித் போராட்டங்கள் பற்றி எதுவுமே எங்களுக்கு தெரியாது. ஆகவே நாங்கள் உங்களின் உரையாடலை கவனமாகக் கேட்கிறோம். அதிலிருந்து நாங்கள் கற்றுக்கொள் ஆவலாயிருக்கிறோம் என்று மறுத்துவிட்டார்கள்.

கூட்டத்திலிருந்து கூச்சலும் சலசலப்பும் முட்டிமோதி எழுந்து வந்தன.
ஏய் வாபஸ் வாங்கு!. வாபஸ் வாங்கு! என்ற கோசம் என் காதை கிழித்தது. நான் திகைத்துப் போய் அந்த அறையின் சிறிய தடித்த கண்ணாடிக்குள்ளால் உட்புகும் மங்கிய ஒளியின் உதவியுடன் வாபஸ் வாங்கு என்று கோசமிடுபவர்களைப்பார்த்து,
ஏன் தோழர்களே எதை வாபஸ் வாங்கச் சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.
எங்கள் மாமேதைகளையும் ஆசான்களையும் பார்த்து தோழர் என்று விளித்ததை வாபஸ் வாங்கு என்றனர். நீர் அவர்களை அவதூறு செய்கிறீர் என்றனர். அப்பொழுது தான், நான் என் தலையிலும், வாபஸ் வாங்கச் சொன்னவர்கள் தங்கள் தலையிலும் அவரவர் அளவிற்கேற்ப மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறோம் என்பதை உணரமுடிந்தது.

தோழர்களே இதைத்தான் கலாநிதி சிவசேகரம் இக்கட்டுரையில் “வெறுங் கோசங்களாலும் தனிப்பட்ட அவதூறுகளாலும் நோர்மையற்ற விவாதங்களாலும் உண்மைகளை மூடிமறைப்பது என்றென்றைக்கும் இயலுமானதல்ல என அழகாக சொல்லியிருக்கிறார் என்றேன்.
கூச்சலும் சலசலப்பும் கூடவே புளுக்கமும் அந்த மங்கிய ஒளிநிறைந்த அறையைச் சூழ்ந்து கொண்டு உரையாடலை தொடரவிடாமல் தடுத்தது.

இந்த சூழலின் ஆரோக்கியமற்ற தன்மையை புரிந்து கொண்ட மாஓ தோழர்களே அமைதி காத்து உரையாடலை தொடருங்கள். நூறு பூக்கள் மலரட்டும் தோழர்களே என்றபின்தான் அமைதி நிலவியது.

மறுபடியும் மார்க்ஸ் எழுந்தார். தோழர்களே! மதம் என்பது அபின். இந்துத்துவத்துவத்தின் கொடுமைகளையும், சாதிஒடுக்குமுறையின் முழுப்பரிமாணத்தையும் அனுபவரீதியாக கண்டவர்கள் என்ற அடிப்படையில் அப்பேத்கர் அல்லது பெரியார் தலைமை தாங்கவேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

அதற்கு நான் எழுந்து தோழர் மாக்ஸ் அவர்களே இந்தக்கட்டுரையில் கலாநிதி சிவசேகரம் பெரியார் எனப்படும் ஈ வே ராமசாமி சாதிமுறையை மனமார வெறுத்து நிராகரித்தாலும், அவர் சாதி விரோதநிலைப்பாட்டில் குறைபாடுகள் இருந்திருக்கலாம் என்று சந்தேகத்தை முன்வைத்திருக்கின்றார். சாதி முறையை மனமாற வெறுத்த பெரியார் எப்படி சாதி விரோத நிலைப்பாட்டில் அரசியல் செய்திருக்கலாம் என்ற கேள்வி இங்கே எழுப்பப்படுகிறது. பெரியார் ஒரு சாதியை விரோதித்தார் அவ்வளவுதான் அவரின் அரசியல் அதற்கு மேல் ஒன்றுமில்லை என்பதில் சாதிவிரோத அரசியல் என்ற சொல் இங்கே தொக்கி நிற்கின்றது.

எனவே எதிலுமே சந்தேகம் கொள் என்ற உங்களின் கோட்பாட்டை இங்கே தோழர் சிவசேகரம் கொண்டிருக்கிறார். ஆகவே தோழர் அம்பேத்கர் தலைமை தாங்குவது பொருத்தாமாகவிருக்கும். இக்கட்டுரையில் தோழர் அம்பேத்கரை தோழர் சிவசேகரம் அவர்கள் வசதியாக மறந்து விட்டார். இது கூட தலைமை தாங்குவற்கான நியாயத்தை வலியுறுத்துகிறது என்றேன்.

யார் தலைமை தாங்கினால் என்ன தோழர்களே! உரையாடல்கள் தொடர்ந்து நிகழ்த்தப்பட வேண்டும் என மார்க்ஸ் கூறிவிட்டு தனது இடத்தில் அமர்ந்துகொண்டார்.
இந்தக்காரணத்திற்காகத்தான் நான் ஸ்ராலினையும், போல்பாட்டையும், பிரபாகரனையும், மகிந்தவையும் இந்த உரையாடலுக்கு அழைக்கவில்லை என சொல்ல வாயெடுத்தேன். தவிர்க்கமுடியாமல் வார்த்தைகளை மென்று விழுங்கிவிட்டேன்.

உரையாடல்கள் தொடர்ந்து நிகழ்த்தப்பட வேண்டும் என்ற மார்க்ஸின் வேண்டுதலுக்கும் பண்புக்கும் கட்டுப்பட்டு அம்பேத்கர் தலைமை தாங்குவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
தோழர் சிவசேகரத்தின் கட்டுரையை வாசிக்க அதன் மீதான உரையாடலும் விவாதமும் தொடங்கியது.

சாதி முறை என்பது தென்னாசியாவுக்கே உரிய சாபக்கேடு. இந்து தருமம் என்கின்ற பெயரில் அதற்கு தெய்வங்களின் ஆசி வழங்கப்பட்டுள்ளது எனினும் சாதியம் என்பது இந்து மதங்களால் உருவாக்கப்பட்டதல்ல. அவற்றால் அது நியாப்படுத்தப்பட்டது ஏற்கனவே இருந்து வந்த சாதிமுறைகளுடன் ஆரியவருணமுறை இணைந்தே இந்தியாவின் இறுக்கமான சாதியமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் வலுவானவை.

நான் மேலுள்ள கட்டுரையின் முதல்பந்தியை வாசித்த பொழுது தலைமைதாங்கிய அம்பேத்கர் தனது தலையை நான்கு முறை மேசையில் அடித்துக்கொண்டார். வர்ணஅமைப்பு முறையே சாதியமைப்பின் தாய் என தனது கைகளால் மீண்டும் நான்கு முறை மேசையில் ஓங்கி அறைந்தார்.

கூட்டத்திலிருந்து தோழர் ஒருவர் ஆவேசத்துடன் எழும்பினார் பாபாசாகேப் உங்களை வாழ்த்துகிறேன்.

கலாநிதி சிவசேகரத்தின் கூற்றுப்படி இந்துமதத்தின் முன்னர் சாதிகள் இருந்தனவென ஊகிக்க முடிகிறது. சாதி உருவாக்கத்துக்கும் இந்துமதத்துக்கும் தொடர்பில்லைத்தானே தோழரே? ஆகவே சாதி உருவாக்கம் என்ற சர்ச்சையில் இந்து மதம் குற்றமற்றது தானே தோழரே? இதைத்தான் கலாநிதி சிவசேகரம் ஒற்றைப்பந்தியில் பூடகமாகவும், விபரமாகவும் சொல்லிலிருக்கிறர் என்றார்.

அம்பேத்கர் இருக்கையை விட்டு எழுந்து நின்றார். அவரின் நூற் தொகுதி ஆறாவதை புரட்டிப் புரட்டிப் பார்த்த்தார்.

நான் எழுந்து நின்று தோழரே குறுக்கிடுவற்கு மன்னிக்கவும். ஆதியும் அந்தமுமில்லாதது இந்து மதம் என்று சொல்கிறார்களே அப்படியானால் ஆதிக்கும் அந்தத்துக்கும் இடைநடுவில்தானே சாதி தோன்றியிருக்க வேண்டும் அல்லது கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய தமிழர்கள் தான் சாதியை தோற்றுவித்திருக்கவேண்டும்...

கூட்டத்திலிருந்து "ஏய் நீ திரிபுவாதி, எதிர்புரட்சிவாதியே டேய் நீ தமிழ் துரோகியடா சென்னதை வாபஸ் வாங்கடா" என கூச்சல்கள் எழுந்தன.

"நரம்பில்லாத நாக்கால நீர் கண்டபடி கதைக்கேலாது கதைக்கிறதை அளந்து கதையும்" என்ற குரல் ஒன்று பின்கதிரையிலிருந்து வந்தது.

சூழ்நிலையை புரிந்து கொண்ட லெனின் மேசையின் மீது துள்ளி ஏறினார் "அமைதி தோழர்களே அமைதி...!"
கூட்டத்தில் அமைதி நிலவியது.
தோழர்களே திரிபுவாதம், எதிர்ப்புரட்சிவாதம் என்ற சொற்பதங்ளை நான் மீள் பரிசிலணை செய்து கொண்டிருக்கிறேன். அது பாவனைக்கு உகந்தல்ல என்ற கருத்து உலாவுகிறது
ஆகவே இதை இங்கு தவிர்த்துக் கொள்வது உரையாடலை தொடர உதவும் நன்றி தோழர்களே என்றபடி மேசையிலிருந்து இறங்கி தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

மாஓ தனது தொப்பியைக் கழற்றி லெனினைப்பார்த்து மரியாதை செலுத்தியபடியே நூறு பூக்கள் மலரட்டுமே என்றார்.

அம்பேத்கர் தனது கட்டுரைத்தொகுதி ஆறாவதைப் புரட்டிப்பார்த்தபின் தளதளத்த குரலில் பேசத்தொடங்கினார்
தோழர்களே நான் இந்துமதம் பற்றியும் அதன் சமூக அமைப்பு அதன் அடையாளங்கள் கோட்பாடுகள் பற்றிம், மனுவின் வர்ணக்கோட்பாடும் சாதிஅமைப்பும் அதன் படிநிலைகள் பற்றியும், ஆய்வுகளையும் கட்டுரைகளையும் செய்திருக்கிறேன் என்னால் கூட சாதி அமைப்பு முறை இந்துமதத்தால் உருவாக்கப்படவில்லை என ஒற்றை வரியில் சொல்லிவிட முடியவில்லை. கலாநிதி சிவசேகரம் அவர்கள் துணிந்து இக்கருத்தை முன் வைப்பதால் அதற்குள் ஏதோ ஒன்று இருக்கின்றது என்று மட்டும் தோன்றுகிறது. ஆனால் தோழர்களே ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன் மனுவின் வருணப் படிநிலையே சாதியமைப்பின் தாய் இந்த சொற்பதத்திற்காக நான் பெண்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சாதியமைப்பின் மூலவராக மனு இல்லையென்றாலும் அதன் தோற்றத்திற்கான மூலவராக மனு இருந்திருக்கின்றார் என உறுதியாகச் சொல்கிறேன் என்றார்.

அப்பொழுது கூட்டத்திலிருந்த தோழர் ஒருவர் மனு எந்த மதத்தை சேர்தவர் தோழரே என்ற கேள்வியை எழுப்பினார்.

தோழர் அம்பேத்கர் அதிர்ச்சி தாங்காமல் வாய்விட்டு சிரிக்கத் தொடங்கினார். பெரியார் எட வெங்காயமே என்றபடி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். அறையே சிரிப்பொலியால் அதிர்ந்தது. மார்க்ஸ் லெனின் மாஓ மூவரும் ஒருவரையொருவர் பரிதாபமாக பார்த்துக்கொண்டார்கள். அவர்களால் இந்த நகைச் சுவையை அனுபவிக்கமுடியவில்லையே என நான் வருந்தினேன்.
தொடர வேண்டிய போராட்டம் என்று சீரியசாக எழுதப்பட வேண்டிய கட்டுரையை கலாநிதி சிவசேகரம் அவர்கள் நகைச்சுவையாக எழுதிவிட்டார். ஆகவே அவரின் கட்டுரைகளிருந்து சில மேற்கொள்களை வாசித்து உரையாடலை தொடர விரும்புகிறேன் என்றபடி அம்பேத்கரை பார்த்தேன்.

ஆகட்டும் தோழரே என்றபடி தனது தொகுப்பிலுள்ள "இந்து மதத்தின் அடையாளங்கள்" என்ற எழுதி முடிக்கப்படாத கடைசிக் கட்டுரையை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
நான் எனது குற்றப்பத்திரிகையை வாசிக்கத் தொடங்கினேன்

முதலாவதாக பக்தி இயக்கக்காலத்தில் ராமானுஜர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பூணூல் அணிவித்து அவர்களை பிராமணராக்கி புரட்சிசெய்ய முயன்றார். இருப்பினும் இந்து என்ற அடையாளத்தை ஏற்றுக்கொண்ட எந்த மதத்தாலும் சாதியைத் தாண்டமுடியவில்லை என்கிறார் கலாநிதி சிவசேகரம். தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி முன்முடிவகளுடன் தனது கட்டுரைக்கான இலக்கை அடைவதற்காக ஒரு முரண்நகையான வாதத்தை இங்கே வைக்கிறார். கலாநிதி சிவசேகரத்தின் கட்டுரையின் நகைச்சுவையே இங்கிருந்துதான் தொடங்குகின்றது.

இண்டாவதாக நவீன உற்பத்திமுறை நகரங்களின் பெருக்கமும் தொழிலாளர் வர்க்கத்தின் உருவாக்கமும் சாதி ஏற்றத்தாழ்வின் நீக்கத்திற்குச் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கியதென்றும் எனினும் இந்த புதிய சூழல் சாதியபோராட்டங்களை வெற்றி பெறச்செய்ததென்றும், இருப்பினும் சாதிமுறையை தகர்க்க முடியவிலையே எனவும் ஆதங்கப்படுகிறார்.

வாஸ்தவம் தான் தோழர்களே!
மேலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் அஞ்சாது போராடினர்கள் என்றும் போரட்டத்தின் வெற்றிகளுக்கு பின்னும்
அவர்களின் குடிசைகள் தீ மூட்டப்பட்டன
கலப்புத்திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டன
கல்வி கற்று பதவிகள் பெற்றமைக்காக குடும்பத்தோடு கொல்லப்பட்டனர்
ஊராட்சிகட்கு தெரிவு செய்யப்பட்டோர் பதவி ஏற்கவியலாதவாறு வன்முறைகள் மேற்கொள்ளப் பட்டன என மீண்டும் ஆதங்கப்படுகிறார்.

இந்த ஆதங்கத்தின் பின் இப்படிப்பட்ட தீய செயல்களை செய்வோர் யார்? வன்முறைகளைச் செய்வோர் யார் என்ற கேள்வி கலாநிதி சிவசேகரம் அவர்களுக்கு எழுகின்றது. அந்தக்கேள்விக்கு பதிலாக நரேந்திர மோடியை பதிலாக முன்வைக்கின்றார். நரேந்திரமோடி உயர்சாதியை சேர்ந்தவர் அல்ல என்றும் கண்டுபிடிக்கின்றார்.

குஜராத் படுகொலைகளை வன்முறையாகவே மட்டும் காணும் கலாநிதி சிவசேகரம் அவர்கள், அந்தக் கலவரங்களின் பொழுது தாழ்த்தப்பட்ட சாதியினர் முஸ்லீம்கள் மற்றும் பழங்குடியினரை கொன்றது உயர்சாதிப்பிராமணரோ அல்லது பிராமணருக்கு அடுத்த நிலையில் உள்ள உயர்சாதியினராரோ அல்ல. அது தாழ்ந்தவர்களால் தாழ்த்தப்பட்டவர்கள் மீது செய்யப்பட்ட வன்முறை என்ற முடிவை கண்டடைகிறார்.

தோழாகளே தலைவர் அவர்களே நன்றாகக் கவனியுங்கள் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களே தாழ்த்தப்படடவர் மீது வன்முறையை செய்தனர் என தெளிவாக குறிப்பிடுகிறார்.
இந்த இடத்தில் தாமிரபரணி ஆத்தங்கரையில் தலித்மக்களை கொன்றது போலிஸ்காரர்களுக்கு உள்ளேயே உள்ள உயர்குலப் போலிஸ்காரர்கள் அல்ல தலித்சமூகத்தை சேர்ந்த தாழ்ந்த போலிஸ்காரர்கள் என்ற உண்மையைச் சொல்வதற்கு கலாநிதி சிவசேகரம் அவர்கள் மறந்துவிட்டார்கள் என்பதை தோழர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காந்தியை ஏன் தலித்துக்கள் நம்பக்கூடாது என பாபாசாகேப் அம்போத்கர் அவர்கள் ஒரு கட்டுரையையும் எழதியிருக்கிறார் . என்பதையும் இந்த இடத்தில் தோழர்களுக்கு நினைவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

மூன்றாவதாக தோழர்களே!

ஒடுக்கப்படுவோர் தமது நிலைபற்றி போதிய தெளிவும் அறிவும் இல்லதவர்களாகவும் தாம் ஒடுக்கப்படுவதை நியாப்படுத்துபவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் கல்விமற்றும்; பொருளாதார ரீதியாக மேன்நிலையாக்கம் அடைந்தாலும் கூட உயர்சாதியினருடன் சேந்து கொண்டு தாழ்த்ப்பட்டவர்களை ஒடுக்க துணைபோகின்றனர். இருப்பினும் உயர்சாதியிலுள்ளோர் பலரும் தாழ்த்தப்பட்டடோரின் போராட்டங்களில் முன்வரிசையில் நின்று போராடினர் ஆகவே சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை பாதிக்கப்பட்டவர்களே முன்னெடுக்க வேண்டும் என்ற பார்வை தவறானது நாங்கள் நேச சக்திகளை இழந்துவிடக் கூடாது மாறாக இன்று தலித்தியம் பெண்ணியம் பின்நவீனத்துவம் என ஏகாதிபத்தியங்கள் என் ஜீ ஓக்கள் மூலம் சதிசெய்கின்றன என்றும் குறிப்பிடுகின்றார் கலாநிதி சிவசேகரம்
அப்பெழுது தோழர் வினவு டொட் கொம் எழுந்தார்
வாழ்க தோழர் சிவசேகரம்.
பெண்விடுதலை என்ற பெயரில் பெண்கள் பத்துப்பேருடன் படுக்க அலைகிறார்கள். இது ஏகாதிபத்தியத்தின் சதி. வர்க்ப் போராட்டத்துக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியது. பெண்ணியவாதிகள் தினவெடுத்து கட்டற்ற பாலுறவுக்காக அலைகிறார்கள். இதை அனுமதிக்க முடியாது என சொல்லி முடிக்க ஒவ்வொரு குரல்களாக மெல்ல மெல்ல மேலே எழுந்தன. எழுந்த குரல்களின் அதிர்வில் பரிவு நிலை ஏற்பட்டது. வாசற்கதவு தகர்ந்தது வெளிச்சம் பரவியது.

வாஸ்தவம் தான் தோழர்களே! என ஒரு குரல் அசரீதியாக ஒலித்தது. அறையின் வாசற்கதவை உடைத்துக்கொண்டு ராமனுஜர் ஒரு கையில் பூத்தட்டுடனும் அதன் நடுவே அலங்கரிக்கப்பட்ட விரலளவேயான லிங்கத்துடனும் மறு கை நிறைய பூணுலுடனும் உள்ளே வந்தார். வாசற்கதவின் ஊடாக சூரியஒளி அறையை நிறைத்தது குங்கிலியப் புகை மயக்கத்தை தந்தது. மணியோசைகள் கர்ண கடுரமாக ஒலித்தன. உரையாடலை கலைந்து ராமானுஜர் மாமேதைகளுக்கு அருகே சென்றார். அவர்கள் மூவருக்கும் பூணூல் அணிவித்தார். பின் மிச்சமுள்ள பூணூலை அவர்களின் கைகளில் திணித்தார். தோழர்கள் மாமேதைகளிடம் பூணூலை பெற்றுக்கொண்டனர். அம்பேத்கரும் ஈ வே ராமசாமியும் பூணூலை வாங்கி கழுத்தில் சுருக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். பூணூல் மாக்சிஸ்டுகளும் பூணூல் லெனினிஸ்டுகளும் புரட்சியை வென்றெடுக்கவும், ஏகாதிபத்தியத்தின் சதியை குங்கிலியப் புகையால் முறியடிக்கவும் வர்க்கப்போராட்டத்தை லிங்கங்களைக் கொண்டு வெற்றி கொள்ளவும் ராமானுஜர் ஒரு யாகத்தீயை அங்கே வளர்த்தார். தீ நின்று பற்றி மேலெழுந்து எரிந்தது. குங்கிலியப் புகையும் மணி ஓசைகளும் வாசற்கதவினைத் தாண்டி காற்றினிற் கலந்தன.
----------------------------------------------------------------------------------

மேலே உள்ள எனது உரையாடலை குறைந்தபட்சம் புரிந்துகொள்ள சில குறிப்புக்களை வாசகர்களுக்கு தந்துதவுகிறேன். தோழர் கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் இருபத்தைதாவது ஆண்டு நினைவு மலரில் எனது தந்தையார் ஒரு குறிப்பை எழுதியுள்ளார். அதை இரசித்து பலதடவைகள் வாசித்திருக்கிறேன்.

எனது தந்தையார் ஒரு தமிழாசிரியர். கடவுள் நம்பிக்கையற்றவர் வயது எழபத்தைந்து ஆகிறது ஆறு பிள்ளைகளின் தந்தை.

சாதியப் போராட்டங்களில் முன்நின்றவர் கம்யூனிட் கார்த்திகேசனின் கட்சித்தோழர் தோழர் சண்முகதாசனை கண்டபடி விமர்சித்தது எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றது. அவர் ஒரு நாள் பீக்கிங் தமிழ்வானொலி செய்தியைக் கேட்டு அழுதுகொண்டிருந்தார். அவர் அழுவதை பார்த்து தாங்கமுடியாமல் அம்மாவிடம் அப்பா ஏன் அழுகிறார் எனக் கேட்டேன். அம்மா சிரித்தபடியே கொப்பாவின்ரை கடவுள் செத்துப்போய்விட்டாராம். அவருக்கு விசர் பிடிச்சிட்டுது என்றார். யார் என்று கேட்டேன். அம்மா மாஓவின் படத்தைக்காட்டினார்.
மார்க்ஸ் லெனின் மாஓ ஸ்ராலின் ஆகியோரது பெரிய பிரேம் போட்ட படங்கள் எங்கள் வீட்டுச் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும். அவர் கட்சிக் கூட்டங்களுக்கு போகும் போது அம்மா கோவில் கும்பிடப் போவார். சாமி கும்பிடும் விடயம் தெரிந்தால் அப்பா கோபித்துக் கொள்வார் என்று அம்மா சொல்வார். நாங்கள் கோவில் திருவிழாக்களுக்குச் செல்வதை அவர் விரும்புவதில்லை. அவர் வெளியே போய் வீடுதிரும்ப இரவு ஒன்பது மணியாகும். அந்த இடைவெளியில் நான் சில கோயில் திருவிழாக்களை என் தாயின் அனுமதியுடன் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். சிலதடவைகள் தந்தையார்pடம் அகப்பட்டு அடிவாங்கியிருக்கிறேன். அடியாதமாடு படியாது என்பதிலும் அவருக்கு அன்று நம்பிக்கையிருந்தது. எனது பதினேழாவது வயதிற்குள் குறைந்தது ஆயிரம் அடிகைளயாவது வாங்கிக் கட்டியிருக்கிறேன். அவரை பழிவாங்குவதற்காகவே வீட்டைவிட்டு ஒடிப்போய் தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தில் சேர்ந்து கொண்டேன். அந்த பழிவாங்கலை எண்ணி இன்னமும் வருந்திக்கொண்டிருக்கிறேன்.
சீனாவிற்கு போகவேண்டும் மாஓவை சந்திக்கவேண்டும் என்ற தீராத ஆசை அவர்மனதில் இருந்தது. ஐரோப்பாவிற்கு நான் வந்து இருபத்தி இரண்டு வருடங்களாகிறது அவரை அழைத்துக் கொண்டு சீனாவுக்கு போகவேண்டுமென்ற ஆசை இன்னும் என்னைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்றுவரைக்கும் முடியவில்லை. ஆசியர் தொழிலில் இருந்து ஒய்வு பெற்றபின் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக வீட்டுத்தோட்டம் செய்து வருகிறார்.
சீனாவும் ஒரு ஏகாதிபத்திய நாடாகி விட்டது என்ற உண்மையை நான் எப்படி என் தந்தைக்கு எடுத்துரைப்பேன்?

7-5-2010
ஜீவமுரளி

0 கருத்துரைகள்:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes